புதுடில்லி, மே 15- பெண் முதலமைச்சரின் ஆட்சியின் கீழ் இருக்கும் நாட்டின் தலைநகரான டில்லியில், பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில், நிர்பயா சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் மற்றொரு கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது.
டில்லியின் ராணி பாக் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில், இளம்பெண் ஒருவர் இரு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பேருந்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.கைதான நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்தச் சம்பவம் குறித்து அனைத்துக் கோணங்களிலும் ஆய்வு செய்து வருவதாகவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண் முதலமைச்சர் தலைமையில் டில்லி நிர்வாகம் செயல்பட்டு வரும் சூழலில், தொடர்ந்து அரங்கேறி வரும் இத்தகைய குற்றச்சம்பவங்கள் பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே மிகுந்த அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
