உரிமையுடன் அழைக்கிறோம் – ஒத்த கருத்துடையோரே ஓரணியில் திரள்வீர்!

0 Min Read

மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ தேர்வு என்பது
தகுதி, திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக் கண்ணா?
மே 16: தமிழ்நாடு தழுவிய அளவில்
மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அறிக்கை

மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு என்பது தகுதி, திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக் கண்ணா? மே 16 தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்! உரிமையுடன் அழைக்கிறோம் – ஒத்த கருத்துடையோரே ஓரணியில் திரள்வீர்  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

Contents
மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ தேர்வு என்பது தகுதி, திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக் கண்ணா? மே 16: தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கைஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு நீட் தேர்வைத் திணித்துக் கொண்டே இருக்கிறது!மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது!ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்த சூழ்ச்சி!ஏமாற்றம் அளிக்கிறது!மருத்துவக் கட்டமைப்பையே காலி செய்யும் ஆபத்தினைக் கொண்டது!ஒட்டுமொத்தமாகவே ‘‘நீட் தேர்வு’’ ரத்து செய்யப்பட வேண்டும்!மக்களின் போராட்டம் ஒழித்தால் ஒழிய, இப்பிரச்சினைக்கு விடிவில்லை!மே 16 இல் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம்!மாணவர் உரிமை – மாநில உரிமை காப்போம்!

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு நீட் தேர்வைத் திணித்துக் கொண்டே இருக்கிறது!

மருத்துவக் கல்விக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில், நீட் என்ற தேர்வு திணிக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளில், அரியலூர் மாணவி அனிதா தொடங்கி இந்தியா முழுவதும் பல நூறு உயிர்கள் பலியாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டது. ஆனால், அதன் உண்மை முகம் அநீதியானது என்பது தொடர்ந்து அம்பலப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. ஆனாலும், விடாப்பிடியாக ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு நீட் தேர்வைத் திணித்துக் கொண்டே இருக்கிறது. நீட் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை என்ற தனி அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் 2026-2027 ஆம் கல்வியாண்டில்  மருத்துவ இளநிலை (எம்பிபிஎஸ்), பல் மருத்துவம் இளநிலை (பிடிஎஸ்) உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 552 நகரங்க ளிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 5 ஆயிரத்து 432 மய்யங்களில் தேர்வு நடைபெற்றுள்ளது. இத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது!

இந்நிலையில், அந்தத் தேர்வின் வினாத்தாள், தேர்வு நடக்கும் முன்பே ராஜஸ்தானில் கசிந்துவிட்டதாகப் புகார் எழுந்து, அதை விசாரித்த சி.பி.அய், வினாத்தாள் கசிந்ததை உறுதி செய்ததையடுத்து, மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. அப்படியென்றால், மீண்டும் ஒரு தேர்வு (மறுதேர்வு) நடத்துவார்கள் என்று தானே பொருள்.

இது முதல் முறை அல்ல; நீட் தேர்வு என்பது, அதைக் கட்டாயப்படுத்திய பா.ஜ.க. அரசு சொன்னது போல, ‘தகுதி – திறமையின் அடையாளம்’ அல்ல; மாறாக, ஊழலின் ஊற்றுக் கண் என்பதற்கு 10 ஆண்டு களில் 89 முறை வினாத்தாள் கசிவுகள், 48 முறை மறு தேர்வுகள் நடந்துள்ளன என்பதே சான்று அல்லவா?

இப்போது மீண்டும் ஒரு மறுதேர்வா? ஏறத்தாழ 23 லட்சம் மாணவர்கள் நாடு முழுக்க  அங்குமிங்கும்  அலைக்கழிக்கப்பட்டார்களே, மீண்டும் அந்த நிலை தொடரப் போகிறதா? மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்குத் தான் இப்படிப்பட்ட தண்டனைகளா?

தமிழ்நாடு முதலில் எச்சரிக்கை செய்தபோது, போராடிய போது வேடிக்கை பார்த்த பிற மாநிலங்கள் இப்போது தான் விழிப்படைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுகள் கூடாது என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதே, கல்வியாளரும், மேனாள் துணைவேந்தருமான அனந்த கிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த குழுவின் முடிவுகளை ஏற்று, அதற்கென தனிச் சட்டம் நிறைவேற்றி 21 ஆண்டுகள் தொடர்ந்து வந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஏழை, எளிய மக்களின் மருத்துவக் கனவு நனவாக வழிவகுத்தார். யு.பி.ஏ. அரசால் இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டபோதும், விரும்பும் மாநிலங்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தான் சட்டம் இருந்தது. ஆனால், பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வை அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாயப்படுத்தியது.

ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்த சூழ்ச்சி!

தமிழ்நாடு கடுமையாக அதனை எதிர்த்துப் போரா டியது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் இரண்டு சட்டங்களை அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றி அனுப்பியது. அவற்றைக் குப்பைக் கூடைக்கு அனுப்பியது ஒன்றிய பா.ஜ.க. அரசு!  மீண்டும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சட்டம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியபோது, அவற்றுக்கு ஒப்புதல் தராமல் அவர் காலம் தாழ்த்தியதும், சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பியதும், இரண்டாம் முறை சட்டத்தை நிறைவேற்றி சட்டமன்றம் ஆளுநருக்கு அனுப்பிய போதும் மீண்டும் தாமதப்படுத்தியதும், பின்னர் நீதிமன்ற வழக்குகள் நடந்ததும், கடைசி வரை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்த சூழ்ச்சிகளும் தமிழ்நாட்டு மக்களைக் கொந்தளிப்பில் வைத்திருக்கின்றன.

ஏமாற்றம் அளிக்கிறது!

தற்போதைய ஆளும் கட்சியான த.வெ.க.வின் தலை வரும், முதலமைச்சருமான மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களும் ‘நீட்’ எதிர்ப்பைத் தொடக்கத்தில் பேசியவர் தான். இன்றும் அந்த நிலைப்பாட்டிலேயே அவரது அரசு தொடரும் என்று நம்புகிறோம். ஆனால், இந்தியா முழுமையும் கொந்தளிப்பு ஏற்பட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில் இதுவரை முதலமைச்சர் இந்தப் பிரச்சினை குறித்து தமது அரசின் நிலைப்பாட்டை வெளிப்ப டையாக அறிவிக்கவேண்டும்.

‘நீட்’ என்பது தகுதி திறமையை உறுதி செய்யும் தேர்வு அல்ல; இது கார்ப்பரேட்டுகளுக்கு லாபம் கொழிக்கச் செய்யப்பட்ட ஏற்பாடு என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது! நீட் தேர்வை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு மாணவரும் லட்சக் கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறார்கள்! மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த ஆண்டுகளில் தேர்வு எழுதும்போதும் அதற்காகப் பணம் செலவழிக்கிறார்கள்! ஆண்டுகளை வீணே கழிக்கிறார்கள்! மாணவ சமூகத்தின் ஆற்றலும், திற மையும் வீணடிக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல், அவர்களின் தன்னம்பிக்கை சிதைக்கப்படுகிறது. கல்வியில் சிறந்த மாணவர்கள், படிப்பில் வெறுப்பு ஏற்பட்டு, அழியும் சூழல் ஏற்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்னும் நகரமே ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கான பண்ணையாக மாற்றப்பட்டி ருப்பதும், அங்கேயே ஏராளமான தற்கொலைகள் நடந்திருப்பதும், கேள்வித் தாள் முறைகேடு, ஆள்மாறாட்டம், நவீன தொழில்நுட்பங்களை முறைகேட்டுக்குப் பயன்படுத்துதல் உள்ளிட்ட எல்லாவிதமான சட்டவிரோத செயல்களுக்கும் ‘மூலஸ்தானமாக’ இருப்பதும் ஒவ்வோராண்டும் செய்திகளில் வரத் தவறுவதில்லை.

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி அவர்கள், “நீட் என்பது தேர்வு அல்ல; இது ஏலமாக மாறி வருகிறது” என்று நேற்று (12.5.2026) தெரிவித்துள்ளதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தாகும்!

மருத்துவக் கட்டமைப்பையே
காலி செய்யும் ஆபத்தினைக் கொண்டது!

நீட் வெற்றியில்,சி.பி.எஸ்.இ மாணவர்களின் ஆதிக்க மும், செல்வம் படைத்த குடும்பத்துப் பிள்ளைகளின் ஆதிக்கமும், அதற்கு மாறான சூழலில் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கிராமப்புற மாணவர்களின் ஆதங்கமும், அங்கலாய்ப்பும், அவலமும் தான் அதிகரிக்கின்றன. கல்வியில், மருத்துவப் படிப்பு வாய்ப்பில் சமமின்மை உருவாக்கப்பட்டுள்ளது. இது மருத்துவக் கட்டமைப்பையே காலி செய்யும் ஆபத்தினைக் கொண்டது.

தன்னியல்பிலேயே இத்தனை ஆபத்து கொண்ட நீட் தேர்வு நடத்தும் முறைகளிலும், முடிவுகளிலும் ஏராளமான மோசடிகள் அரங்கேறுகின்றன. அவற்றுள் ஒன்று தான் அண்மையில் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளக்கியிருக்கும் இந்த ஆண்டு நீட் தேர்வு கேள்வித் தாள் கசிவு. அதுவும் கடைசி நேரத்தில் நடந்ததல்ல… ஆரம்ப காலத்திலேயே வெளியாகி, இந்தியா முழுக்கப் பரவிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காலதாமதமாகவே இந் நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றால், தேர்வு நடத்தும் அமைப்பின் யோக்கியதை என்ன?

ஒட்டுமொத்தமாகவே ‘‘நீட் தேர்வு’’
ரத்து செய்யப்பட வேண்டும்!

இந்த முறைகேடுகள் நடந்ததை ஒப்புக் கொண்டு தேசியத் தேர்வு முகமை இந்த ஆண்டு மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துள்ளது. ஒன்றிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22.80 லட்சம் மாணவர்கள், குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட வேண்டியது இந்த ஒரு நாள் நடந்த நீட் தேர்வு அல்ல; ஒட்டுமொத்தமாகவே ‘‘நீட் தேர்வு’’ ரத்து செய்யப்பட வேண்டும். மருத்துவக் கல்வி நுழைவுக்கு அந்தந்த மாநிலங்கள் தேர்ந்தெடுக்கும் முறையே அரசியலமைப்புச் சட்டப்படியானது.

இந்தக் குரலை அழுத்தமாக, உரக்க எழுப்ப வேண்டிய காலகட்டம் இது! கடந்த சில ஆண்டுகளாக விழித்துக் கொண்டுள்ள வட இந்திய மாணவர்களையும், பெற்றோர்களையும் சேர்த்து இக் குரல் இந்தியா முழுக்க ஒலிக்க வேண்டும். அரசியல் சூழல் எப்படி இருந்தாலும், அடிப்படையான உரிமைகளை, பிரச்சினைகளை முக்கியத்துவம் கொடுத்துக் கவனித்தே ஆக வேண்டும். நேற்றே இது குறித்து பல அமைப்புகளும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, இப் பிரச்சினையைத் திராவிடர் கழகம் முன்னெடுக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இதற்கான பல்வேறு கட்டப் போராட்டங்களை, பிரச்சாரங்களைத் திராவிடர் கழகம் மேற்கொண்டுள்ளது. பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றன. தி.மு.க. கூட்டணி மட்டுமல்ல, மற்ற கட்சிகளும் தமிழ்நாட்டில் எதிர்ப்புதான்.

மக்களின் போராட்டம் ஒழித்தால் ஒழிய, இப்பிரச்சினைக்கு விடிவில்லை!

இந்தச் சூழலில் இன்னும் அதிகமாகக் கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் இணைய வேண்டும். அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். போராட முன்வர வேண்டும். ஒன்றிய அரசின் விடாப்பிடியான மூர்க்கத் தனத்தை மக்களின் போராட்டம் ஒழித்தால் ஒழிய, இப்பிரச்சினைக்கு விடிவில்லை!

மே 16 இல்
தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம்!

மாணவர்  உரிமை காக்க, மாநில உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவாதத்தைத் தடுக்க ‘‘இந்தியா முழுமையும் நீட் தேர்வையே முற்றாக ரத்து செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் மே 16 ஆம் தேதியன்று காலையில் தமிழ்நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பொது நோக்கத்துக்காக உரிமையுடன் அழைக்கிறது திராவிடர் கழகம் – ஒத்த கருத்துள்ளோர் ஓரணியில் திரள வேண்டுகிறோம்! கழகத் தோழர்களே, களத்திற்கு வாரீர்! உடனடியாக ஆர்ப்பாட்டப் பணிகளைத் தொடங்குவீர்!

மாணவர் உரிமை – மாநில உரிமை காப்போம்!

“‘நீட்’ தேர்வை நிரந்தரமாக ஒழிப்போம்! மாணவர் உரிமை – மாநில உரிமை காப்போம்!” என்ற குரல் எங்கும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

 

 

சென்னை   தலைவர்,

12.5.2026  திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *