கல்லக்குறிச்சியில் எழுச்சியோடு நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!

கல்லக்குறிச்சி, மே 3- கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஒருநாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 01.05.2026 அன்று கல்லக்குறிச்சி நெல் ஆலை உரிமையாளர்கள் சங்க மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது.

கல்லக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.சா.பாஸ்கர் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் குழ.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், மாநில மருத்துவரணி செயலாளர் கோ.சா. குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாநில திரவிட மாணவர் கழக இணை செயலாளர் மு. இளமாறன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் எழிலரசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வீர முருகேசன், ஆத்தூர் மாவட்டத் தலைவர் சுரேஷ், ஆத்தூர் மாவட்ட செயலாளர் சேகர், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பரணிதரன், செய்யாறு மாவட்ட செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பபாளர் முருகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் பயிற்சிப் பட்டறையை நெறிப்படுத்தியும், மாணாவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை எடுத்துக் கூறியும் நோக்க உரையாற்றினார்.

திராவிடர் கழகம்

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு

தொடர்ந்து “தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு” எனும் தலைப்பில் ஆசிரியர் மா.அழகிரிசாமி முதல் வகுப்பினை தொடங்கி நடத்தினார். தந்தை பெரியார் அவர்களின் இளமைக் காலம், பொது வாழ்க்கை, போராட்டக் களங்கள் என்று PPT மூலம் திரையிட்டு வகுப்பினை நடத்தினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இரண்டாம் வகுப்பாக “AI தொழில்நுட்பம் – பெரியார் உலகம்” குறித்து காணொலிகள் திரையில் காட்டி விளக்கம் அளித்து மாணவர்களிடம் வகுப்பெடுத்தார்.

திராவிடர் கழகம்

ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் “ஹிந்து ஹிந்துத்துவா சங்பரிவார் ஆர்.எஸ்.எஸ்” என்னும் தலைப்பில் மாணவர்களிடம் “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” உள்ளிட்ட பல்வேறு நூல்களை எடுத்துக் கூறி விரிவாக உரையாற்றினார்கள். ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பது திராவிட இயக்கம், ஜாதி வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் என்பதையும் கூறி மாணவர்கள் ஜாதி – மதவெறிக்கு ஆளாகி விடக் கூடாது என்பதை வலிறுத்தியும் உரையாற்றினார்கள். இறுதியில் மாணவர்களோடு கலந்துரையாடியும், மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை, கேள்விகளை கேட்டும், அதற்கு ஆசிரியர் அவர்கள் பதிலளித்தார்கள். மாணவர்கள் ஆசிரியரோடு உரையாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து தேநீர் இடைவேளைக்கு பிறகு “தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சாதனைகள்” பற்றி பேராசிரியர் நம்.சீனிவாசன் ஆசிரியர் அவர்களின் சாதனைகளை எடுத்துக் கூறி வகுப்பெடுத்தார். மதிய உணவு இடைவேளையினைத் தொடர்ந்து “சமூகநீதி வரலாறு” குறித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர், முனைவர், துரை.சந்திரசேகரன் வகுப்பெடுத்தார். சமூக நீதி வரலாற்றில் தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு, அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் 27% இடஒதுக்கீடும் திராவிடர் கழகமும், தற்போது சமூக நீதிக்கும் இருக்கும் ஆபத்துகள் குறித்து விரிவாக வகுப்பெடுத்தார்.

“பேய் ஆடுதல், சாமியாடுதல் அறிவியல் விளக்கம்” குறித்து டாக்டர் இரா.கவுதமன் மாணவர்களிடத்தில் பல்வேறு கேள்விகளை கேட்டு பகுத்தறிவு வகுப்பெடுத்தார். மாணவர்களுக்கு உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளித்து வகுப்பு சிறப்பாக நடை பெற்றது.

திராவிடர் கழகம்

சமூக ஊடகங்களில் நமது செயல்பாடு

தொடர்ந்து “சமூக ஊடகங்களில் நமது செயல்பாடு” குறித்து எழுத்தாளர் வி.சி.வில்வம் சமூக வலைதளங்களை மாணவர்கள் எப்படி கையாள வேண்டும், மாணவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், வழிகாட்டியும் வகுப்பெடுத்தார். PPT திரையிட்டு மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

முனைவர் ந.எழிலரசன் “தந்தை பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள்” குறித்து மாணவர்களிடம் விரிவாக வகுப்பெடுத்தார். தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனையின் தாக்கத்தால் தமிழ்நாடு அடைந்துள்ள சாதனைகளையும், சமூகத்தில் இன்றும் நிலவும் பிற்போக்கு தனங்களுக்கு எதிராக மாணவர்கள் எப்படி அதனை அணுக வேண்டும் என்பதை எடுத்துக் கூறியும் விரிவாக வகுப்பெடுத்தார்.

வகுப்புகள் அனைத்தும் முடிந்ததும் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக மாணவன் கவின்பாலா தந்தை பெரியாரைப் பற்றி பயிற்சிப் பட்டறையினால் தெரிந்துக் கொண்டவற்றை வரிசையாக அடுக்கினார். அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மாணவி கவிசிறீ பயிற்சி வகுப்பினால் பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு பற்றி தெரிந்து கொண்டவற்றையும், ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றியும் கூறி தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். மாணவன் சுரேஷ் குமார் தந்தை பெரியாரைப் பற்றி சிறப்பாக பேசி அசத்தினார்.

திராவிடர் கழகம்

பங்குபெற்ற மொத்தம் மாணவர்கள் – 70 பேர்

ஆண் மாணவர்கள் – 59

பெண் மாணவர்கள் – 11

பள்ளியில் படிப்பவர்கள் – 62

கல்லூரியில் படிப்பவர்கள் – 8

அனைத்து வகுப்புகளையும் கவனித்து மாணவர்கள் குறிப்பெடுத்தனர். அதில் சிறப்பாக குறிப்பு எடுத்த இளவஞ்சி, சுரேஷ் குமார், அன்புச்செல்வன், செம்மொழியாள், தனுஷாந்த் ஆகிய 5 மாணவர்களுக்கு இயக்க நூல்களின் தொகுப்பு பரிசாக வழங்கப்பட்டது. 5 மாணவர்களுக்கும் குடந்தை மாவட்ட காப்பாளர் இளங்கோவன் அவர்கள் தலா 500 ரூபாய் பாராட்டி வழங்கினார். மேலும் 70 மாணவர்களுக்கும் இயக்க நூல்களை வழங்கினார். கல்லக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ. சா.பாஸ்கர் அனைத்து மாணவர்களுக்கும் இயக்க நூல்களை வழங்கி மகிழ்ந்தார். பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு இயக்க நூல்கள் 50% தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டது. ஆர்வத்துடன் மாணவர்களும் பெற்றோர்களும் நூல்களை வாங்கினர். மொத்தம் 50% தள்ளுபடியில் ரூபாய் 16,500 க்கு இயக்க நூல்கள் விற்பனையாகின.

நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் எழிலரசன் அவர்கள் நன்றியுரையாற்றினார். பயிற்சிப்பட்டறையில் கல்லக்குறிச்சி நகர தலைவர் முத்துசாமி, நகர செயலாளர் பெரியார், உடற்கல்வி ஆசிரியர் சாமிதுரை, இளைஞரணித் தலைவர் கரிகாலன், இளைஞரணிச் செயலாளர் முத்து வேல், மாவட்ட இலக்கிய அணி தலைவர் செயராமன், மாவட்ட ஆசிரியர் அணி தலைவர் வேல்முருகன், மாவட்ட துணை தலைவர் முத்து, தொழிலாளிரணி பெரியார், மாவட்ட மகளிரணி தலைவர் பழனியம்மாள், வழக்குரைஞர் விவேகானந்தன், திமுக மு. ஒன்றிய செயலாளர் நடராசன், ஆசிரியர் அண்ணாதுரை உள்ளிட்ட தோழர்களும், விழுப்புரம் நகர செயலாளர் சதிஷ், பகுத்தறிவாளர் கழக பகவான்தாஸ், ஆத்தூர் நகர தலைவர் அண்ணாதுரை, மாநில ப.க அமைப்பாளர் மாயக்கண்ணன், செய்யாறு மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிவாசன், நீலமலை மாவட்டத் தலைவர் நாகேந்திரன் உள்ளிட்ட பல தோழர்களும், மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். அனைவரும் இறுதியில் குழுப்படம் எடுத்துக் கொண்டனர். பயிற்சிப் பட்டறை 6 மணியளவில் நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *