‘நீட்’டை எதிர்த்து நெடுங்குரல் ஒலிக்கட்டும்! தயாராகி விட்டீர்களா? தோழர்களே! மின்சாரம்

8 Min Read

‘‘தகுதி – திறமைக்கான அளவுகோலே ‘நீட்!’ டாக்டர் படிப்பு என்றால் சாதாரணமா? உயிர் காக்கும் உயர் பணி அல்லவா! அதில் தகுதி திறமை பார்த்துத் தேர்வு செய்ய வேண்டாமா? என்று ‘நாக்கில் தேன் தடவுவது போல்’ நயவஞ்சமாக வலை விரித்தனர்.

தகுதி – திறமைக்கு அளவுகோல் வெறும் மதிப்பெண் (மார்க்) தானா? கல்வியாளர்கள் இதனை ஒப்புக் கொண்டதில்லையே!

‘நீட்’ தேர்வுக்கு முன் +2 தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து டாக்டர் ஆனவர்கள் எல்லாம் தகுதியற்றவர்களா?

பச்சைத் தமிழர் காமராசர்தான் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் வகையில் கேட்டார்.

‘‘பறையரைப் படிக்க வைத்தேன் – டாக்டர் ஆனான் –  அவன் ஊசிப் போட்டு எந்தப் பிள்ளை செத்தது சொல்! பறையனைப் படிக்க வைத்தேன் – என்ஜினியர் ஆனான் – அவன் கட்டிய எந்தப் பாலம் இடிந்தது சொல்!

உன் திறமையும் எனக்குத் தெரியும், உனக்குச் சொல்லிக் கொடுத்தவன் திறமையும் எனக்குத் தெரியும். என்னை அழிக்க நினைந்தால், உன் அஸ்திவாரத்தையே அழித்து விடுவேன்’’ என்று முழக்கமிட்டாரே காமராசர்.

‘எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே!’ என்பதுதானே மனுதர்மம்.

எல்லாம் பார்ப்பனர் ஆதிக்கமயமாகிக் கிடந்த நாட்டில் பார்ப்பனரல்லாதார்,  குறிப்பாக ‘ஒடுக்கப்பட்ட மக்களும், பெண்களும் படிக்க ஆரம்பித்து விட்டனர்’ என்ற நிலையிலே, வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பார்ப்பனர் அல்லாதாரி்ன கல்விக் கண்ணைக் குத்துவதிலேயே காகப்பட்டர் பரம்பரை கண்ணும் கருத்துமாக இருந்து வந்திருக்கிறது.

1937களில் ஆச்சாரியார் சென்னை மாநில முதலமைச்ச ராக வந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடவில்லையா?

‘‘மதுவிலக்கைக் கொண்டு வந்ததால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு கட்டத்தான் பள்ளிகளை மூடினேன்’’ என்று கூறியவர் தானே – ‘‘உடம்பெல்லாம் மூளை உள்ளவர்’’ என்று பார்ப்பனர்கள் தூக்கிப் பிடிக்கும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

1952இல் மீண்டும் சென்னை மாநில முதலமைச்சராக அதே ஆச்சாரியார் வந்தபோது 6500 பள்ளிகளை இழுத்து மூடி, ‘‘அரை நேரம் படித்தால்போதும், மீதி அரை நேரம் அவரவர் அப்பன் தொழிலைச் செய்யட்டும்’’ என்று ஏற்பாடு செய்யவில்லையா?

‘‘ஆச்சாரியார் கொண்டு வந்தது தொழிற் கல்வியல்ல – குலக்கல்வியே!’’ என்று தந்தை பெரியார் எரிமலையாக வெடித்துக் கிளம்பிய நிலையில், தமிழ்நாடே அவர் தலைமையில் பொங்கி எழுந்ததன் விளைவாக ஆச்சாரியார் முதலமைச்சர் பதவியை விட்டு ஓடவில்லையா?

ஒவ்வொரு கட்டத்திலும் பார்ப்பனர்களுக்கு அதிகார வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பார்ப்பனரல்லாதாரின் கல்விக் கண்ணைக் குத்துவதற்கு கத்தி தீட்டுவதும், அதனை எதிர்த்து போராடிப் போராடி உரிமைக்களை மீட்பதும் தான் தமிழ்நாட்டின் பொது வாழ்க்கையின் வழக்கமான ஒன்று!

இப்பொழுது ஒன்றிய பிஜேபி அரசால் திணிக்கப் பட்டுள்ள ‘நீட்’ தேர்வு என்பதும் அதனுடைய நீட்சியே!

பிஜேபி என்பது ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமே! ஆர்.எஸ்.எஸ். என்பது சமூகநீதிக்கு அடிப்படையிலேயே எதிரானது.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிஜேபி – நாக்பூர் ஆர்.எஸ்.எஸின் தலைமைப் பீடத்தின் கட்டளையின் காலடியில் தவழக் கூடிய ஒன்றுதானே!

பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான முடிவை சமூகநீதிக்காவலர் பிரதமர் வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் பிரகடனப்படுத்திய நிலையில் (7.8.1990), அதுவரை வெளியிலிருந்து பிரதமர் வி.பி.சிங் (ஜனதாதளம்)குக்கு ஆதரவு அளித்து வந்த பிஜேபி தன் ஆதரவை விலக்கிக் கொண்டு, வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்ததிலிருந்தே – ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியின் சமூகநீதிக்கான எதிர்ப்பு சிந்தனையையும், அதற்கான அவர்களின் செயலையும் புரிந்து கொள்ளலாமே!

 

‘நீட்’ தேர்வால் யாருக்குப் பயன்?

எடுத்துக்காட்டாக 2016ஆம் ஆண்டில் ‘நீட்’ இல்லாதபோது +2 அடிப்படையில் அரசு மேனிலைப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் கிடைத்த இடங்கள் – 3,546.

‘நீட்’ வந்தபோது கிடைத்த இடங்கள் – 2,314.

இழப்பு – 1,232

‘நீட் இல்லாதபோது சி.பி.எஸ்.இ. படித்தவர் களுக்குக் கிடைத்த இடங்கள் – 62

‘நீட்’  வந்த பிறகு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மருத்துவர் கல்லூரியில் கிடைத்த இடங்கள் – 1,220

கிட்டத்தட்ட 20 மடங்கு!

‘நீட்’டால்  யாருக்குப் பாதிப்பு!

‘நீட்’டால் யாருக்கு லாபக் கொள்ளை!

தெரிந்து கொள்வீர்!

 

இந்தக் கண்ணோட்டத்தில்தான் ‘நீட்’டைத் திணிப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஒன்றிய பிஜேபி அரசு தனி அக்கறை செலுத்துவதைப் புரிந்து கொள்ளலாம்.

‘இடஒதுக்கீடு’ என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்டவர்களுக்கு கிடைக்கும் அரிய வாய்ப்பு என்பதுதான் சட்டத்தின் நிலைப்பாடு – நீதிமன்ற தீர்ப்புகளும் அமைந்திருந்தன.

முதல் சட்டத் திருத்தத்தின் போதே பொருளாதார அளவுகோலையும் சேர்க்க வேண்டும் என்று அன்றைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சியாம பிரசாத்முகர்ஜி   வலியுறுத்தினார். (இவர் இந்து மகா சபையைச் சேர்ந்தவர் – இவர்தான் 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜன சங்கத்தைத் தோற்றுவித்தவர்)

இது வாக்கெடுப்புக்கு விட்டபோது பொருளாதார ரீதியாக என்பதற்கு எதிராக 243 வாக்குகளும், ஆதரவாக 5 வாக்குகள் மட்டுமே கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது நரேந்திர தாமோதரதாஸ் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு (EWS) என்ற மசோதாவை நிறைவேற்றி வெறும் நூறு மணி நேரத்திலேயே செயல்படுத்தி விட்டது என்பதையும் ‘நீட்’ தேர்வோடு முடிச்சுப் போட்டுப் பார்க்க வேண்டும்.

‘நீட்’ காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது என்று சொல்லி பிஜேபி தப்பிக்கப் பார்க்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதுஉண்மையே!

ஆனால், உச்சநீதிமன்றம் ‘நீட்’ செல்லாது என்று தீர்ப்பினை வழங்கி விட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு, ‘இந்திய அரசமைப்புச் சட்டம் 19, 25, 26, 29, 30 பிரிவுகளின்படி நீட் தேர்வை நடத்தும் உரிமை மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது’ என்று தீர்ப்பு (18.7.2013) வழங்கியது. அத்தோடு ‘நீட்’டுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

ஆனால், அந்தத் தீர்ப்பின்மீது மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்தது யார்? பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (NDA) தானே!

இதில் குறிப்பிடத்தக்க விஷமமான ஒரு தகவல் உண்டு. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல் தாமஸ் கபீர் தலைமையில் அமைந்த அமர்வில் ‘நீட்’டுக்கு ஆதரவாக மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய ஏ.ஆர். தவே (அனில் ரமேஷ் தவே) தான் பிஜேபி ஆட்சி தாக்கல் செய்த மறு சீராய்வு மனு மீதான உச்சநீதிமன்ற விசாரணை அமர்வுக்குத் தலைமை!

எப்படி இருக்கிறது? ‘நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த’ பழமொழியைப் பொருத்திப் பாருங்கள் புரியும்.

மேலும் ஒரு முக்கிய தகவல் என்னவெனில், காங்கிரஸ் தலைமையிலான மதச் சார்பற்றக் கூட்டணி ஆட்சியில் (UPA) தான் ‘நீட்’ கொண்டு வரப்பட்டது. அதில் தி.மு.க. அங்கம் பெற்றிருந்ததே என்று சிலர் குறுக்குச்சால் ஓட்டுவதுண்டு. உண்மை என்னவென்றால், அன்றைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நீட்டுக்கு எதிரான கருத்தை ஒன்றிய அரசுக்கு எழுதியதோடு அல்லாமல், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடையாணையும் பெற்றார் (அப்போது நீதிபதி: மாண்பமை ஜோதிமணி).

மேலும் பல வழக்குகள் நீட்டை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டதால் அனைத்து மனுக்களையும் ஒன்றி ணைத்து உச்சநீதிமன்றம் விசாரித்தது என்பதுதான் உண்மை.

முக்கியமாக ஒரு தகவலை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டியது மிக மிக முக்கியம்!

காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ.  (UPA) அரசு ‘நீட்’டைக் கொண்டு வந்தபோது, அன்றைய  குஜராத் மாநில முதலமைச்சரான நரேந்திர தாமோதர தாஸ் மோடியின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?

‘‘எங்கள் மாநிலத்தில் அதிகமான மாணவர்கள் மருத்துவராக வர வேண்டும் என்பது எங்களின் மாநில உரிமை ஆகும். இந்திய மருத்துவக் கழகம் எங்களை ‘நீட்’டிற்காகத் தயாராகும்படிக் கூறியிருந்தது. ஆனால் எங்களால் ‘நீட்’ தேர்வை ஏற்க முடியாது. எங்கள் மாநிலத்திற்கென்று சிறந்த கல்வி அமைப்பு உள்ளது. இதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் எங்கள் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

நாங்கள் ‘நீட்’ பற்றி ஒரு குழு அமைத்து ஆலோசனை செய்தோம். அந்தக் குழு மாநில அரசின் பாடத்திட்டபடி படிக்கும் மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு சுமையை ஏற்படுத்தும் என்று அறிக்கையில் கூறியுள்ளது; ஆகவே நாங்கள் ‘நீட்’டை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்று குஜராத் மாநில அரசின் அன்றைய முதல் அமைச்சராக  இருந்த மோடி கூறவில்லையா?

அதே நிலையைத் தானே தி.மு.க. அரசும் எடுத்தது; நீதிபதி மாண்பை ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து, அந்தக் குழுவின் ஆலோசனையை ஏற்று ‘நீட்’டை இன்று வரை எதிர்த்து வருகிறோம்.

இதுவரை அவர்களால் (பிஜேபி) ‘நீட்’ தேர்வை குளறுபடி இல்லாமல் நடத்த முடியவில்லை; ஊழலின் ஊற்றுக் கண்ணாகப் படம் எடுத்து ஆடுகிறதே!

ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. பல லட்ச ரூபாய் செலவு செய்து தனி பயிற்சி மய்யங்களுக்கும் செல்ல முடியவில்லை. (கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் சூழ்ச்சியும் இதில் அடக்கம்).

‘நீட்’ தேர்வு என்பது சிபிஎஸ்சி கல்வி முறையில் நடத்தப்படுகிறது. அதனால் மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தக் கொடுமையை ஒழித்துக் கட்டவே திராவிடர் கழகம் ஒத்த கட்சிகளை இணைத்துப் போராட்டங்களை நடத்தி வருகிறது. குமரி முதல் திருத்தணி, சென்னை வரை பரப்புரைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டங்களைக் கூட்டி, தீர்மானங்களை நிறைவேற்றி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்திருக்கிறது.

பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் முத்தரப்பினரையும் கூட்டி கருத்தரங்குகளை நடத்தியதுண்டு.

ஜனநாயக வழியில் அத்தனைப் போராட்டங்களையும் கையில் எடுத்திருக்கிறது. ‘நீதிமன்றங்களைவிட, வீதிமன்றங்களே சக்தி வாய்ந்தவை’ என்பதில் அசையாத நம்பிக்கை திராவிடர் கழகத்திற்கு உண்டு.

வெறும் ஊழலுக்காக மட்டும் ‘நீட்’ தேர்வை திராவிடர் கழகமும் சமூக நீதி கொள்கை உடைய அமைப்புகளும்   எதிர்க்கவில்லை.

சமூகநீதியை வென்றெடுத்தாக வேண்டும்என்ற ஒரே இலட்சிய நோக்கில் தான் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

அந்த வகையில் வரும் 16ஆம் தேதி காலை தமிழ்நாடு தழுவிய அளவில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அறிவித்துள்ளார்.

ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியதற்கு நல்லபலன் கிடைத்துள்ளது – மாநில ஒருங்கிணைப்பாளர்களும், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும் சமூகநீதியில் ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்து தந்தை பெரியார்தம்  திராவிட மண்ணின் போர்க் குரல் டில்லி செங்கோட்டையை அதிர வைக்கும் வகையில் நடக்கட்டும் நடக்கட்டும்! ஆர்ப்பாட்டம்.

நாம் எந்தப் போராட்டங்களிலும் தோற்றதில்லை; கால தாமதம் ஆகலாம் – ஆனால் வெற்றி நமதே!

முழங்கட்டும் போர் முரசு!

காதைக் கிழிக்கட்டும்

போராட்ட சங்கொலி!

வெல்வோம் – எழுங்கள்

தோழர்களே!

வெற்றி மாலையை சமூகநீதிக்குச் சூட்டுவோம்!

தயார், தயார் தானே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *