சென்னை, மே 11- வாட்ஸ்அப் காணொலி அழைப்பில் ஆபாச செயலில் ஈடுபட்ட அய்டி ஊழியரை ஆதாரத்துடன் காவல் துறையிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார் இளம்பெண் ஒருவர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் திருமணமாகி பெண் குழந்தையுடன் சென்னை, எழும்பூரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.
03.05.2026ஆம் தேதி மாலை அந்தப் பெண் வீட்டிலிருந்தபோது, அவரின் கைப்பேசிக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து வாட்சப் காணொலி அழைப்பு வந்திருக்கிறது. தெரியாத நம்பர் என்பதால் அந்தப் பெண், அழைப்பை ஏற்கவில்லை. ஆனால் தொடர்ந்து காணொலி கால் வந்ததால், மேற்படி பெண் கைப்பேசியை எடுத்தபோது, எதிர்முனையில் ஒரு ஆண் ஆபாச செயலில் ஈடுபட்டிருக்கிறார்.
அதைப்பார்த்த அந்தப்பெண் அதிர்ச்சியடைந்த தோடு கைப்பேசி இணைப்பைத் துண்டித்திருக்கிறார். பின்னர் சில மணி நேரம் கழித்து அதே கைப்பேசி எண்ணில் இருந்து மீண்டும் காணொலி கால் அழைப்பு வந்திருக்கிறது.
உடனே உஷாரான அந்தப் பெண் அழைப்பை ஏற்றபோது அதே நபர் ஆபாச செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். உடனே இன்னொரு கைப்பேசி மூலம் அந்தக் காட்சிகளை காட்சிப் பதிவாக எடுத்திருக்கிறார் அந்தப் பெண்.
பின்னர், எழும்பூர் காவல் நிலையத்தில் காட்சிப் பதிவு ஆதாரத்துடன் அந்தப் பெண் புகார் கொடுத்ததும் சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினரின் உதவியோடு எழும்பூர் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (31) என்பவர்தான் காணொலி அழைப்பில் ஆபாசமாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்ததோடு அவரின் கைப்பேசியையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன், சென்னை மந்தைவெளியில் உள்ள அய்.டி. நிறுவனத்தில் வேலை செய்வது தெரியவந்தது. மேலும் எழும்பூர் பகுதியில் அவர் தங்கியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. மணிகண்டனின் பின்னணி குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
திருச்சி கிழக்கு தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார்
முதலமைச்சர் ஜோசப் விஜய்
சென்னை, மே 11- திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், அந்தத் தொகுதியில் தனது பதவியை விட்டு விலகினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்0 தவெக தலைவர் முதலமைச்சர் ஜோசப் விஜய். இந்தச் சூழலில் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை முதலமைச்சர் ஜோசப் விஜய் விட்டு விலகினார்.
இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்பதற்கு முன்பாக திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை விட்டு விலகியதற்கான கடிதத்தை இன்று (11.5.2026), தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் ஆகியோர், சட்டப்பேரவை முதன்மை செயலாளர் கி.சீனிவாசனிடம் வழங்கினார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
