சென்னை, மே 12 இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகளுக்கு இடவசதி கிடைப்பது பெரும் சவாலாகவே உள்ளது.. இது தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.. அந்தப் பதிலில், ரயில்களில் இடம் கிடைக்காத காரணத்தால் கோடிக்கணக்கான மக்கள் தங்களது பயண வாய்ப்பை இழந்து வருவது தெரியவந்துள்ளது..
கடந்த 2025-2026 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 3.39 கோடி பயணிகளால் ரயிலில் பயணம் செய்ய முடியாமல் போயுள்ளது.. இவர்கள் அனைவரும் முன்பதிவு செய்திருந்தும், அவர்களது காத்திருப்புப் பட்டியல் பயணச்சீட்டு உறுதி செய்யப்படாததே இதற்குக் காரணம்.
ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தயாரிக்கப்படும் இறுதிப் பட்டியலின் போது, இந்த பயணச்சீட்டுகள் தானாகவே ரத்து செய்யப்பட்டுள்ளன.. இந்தத் தரவுகளின்படி பார்த்தால், ஓர் ஆண்டில் இத்தனை கோடி மக்களின் பயணம் ரத்தாகியிருப்பது ரயில்வே துறையின் தற்போதைய நெருக்கடியைக் காட்டுகிறது.
காத்திருப்புப் பட்டியல்
இந்த எண்ணிக்கையை நேர அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால் பாதிப்பின் தீவிரம் புரிகிறது.. அதன்படி, ஒரு நாளைக்குச் சராசரியாக 92,877 பயணிகள் தங்களது பயண வாய்ப்பை இழக்கின்றனர். இதனை இன்னும் விரிவாகப் பார்த்தால், ஒரு மணி நேரத்திற்கு 3,870 பேர் என்றும், ஒரு நிமிடத்திற்கு 64 பேர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது, ஒவ்வொரு விநாடிக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகளின் ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.. இது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல; வேலை, கல்வி மற்றும் குடும்பத் தேவைகளுக்காகப் பயணிக்கத் திட்டமிடும் சாமானிய மக்களின் பாதிப்பாகவும் பார்க்கப்படுகிறது.
1.68 கோடி படுக்கை வசதி
பயணச் சீட்டுகள்
பயணச் சீட்டுகள்
இப்படி ரத்து செய்யப்படுவதால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது படுக்கை வசதி வகுப்புப் பயணிகள்தான்.. மொத்தம் ரத்து செய்யப்பட்ட பயணச் சீட்டுகளில் 1.68 கோடி பயணச் சீட்டுகள் ‘படுக்கை வசதி’ வகுப்பைச் சேர்ந்தவை.. தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சிறு வணிகர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக ரயில்களையே பெரிதும் நம்பியுள்ளனர். அவர்களுக்கு ஒரு பயணச்சீட்டு உறுதி செய்யப்படாதது என்பது அவர்களது அன்றாட வருமானம் அல்லது முக்கியப் பணிகளைப் பாதிக்கும் செயலாக உள்ளது..
‘வந்தே பாரத்’ நவீன ரயில்கள்
இந்தியாவில் ‘வந்தே பாரத்’ போன்ற நவீன ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட் டாலும், சாதாரண பயணிகளுக்கான இடவசதியை அதிகரிப்பது இன்னும் சவாலாகவே உள்ளது..
‘காத்திருப்புப் பட்டியல்’ என்ற பெயரில் இத்தனை கோடி மக்களின் பயணம் தடைப்படுவது தேசிய அளவிலான ஒரு போக்குவரத்துத் தோல்வியாகவே கருதப்படுகிறது.. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ரயில்களின் எண்ணிக்கையையும், பெட்டிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.. இதற்கான உரிய நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது..!
சாதாரண வசதி குறைவு
மத்தியப் பிரதேசத்தின் நீமச் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர், ஆர்.டி.அய் (RTI) சட்டத்தின் கீழ் இந்த அதிர்ச்சிகரமான தகவல்களைப் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் சொல்லும்போது, தொழிலாளர்கள், மாணவர்கள், பக்தர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு ரயில்கள் என்பது வெறும் போக்குவரத்து சாதனம் மட்டுமல்ல, அது அவர்களின் வாழ்வாதாரத்தின் உயிர்நாடி என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை கோடி மக்கள் பயணம் செய்ய முடியாமல் போவது என்பது சாதாரண வசதி குறைவு கிடையாது, இது ‘காத்திருப்புப் பட்டியல்’ என்ற சொல்லுக்குப் பின்னால் மறைந்துள்ள தேசிய அளவிலான போக்குவரத்து தோல்வி என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.. இதிலும் குறிப்பாக எளிய மக்கள் பயணிக்கும் வகுப்பில் மட்டும் 1.68 கோடி பேரின் பயணச் சீட்டுகள் ரத்தாகி இருப்பது மிகப்பெரிய பாதிப்பாகப் பார்க்கப்படுகிறது.
