சபரிமலையில் பெண்களுக்கும் வழிபாட்டு உரிமை! உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பத்தனத்திட்டா, மே 9 சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்தது ஏன் என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், தாவூதி போரா மற்றும் பார்சி இன திருமண சடங்குகளுக்கு எதிரான மனு குறித்தும் நேற்று (8.5.2026) கேள்வி எழுப்பியது.

கேரளாவில் உள்ள சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில், பெண்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் பல்வேறு மதங்களில் பின்பற்றப்படும் மத சுதந்திரத்தின் எல்லைகள் குறித்து, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

சீராய்வு மனு

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில் 12ஆவது நாளாக நேற்று (8.5.2026) விசாரணை நடந்தபோது, பார்சி சமூகத்தை சேர்ந்த பெண், வேற்று மதத்தவரை மணந்ததால், அந்த சமூகத்தை விட்டே விலக்கி வைக்கப்படும் நடைமுறையை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் தாரியஸ் கம்பாட்டா வாதிட்டார்.

அப்போது அவர், ”உண்மையான மத நடைமுறைகளில் நீதிமன்றம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். மத நம்பிக்கைகள், அறிவுபூர்வமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே சமயம், வெறும் நம்பிக்கை என்று மட்டும் கோரினால் போதாது; அது, அந்த மதத்தின் அடிப்படை தத்துவத்தின் ஒரு பகுதி என்பதை மெய்பிக்கும் வகையில் இருக்க வேண்டும்,” என்றார்.

இதே போல், தாவூதி போரா சமூகத்தில் நிலவும் கட்டுப்பாடுகளை எதிர்த்து, சீர்திருத்தவாதிகள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ராஜூ ராமச்சந்திரன் ஆஜரானார்.

அப்போது அவர், ”மதத்தின் பெயரால், ஒருவரை சமூகத்தை விட்டே விலக்கி வைப்பது, அரசியல் சாசன சட்டம் வழங்கும் வாழ்வுரிமையை பறிப்பது போலாகும். மேலும், தனிநபர் கண்ணியத்திற்கும் எதிரானது,” என்றார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, நீதிபதி பி.வி.நாகரத்னா, ”கடந்த 1962இல் இதே போன்ற ஒரு வழக்கில், சமூகத்தை விட்டு விலக்கும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் சரி என்று தீர்ப்பளித்தது. எனவே, முந்தைய தீர்ப்பை எதிர்க்க வேண்டுமெனில், சீராய்வு மனு அல்லது நிவாரணம் கோரும் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

குழப்பம்

”மாறாக, அடிப்படை உரிமை மீறல் எனக் கூறி, 32ஆவது பிரிவின் கீழ் நேரடியாக வழக்கு தொடர்வது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல,” என்றார்.

அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்குரைஞர் ராஜூ ராமச்சந்திரன், ”மத நடைமுறைகளில் நீதிமன்றம் எப்போது தலையிட வேண்டும்; எப்போது விலகி நிற்க வேண்டும் என்பதில் நிதானம் அவசியம். நாட்டின் அமைதிக்கு அது மிகவும் முக்கியம். ஒரு சட்டத்தை அடிப்படை அம்சம் என கூறிவிட்டு, உடனடியாக அதை எதிர்த்த மனுக்களை விசாரிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

இதையடுத்து பேசிய நீதிபதி நாகரத்னா, ”சபரிமலை விவகாரத்தில் பிரிவு 32-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் ஏன் விசாரணைக்கு ஏற்றது என்று விவாதித்தோம். இன்றும் அதே ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் இங்கிருக்கிறோம். சபரிமலை வழக்கில் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, இன்று தாவூதி போரா மனுவில் வேறொரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது.

”நாங்கள் ஒரே இரவில் எங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியாது. இரண்டுமே பிரிவு 32-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தான். நீதித்துறை தன் முடிவுகளில் உறுதியாகவும், சீராகவும் இருக்க வேண்டும்” என கண்டிப்புடன் தெரிவித்தார்.

நிதானம்

இந்த விவாதத்தின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூர்ய காந்த், ”இந்த விவகாரத்தில் நீங்கள் ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறீர்கள்; மத விவகாரங்களில் வழக்குரைஞர்கள் நிதானமாகவும், தர்க்க ரீதியாகவும் வாதத்தை முன்வைக்க வேண்டும்,” என கேட்டுக் கொண்டார்.

இவ்வழக்கு விசாரணை இன்றும் (9.5.2026) நடக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *