பெங்களூரு, ஏப்.26 கருநாடகாவில் பட்டியல் பிரிவில் உள்ள தாழ்த்தப் பட்டோர் சமுதாய மக்களுக்கான 15 சதவீத இடஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கருநாடகாவில் 50 சதவீதம் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் 15 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மக்களுக்கும், 3 சதவீதம் பழங்குடியின ருக்கும், ஓபிசி பிரிவினருக்கு 32 சதவீதம் என இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீட்டு முறை தான் கரு நாடகாவில் கல்வி, வேலை வாய்ப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தாழ்த்தப்பட்டோர் மக்களுக்கான 15 சதவீத இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர் மக்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது.
35 ஆண்டுகால போராட்டம்
இதன்மூலம் அனைத்து தாழ்த்தப்பட் டோர் பிரிவு மக்களும் கல்வி, அரசு வேலைவாய்ப்புகள் பெற்று முன்னேற முடியும். தற்போதைய இடஒதுக்கீடு முறையில் ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் மட்டுமே முன்னேறுவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. இதனால் பட்டியல் இனத்தில் தாழ்த்தப்பட்டோர் மக்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல போராட்டங்கள் முன்னெடுத்து வரப்பட்டன. தொடர்ந்து 35 ஆண்டுகளாக இந்த கோரிக்கைகள் நிலுவையில் இருந்தன. எந்த அரசும் இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
உள் இடஒதுக்கீடு
இந்நிலையில் தான் தற்போது கருநாடகா அரசு கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது. கருநாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக சித்தராமையா உள்ளார். நேற்று (25.4.2026) கருநாடகா அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்டியல் ஜாதியில் தாழ்த்தப்பட்டோர் மக்களுக்கு வழங்கப்படும் 15 சதவீத இடதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இம்முடிவை கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அண்மையில் அறிவித்த நிலையில் தற்போது அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
உள் இடஒதுக்கீட்டில் யாருக்கு எவ்வளவு?
இந்த உள்ஒதுக்கீட்டின்படி மொத்தமுள்ள 15 சதவீத இடஒதுக்கீட்டில் “இடது கை”, “வலது கை” பிரிவுகளுக்கு தலா 5.25 சதவீதம், பிற பட்டியல் ஜாதியினருக்கு 4.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. புரியும்படி கூற வேண்டும் என்றால் எஸ்சி மக்களுக்கான 15 சதவீத இடஒதுக்கீட்டில் Left Hand பிரிவு என்று உள்ள எஸ்சி சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 5.25 சதவீதம், Right Hand பிரிவில் உள்ள எஸ்சி சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 5.25 சதவீதம், பிற பிரிவனருக்கு 4.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன சொல்கிறார் முதலமைச்சர்?
இது விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை அடிப்படையாக கொண்டு அறிவிக்கப் பட்டுள்ளது என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் பட்டியல் ஜாதியினருக்கு உள் இடஒதுக்கீட்டு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதும் இந்த ஒப்புதல் சட்டமாக இயற்றப்படும் என்று கூறியுள்ளார். விரைவில் கருநாடகாவில் 56,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் உள்இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்பதை யும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

