புதுடில்லி, மே 4 டில்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் இதுவரை இல்லாத வகையில் வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. ஆனால், டில்லி பா.ஜ.க. அரசும், அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள டில்லி காவல்துறையும் வகுப்புவாத வன்முறைகளை ஆதரிப்பது போன்று அமைதி காத்து வருவதால், அங்கு வன்முறைச் சம்பவங்கள் நாளுக்குநாள் அதி கரித்து வருகின்றன.
இந்நிலையில, டில்லியின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான திரிலோக்புரியில் மே 1ஆம் தேதி அன்று 16 வயதான அயன் சைபி என்ற முஸ்லிம் சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் குத்திக் கொன்றனர். இந்த விவகாரம் காவல்துறை வசம் சென்ற பின்பும், கொலை செய்த கும்பல்மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹிந்துத்துவா கும்பல்
இத்தகைய சூழலில், சிறுவனை குத்திக் கொன்றது ஹிந்துத்துவா குண்டர்கள் என்றும், அதனால் தான் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அயன் சைபியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக சிறுவனின் குடும்பத்தினர் மேலும் கூறுகையில், ‘‘பூங்காவில் நண்பனுடன் விளையாடிக் கொண்டிருந்த அயனை, சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க 8 முதல் 10 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்து கொண்டது. அங்கிருந்து தப்ப முயன்ற அவனைத் துரத்திச் சென்று சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளனர். அவனது முதுகு, வயிறு, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன; ஒரு கையும் கடுமையாகச் சேதமடைந்தது.
கத்தியால் குத்தப்பட்டப் பின்பு முதலில் லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அயன், பிறகு நிலைமை மோசமானதால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். சிகிச்சையின் போது சிறிது நேரம் நினைவு திரும்பியபோது, காவல் துறையினர் அவனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அதில் தன்னைத் தாக்கிய பலரை அவன் அடையாளம் காட்டியுள்ளான். ஆனால், இதுவரை காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாக்கில் என்ற உள்ளூர் நபருடன் ஏற்பட்ட பழைய தகராறு காரணமாகவே அயன் சைபி கொல்லப்பட்டுள்ளான். இந்த விவகாரத்தில் அயனுக்கு நேரடித் தொடர்பு இல்லை. ஆனால் முஸ்லிம் என்பதாலேயே அவன் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளான்.
தொடர் மிரட்டல்
ஆரம்பத்தில் அயனுக்குப் பல முறை கொலை செய்த கும்பலிடம் இருந்து மிரட்டல்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக அயனின் குடும்பத்தினர் காவல்துறையை அணுகியுள்ளனர். ஆனால், முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தொடர்ச்சியான வகுப்புவாத தொந்தரவு களுக்கு உள்ளாகி, சில பகுதிகளுக்குச் செல்வதையே தவிர்த்து வந்துள்ளான். டில்லி காவல்துறை முறையான நடவடிக்கை எடுத்து இருந்தால், அயன் கொலை செய்யப்பட்டு இருக்க மாட்டான்” என அவரது நண்பர்கள், குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
காவல்துறை அலட்சியம்
கொலைக்குப் பிறகு காவல் துறையின் செயல்பாடுகள் குறித்தும் புகார்கள் எழுந்துள்ளன. சில சந்தேக நபர்கள் பிடி பட்டுள்ளதாகக் கூறிய காவல்துறை, முதல் தகவல் அறிக்கை விவரங்களை இதுவரை வழங்கவில்லை. மேலும், அயன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்தபோது குடும்பத்தினரைக் கூடச் சந்திக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்த வகுப்புவாத வன்முறை சம்பவத்தில் ஹிந்துத்துவா குண்டர்களுக்கு காவல்துறை ஆதரவாக செயல்பட்டது அம்பலாகியுள்ளது.
சோகத்தில் மூழ்கிய திரிலோக்புரி
படுகொலை செய்யப்பட்ட அயன் சைபி தனது தாய்க்கு ஒரே மகனாவார். தந்தை இல்லை என்று கூறப்படுகிறது. படிப்பைத் தொடர்ந்து கொண்டே, தனது தாயின் அன்றாட வேலைகளிலும் அயன் உதவியாக இருந்து வந்துள்ளார். தான் வசிக்கும் திரி லோக்புரி பகுதியில் அனைவரிடமும் நன்றாகப் பழகக்கூடியவர். ஆனால், திடீரென அயனை ஹிந்துத்துவா கும்பல் படுகொலை செய்ததால், திரிலோக்புரி பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.
