விழுப்புரம், ஏப்.30 திண்டிவனம் மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் பணியாற்றி வரும் சாயி நிஷா என்பவர், தனது மூன்றாவது பிரசவத்திற்காக 2026 பிப்ரவரி முதல் 2027 பிப்ரவரி வரை ஓராண்டு மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், மாவட்ட முதன்மை நீதிபதி இந்த கோரிக்கையை நிராகரித்து, மார்ச் இறுதியில் ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதில், ஏப்ரல் மாதத்திற்குள் மீண்டும் பணியில் சேர வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சாயி நிஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெண் ஊழியர்களுக்கு ஆதரவாக மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
மூன்றாவது மகப்பேறுக்கும் பெண்கள் அதே உடல் ரீதியான வலிகளையும் சிரமங்களையும் அனுபவிக்கின்றனர். எனவே, பிரசவ எண்ணிக்கையின் அடிப்படையில் மகப்பேறு விடுப்பில் எந்தவிதமான பாரபட்சமும் காட்ட முடியாது.
மூன்றாவது மகப்பேறுக்கும் முழுமையான மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஏற்ெகனவே பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளன.
அரசாணை செல்லாது: மூன்றாவது மகப்பேறுக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்க வேண்டும் என்ற அரசின் தற்போதைய அரசாணை, உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. எனவே, அந்த அரசாணையை ஏற்க முடியாது. நீதித்துறைக்கு கட்டுப்பட்டதல்ல: அரசின் இந்த குறிப்பிட்ட அரசாணை மாவட்ட நீதித்துறையை கட்டுப்படுத்தாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பின் அடிப்படையில், சாயி நிஷாவுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கி மாவட்ட நீதிபதி ஒரு வார காலத்திற்குள் புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
பெண் ஊழியர்களின் மகப்பேறு நலன் மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்ப்பு, அரசுப் பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இம்மாதத்தில் மட்டும் 3ஆவது முறையாக தமிழ்நாட்டில் மின் தேவை மீண்டும் உச்சம்
ஒரே நாளில் 21,211 மெகாவாட் அதிகரிப்பு
சென்னை, ஏப்.30 இம்மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டின் மின் தேவை 3ஆவது முறையாக புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் 21,211 மெகாவாட் வரை அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரித்துள்ளதால் வீடுகளில் எந்த நேரமும் மின் விசிறிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இரவு நேரங்களில் ஏசி பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாட்டின் தினசரி மின்சார தேவை சரசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும்.
கோடை காலங்களில் 20 ஆயிரம் மெகாவாட்டையும் கடந்து மின் தேவை அதிகரிக்கும். கோடை காலத்துக்கு முன்பாக தமிழ்ந;ாட்டில் அதிகபட்ச மின் தேவை, கடந்த 2024ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி 20,830 மெகாவாட்டாகவும், அதிகபட்சம் மின் நுகர்வு 2024ஆம் ஆண்டு ஏப்.30ஆம் தேதி 454.32 மில்லியன் யூனிட்கள் பதிவானது. தமிழ்நாட்டில் கத்திரி வெயில் வரும் மே 4ஆம் தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரல் மாதத்திலே வெயில் சுட்டெரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கிய பின் இந்த ஏப்ரல் மாதத்திலேயே 3 முறை அதிகபட்ச மின் தேவை மற்றும் மின் நுகர்வு பதிவாகியிருக்கிறது. மின் தேவையை பொறுத்தவரை கடந்த 17ஆம் தேதி 21,010 மெகாவாட்டாகவும், 22ஆம் தேதி 21,051 மெகாவாட்டாகவும் பதிவான நிலையில் நேற்று முன்தினம் (28.4.2026) 21,211 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதேபோல், மின் நுகர்வு கடந்த 18ஆம் தேதி 462.66 மில்லியன் யூனிட்களாகவும், ஏப்.23ஆம் தேதி 466.16 மில்லியன் யூனிட்களாகவும் பதிவான நிலையில் நேற்று முன்தினம் (28.4.2026) 470.67 மில்லியன் யூனிட்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்திலேயே 3ஆவது முறையாக மின் தேவை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த மாதம் கத்திரி வெயில் தொடங்கும் போது இந்த அளவுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், “பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் காரணமாக அனைத்து இடங்களிலும் ஏசி பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது, இதனால் மதிய நேரத்தில் மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கிறது. மேலும் இரவு நேரங்களிலும் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் தேவை மற்றும் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. வெயிலினால் மின் தேவை அதிகரித்தாலும், அந்த தேவையை பெரும்பாலும் பூர்த்தி செய்ய சூரிய சக்தியே உதவுகிறது. நேற்று முன்தினம் பதிவான (28.4.2026) மின் தேவையை விட மொத்த மின் உற்பத்தி அதிகமாகவே இருந்தது,’’ என்றனர்.

