உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
புதுடில்லி, ஏப்.25 ‘எந்த நீதிமன்றமும் ஒரு பெண், குறிப்பாக சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக, கருவை சுமக்கச் சொல்லி நிர்ப்பந்திக்க முடியாது’ என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தர விட்டுள்ளது.
15 வயது சிறுமியின் 7 மாத கர்ப்பத்தை கலைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. நம் நாட்டில் கருக் கலைப்புக்கு அனுமதி இருந்தாலும், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றம். திருமணமான பெண்கள் 20 வாரங்கள் வரை கருக் கலைப்பு செய்து கொள்ள சட்டம் அனு மதிக்கிறது.
ஆபத்து
திருமணம் ஆகாத பெண்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். 24 வாரங்க ளுக்கு மேலான கரு எனில், கலைக்க அனுமதிக்கப்படுவதில்லை. தாயின் உயிருக்கு ஆபத்து அல்லது கருவில் மிக மோசமான குறைபாடுகள் இருந்தால் மட்டுமே, மருத்துவக் குழுவின் சிறப்பு ஆலோசனைகள் மற்றும் அனுமதியுடன் அந்த கருக்கலைப்புக்கு அனுமதி தரப்படுகிறது.
இந்நிலையில், 7 மாதம், அதாவது 28 வார கருவை சுமந்திருக்கும் 15 வயது சிறுமி, கருக்கலைப்புக்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வில் நேற்று (24.4.2026) விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு
பிறக்கப் போகும் குழந்தையின் நலனை விட, அந்தக் கருவை சுமக்கும் பெண்ணின் விருப்பமும், நலனுமே முக்கியம். எனவே, எந்தவொரு நீதி மன்றமும் ஒரு பெண், குறிப்பாக சிறுமி யின் விருப்பத்திற்கு மாறாக, கருவை சுமக்கச் சொல்லி நிர்ப்பந்திக்க முடியாது.
விருப்பத்திற்கு மாறாக நிர்ப்பந்தம் செய்வது, சிறுமியின் மன நலத்தை வெகுவாக பாதிக்கும்; கல்வி கற்றல், சமூகத் தகுதி என ஒட்டுமொத்த எதிர்கா லத்தையும் பாதிக்கும். தனிமனித சுதந்தி ரம் மற்றும் தனியுரிமை தொடர்பான சட்டப்பிரிவு 21 இன் கீழ், தன் உடல் மற்றும் இனப்பெருக்கம் குறித்து முடிவு எடுக்கும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிறது. தேவையற்ற கர்ப்பத்தை சுமக்கச் சொல்வது, அந்த பெண்ணின் அடிப்படை உரிமைகளை பறிப்பது போலாகும்.
மன உளைச்சல்
குறிப்பாக சிறுமியரை கட்டாயப்ப டுத்துவது, அவருக்கான உரிமையை மறுப்பது போலாகும். தேவையற்ற கர்ப்பத்தை சுமக்கச் சொல்வதால், அந்த பெண்ணுக்கு ஈடு செய்ய முடியாத மன உளைச்சலையும், உடல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும்.
கருவுற்ற ஒரு பெண், குழந்தையை பெற்றெடுக்க விருப்பம் இல்லாமல் இருந்தாலும், மழலைச் செல்வம் இல்லாத வர்களுக்கு தத்து கொடுக்கலாம் என சொல்வது எளிது. ஆனால், விருப்பமே இல்லாத குழந்தையை பெற்றெடுக்க, பிரசவத்திற்காக அந்த பெண் படும் துயரங்கள் சொல்லி மாளாது.
அரசியலமைப்புச் சட்ட அதிகாரங்கள் கொண்ட நீதிமன்றங்கள், விருப்பத்திற்கு மாறான கருக்கலைப்புக்கு அனுமதி தராவிட்டால், ரகசியமாக இயங்கும் கருக்கலைப்பு மய்யங்களை நோக்கி படையெடுக்கும் சூழல் அதிகரிக்கும். இதனால், கர்ப்பிணியின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.
இவ்வழக்கில் 15 வயது சிறுமி, ஏற்கெனவே இரு முறை உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார். இந்தச் சூழலில், விருப்பத்திற்கு மாறாக அவரை குழந்தை பெற்றுக் கொள்ள நிர்ப்பந்திப்பது, அவருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தகுந்த மருத்துவர்களின் ஒத்துழைப்புடன் சிறுமியின் 7 மாத கர்ப்பத்தை கலைக்க, இந்த நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
