சென்னை, மே 20- நாடு முழுவதும் இணைய வழியில் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி, அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று (மே 20) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், நாடு முழுவதும் சுமார் 12.4 லட்சம் மருந்தகங்கள் பங்கேற்றுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 5,000 கடைகள் உட்பட மாநிலம் முழுவதும் சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இளைய தலைமுறையை காக்க…
இணைய தளம் மூலம் வலி நிவாரணிகள் மற்றும் தூக்க மாத்திரை களை எளிதாக வாங்கி அடிமையாகும் நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
உயிர்காக்கும் மருந்துகள்: மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்கள் மற்றும் அதிகப்படியான தள்ளுபடிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். போலி மருந்து விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இணையதளம் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கலாசார சீரழிவைத் தடுக்க வேண்டும்.
அரசாணை திரும்பப் பெறல்: மின்மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.”மின்மருந்தகச் செயல்பாடுகளால் மருந்தகங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.” என்று சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
