கொல்கத்தா, மே 9 அகிலேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் (X தளம்), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா ஆகியோருடன் தான் இருக்கும் ஒளிப்படத்தைப் பகிர்ந்து ஒரு முக்கியக் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
பா.ஜ.க-வை எதிர்ப்பதில் காங்கிரஸ் காட்டும் மெத்தனப் போக்கையும், மாநிலக் கட்சிகளை அவர்கள் கையாளும் விதத்தையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ள அகிலேஷ், “நாங்கள் காங்கிரஸ் கட்சியைப் போன்றவர்கள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வெற்றி தோல்விகளைத் தாண்டி, ஒரு நட்பு சக்தியாக மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, கடினமான காலங்களில் அல்லது ஒரு தோல்வியைச் சந்திக்கும் போது, கூட்டணிக் கட்சிகளைக் காங்கிரஸ் கைவிட்டுவிடுவதாகக் கருதப்படும் நிலையில் தாங்கள் அப்படிச் செய்யப்போவதில்லை என்று அகிலேஷ் உறுதிபடக் கூறியுள்ளார்.
“பா.ஜ.க-வை வீழ்த்த அந்தந்த மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகளே முன்னின்று போராட வேண்டும். அந்தப் போராட்டத்தில் மம்தா, ஸ்டாலின் போன்ற தலைவர் களுடன் நாங்கள் எப்போதும் துணை நிற்போம்” என்பதே அவரது பதிவின் சுருக்கம்.
அகிலேஷ் தனது பதிவில் மு.க.ஸ்டாலின் படத்தைப் பகிர்ந்ததற்கு முக்கியக் காரணம், தேசிய அளவில் பா.ஜ.க-விற்கு எதிராக வலுவான குரல் கொடுக்கும் தென்மாநிலத் தலைவராக ஸ்டாலின் பார்க்கப்படுவதால் தான்!
“மாநிலக் கட்சிகளின் உரிமை களுக்காகவும், கூட்டாட்சித் தத்துவத் திற்காகவும் குரல் கொடுக்கும் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல் பட வேண்டியது காலத்தின் அவசியம்.” என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகிலேஷின் சமாஜ்வாடி கட்சி ஆகிய இரண்டுமே தங்கள் மாநிலங்களில் காங்கிரஸுடன் இடப் பங்கீட்டில் சில சிக்கல்களைச் சந்தித்து வந்தன. இந்தச் சூழலில், ஸ்டாலினை ஒரு பாலமாக முன்னிறுத்தி மாநிலக் கட்சிகளின் ஒருமைப்பாட்டை அகிலேஷ் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தப் பதிவு, வரவிருக்கும் தேர்தல்களில் “மாநிலக் கட்சிகளின் கூட்டணி” உருவாவதற்கான சமிக்ஞையாகவே அரசியல் வட்டா ரங்களில் பார்க்கப்படுகிறது.
