கொள்கை எதிரிகளிடமிருந்து தமிழ்நாட்டைக் காக்க வேண்டும்!

2 Min Read

* பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்து * தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

சென்னை, மே 11 தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று (10.5.2026) காலை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் பதவியேற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள்  அங்கிருந்து நேரே தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்துக்கு விரைந்தார். அங்கு பொறுப்பில் இணைந்து மேலும் சில கோப்புகளில் கையொப்பமிட்டார். பின்னர் அங்கிருந்து கிளம்பி மதியம் 3:10 மணி அளவில், தமது அமைச்சரவையினருடன் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்தார்.

திராவிடர் கழகம்

பெரியார் அருங்காட்சியக வாயிலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்துப் பெற்றார். “என்றும் உங்கள் ஆதரவு வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

மகிழ்வுடன் அதனை ஏற்றுக் கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, ‘தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்’ என்ற புத்தகத்தையும், தந்தை பெரியாரின் மார்பளவுச் சிலையையும் பரிசாக வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

“வாழ்த்துகள்.  தமிழ்நாட்டைக் கொள்கை எதிரிகளிட மிருந்து காப்பாற்றுவதே நம்முடைய கடமை” என்று அப்போது முதலமைச்சர் அவர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்தார். முதலமைச்சர் அதனை ஏற்று ஆமோதித்தார்.

பெரியார் அருங்காட்சியகம் குறித்த செய்திகளை அவருக்குத் தெரிவித்த தமிழர் தலைவர் அவர்கள், பின்னர் அருங்காட்சியகத்தினைச் சில நிமிடங்கள் சுற்றிக்காட்டி, வரலாற்றுச் செய்திகளை முதலமைச்சருக்கு சுட்டிக் காட்டினார்.    அப்போது திராவிடர் கழகத் துணைத்தலைவர், கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப்பொதுச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்.

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுடன் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், ராஜ்மோகன், கீர்த்தனா, வெங்கட் ரமணன், டாக்டர் பிரபு உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்துப் பெற்று, சிறிதுநேரம் உரையாடி விடைபெற்ற பின்னர், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைத் தந்தை பெரியார் நினைவிடத்திற்குத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தோழர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம் ஆகியவற்றிற்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செய்தனர். ‘‘தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்’’ ‘‘கொள்கைத் தலைவருக்குப் புகழ் வணக்கம், மண்ணுரிமைப் போராளி, பெண்ணுரிமைப் போராளி, சமூகச் சிந்தனையாளர் தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்’’ ‘‘வாழ்க வாழ்க வாழ்கவே பெண்ணுரிமை வாழ்கவே’’  என்று முழக்கங்களை அமைச்சர் ராஜ்மோகன் எழுப்ப  பிற அமைச்சர்களும் த.வெ.க தொண்டர்களும் முழக்கமிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *