மக்கள் நலத் திட்டங்களைச் ‘சீர்’ என்று சொல்வதா? 

4 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு தமிழ்நாட்டில் சிறந்து விளங்குவதற்கு நூறாண்டு காலத் திட்டமிடலும், செயலாக்கமுமே காரணம். அன்றைய மதராஸ் மாகாணத்தில் முதன் முதலில் அமைந்த நீதிக்கட்சி ஆட்சியில் தான் ஒடுக்கப்பட்ட மக்கள், உழைக்கும் மக்களுக்கான திட்டங்கள், சமூக மாற்றத்திற்கான ஆணைகள், சட்டங்கள் உருவாகின. பெயரிடுதலிலும், ஏற்கெனவே காலங்காலமாக இருந்த பெயர்களை மாற்றியதிலும் சமூக அக்கறையே முதன்மையாக இருந்தது.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை, ‘இலவசங்கள்’ (Freebies) என்றும், ‘ஓட்டு அரசியலுக்கானவை’ என்றும் கொச்சைப்படுத்தி பார்ப்பன ஊடகங்களும், ஹிந்துத்துவத் தலைவர்களும், ஏன், சில நேரங்களில் நீதிமன்றங்களும் கூட பேசுவார்கள். ஆனால், அவை தான் மக்களின் வாழ்க்கையில் அடிப்படை மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றன என்பதைத் தமிழ்நாட்டின் வளர்ச்சி புள்ளிவிவரம் காட்டுகிறது. முதன் முதலில் பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த நீதிக்கட்சியின் தலைவர் சர்.பிட்டி.தியாகராயர்! சென்னை ஆயிரம் விளக்கு தொடக்கப் பள்ளியில் அவர் கொண்டு வந்த திட்டம் தான், பின்னாளில் கல்வி வள்ளல் காமராசர் அவர்களாலும், முதலமைச்சர்களாக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோராலும் அடுத்தடுத்த நிலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன் உச்சமாக, காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து சரித்திரம் படைத்தார் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இவற்றின் பலன் என்ன என்பதை, பள்ளிகளில் சத்துணவு உண்டு படித்து, இன்று பல துறைகளில் சிறந்து விளங்கும் பெருமக்கள் எடுத்துச் சொல்வார்கள். உணவு கொடுக்க வேண்டும் என்றால், அதை நேரடியாகக் கொண்டு போய் வீடுகளில் கொடுத்திருக்க முடியும். அல்லது அன்னசத்திரங்கள், அன்னதானம் என்று செயல்படுத்தியிருக்க முடியும். அதைப் பள்ளிகளில் வழங்கியதற்கான காரணம் கல்வி வளர்ச்சியே! எல்லா துறைகளிலும் இத்தகைய மனித நேயமும், மனித உரிமையும், சமூகநீதியும் தான் திராவிட இயக்கம் கொண்டுவந்த திட்டங்களின் அடிநாதமாக இருக்கும். அந்தப் பெயர்களிலும் அதுவே தொனிக்கும்.

1989-இல் முத்தமிழறிஞர் கலைஞர் திருமண உதவித் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, அதற்கு எட்டாம் வகுப்பு வரை பள்ளியில் படித்திருக்க வேண்டும் என்பதை ஏன் ஒரு நிபந்தனையாக வைத்தார் என்பதை எண்ணிப் பார்த்தால், அதன் பின்னால் உள்ள சமூக அக்கறையும், பெண்ணுரிமைப் புரட்சிக்கான அடித்தளமும் புரியவரும். 1996-இல் ரூ.5,000 என்பதைப் ரூ.10,000 என்று உயர்த்தியபோது, அதற்கான நிபந்தனையாகப் பெண்கள் 10-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்று அறிவித்ததன் மூலம், பெண் குழந்தைகளைப் பத்தாம் வகுப்புவரை படிக்க வைத்தது. ஆனால், இதன் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல், இதனை வெறும் திருமண உதவித் திட்டம் என்று புரிந்துகொண்டு, ‘தாலிக்குத் தங்கம்’ என்று மாற்றியது அடுத்து வந்த செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு. (இந்து மதத்தவர் திருமணங்களில் தாலி என்பதை இதன் மூலம் மீண்டும் வலியுறுத்தியதும், எல்லாம் மதத்திருக்குமான  திட்டத்தை ஒரு மத அடையாளத்தில் கொண்டு வந்ததும். கூடுதல் சறுக்கல்.)

ஆனால், அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில், 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.25,000 திருமண உதவித் தொகையாக  (தங்கத்தையும் கூடுதலாகக் கொடுத்து) அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டதும், 2021-இல் திராவிட மாடல் ஆட்சி வந்த போது, திருமண உதவித் தொகை என்பதற்குப் பதிலாக ‘புதுமைப் பெண்’ திட்டம் என்ற பெயரில் கல்லூரிகளில் படிக்க மாதந்தோறும் ரூ.1,000 என்று குறைந்தபட்சம் ரூ.36,000-லிருந்து, ரூ.72,000 வரைக்கும் கூட வழங்கப்பட்டது என்பதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் இத் திட்டத்தின் நோக்கத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

இதே போல, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கலாம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தபோதும், அதற்கு  ‘மகளிர் உரிமைத் தொகை’ என்றே பெயரிடப்பட்டது. அத் திட்டத்திற்குக் கூட ‘முதலமைச்சரின் சீர்’ என்று பெயரிட சிலர் ஆலோசனை கூறிய நிலையில், ‘சீர்’ என்ற சொல், பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் சொல், குடும்பத்தில் பெண்களுக்குச் சீர் செய்வது என்பது தான், கட்டாயச் சீராக வரதட்சணையின் தோற்றுவாய்; எனவே அப் பெயர் கூடாது என்று உறுதியாக நின்று, அது சீரும் அல்ல; உதவித் தொகையும் அல்ல; ‘உரிமைத் தொகை’ என்று மக்கள் மனதில் நிலை நிறுத்தியது ‘திராவிட மாடல்’ அரசு. இப்படி ஒவ்வொரு திட்டத்திற்கும் வரலாற்றுப் பின்னணியையும், அதனால் விளைந்த சமூக மாற்றங்களையும் விரித்துச் சொல்ல முடியும்.

ஆனால், ”தமிழக பாரம்பரிய மரபின்படி, அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்” என்று நிதிநிலை அறிக்கையில் த.வெ.க. அரசு குறிப்பிட்டுள்ளது. பாரம்பரியம், பண்பாடு என்னும் பெயரால் பெண்ணடிமைத் தனம் புதுப்பிக்கப்படுவதும், அப் பெயர்கள் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்படுவதும் ஏற்கத்தக்கது அல்ல. “பெண்களின் திருமணத்திற்காக 8 கிராம் தங்கம், பட்டு சேலை வழங்கும் ‘அண்ணன் சீர் திட்டம்’ அமல்படுத்தப்படும்” என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். திருமணமே ஒரு பெண்ணுக்கு மிக முக்கியமானது என்றும், அதற்குத் தங்கம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவது பெண்ணடிமைத் தனம் அல்லவா? திருமண நிதி உதவித் தொகை என்பதில் தொடங்கி, கல்விக்கான ஊக்கத் தொகையாகப் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ள ஒரு திட்டத்தை மீண்டும் திருமணத்தோடு முடிச்சுப் போட்டு, அதையும் ‘அண்ணன் சீர்’ என்று பெயரிட்டு அழைப்பதையும் எப்படி வரவேற்க முடியும்? இது சமூகத்தைப் பின்னிழுக்கும் செயல் அல்லவா? ‘இலவசங்கள் வேண்டாம்’ என்று முதலில் முழங்கவைத்த த.வெ.க., பிறகு தேர்தலுக்காக அவற்றையெல்லாம் தனது தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொண்டது. ஆட்சிக்கு வந்ததும், அவற்றில் பல திட்டங்களைத் (பெயர் மாற்றினாலும் கூட) தொடர்கிறது என்ற அளவில் நாம் வரவேற்கிறோம். ஆனால், வரதட்சணை உள்ளிட்ட சமூகக் கொடுமைகளை, இதனால் அழிந்த குடும்பங்களையெல்லாம் கருதிப் பார்க்காமல், ‘சீர்’ என்று பெயரிட்டு மீண்டும் அதை நியாயப்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. முழுமையான அரசியல் கண்ணோட்டம்  மட்டுமே கொண்ட பிற்போக்குத்தனமே ஆகும்!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *