சென்னை, மே 9- கடந்த 5 ஆண்டு களாக நடந்த மு.க. ஸ்டாலின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் மிகவும் வரவேற்பை பெற்றது நான் முதல்வன் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் படித்து பல மாணவர்கள் யுபிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் அதிகளவில் வெற்றி பெற்று பணிகளுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் தேர்தலுக்குப் பின் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவி விலகிய நிலையில் நான் முதல்வன் திட்ட ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து திமுக முன் னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான்முதல்வன் திட்ட ஆசிரியர்கள், startup TN, SPI ஊழியர்கள் உள்ளிட்டோர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை யளிக்கின்றன.
இது UPSC CSE Prelims தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்! புத்தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்கள், சிறப்பு திட்ட செயலாக்கம் உள்ளிட்ட பல மக்கள் பணிகளையும் பாதிக்கும்!
இதை எங்கள் தி.மு.கழகத் தலைவர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். திராவிட மாடல் திட்டங்களில் ஒன்றைக் கூட சீர்குலைக்க முயற்சித்தால் அதை மவுனமாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்பதை இதன் பின்னால் இருப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைக்கும் வளர்ச்சிக்கும் எங்கள் போராட்டம் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிஎம்சிறீ திட்டத்தின் கீழ் மும்மொழிக் கொள்கையை ஏற்க ஒன்றிய அரசு தேர்தல் முடிவுகளுக்கு பின் அண்மையில் மீண்டும் தாக்கீது அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
