சேலம், மே 18- பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலையையும் ரூ.50 முதல் ரூ.100 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இன்னும் ஓரிருநாளில் இவ்விலையேற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் போரின் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 7ஆம் தேதி வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.60 உயர்த்தினர். இதனால், எரிவாயு உருளை விலை சராசரியாக ரூ.1000அய் நெருங்கியது.
அதன்பின், கடந்த மே 1ஆம் தேதி 19 கிலோ வர்த்தக எரிவாயு உருளை விலையை ரூ.998 அதிகரித்தனர். இதனால், அதன் விலை ரூ.3000அய் கடந்தது. இந்நிலையில் 15.5.2026 அன்று, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 உயர்த்தினர். இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.67 ஆகவும், டீசல் ரூ.95.25 ஆகவும் அதிகரித்தது. இச்சூழலில் அடுத்தக்கட்டமாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலையையும் அதிரடியாக உயர்த்த எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், இவ்விலையேற்றத்தை இன்னும் ஓரிருநாளில் அமலுக்கு கொண்டு வர ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை சென்னையில் ரூ.928.50, சேலத்தில் ரூ.886 ஆக விற்கப்பட்டு வருகிறது. இதன்விலை ரூ.100 வரை உயரும்போது, சமையல் எரிவாயு உருளையை ரூ.1000க்கு மேல் கொடுத்து வாங்க வேண்டி வரும். இதனால், ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
