வாசிங்டன், ஜூலை8- இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது குழுமத்தைச் சேர்ந்த 7 பேர் மீது அமெ ரிக்காவில் தொடரப்பட்ட குற்றவியல் வழக்குகளைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் அறிவித்தது.
இந்தியாவில் சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் அதானி குழுமத்தின் மீது இந்த வழக்குத் தொட ரப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான மனுவை அமெரிக்க நீதித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், இந்த மனுவை உடனடியாக ஏற்றுக்கொள்ள நியூயார்க் மாவட்ட நீதிபதி மறுத்து விட்டார். மேலும், வழக்கை திடீரெனத் திரும்பப் பெறுவதற்கான விரிவான காரணங்களை ஜூலை 13ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதானி குழுமம் அமெரிக்காவில் சுமார் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்ட மிட்டுள்ளதால்தான் இந்த வழக்குகள் கைவிடப்படுகிறதா என்ற பலத்த சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அமெரிக்க துணை அட்டர்னி ஜெனரல் டிரென்ட் மெகாட்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள புதிய விளக்க மனுவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“அமெரிக்காவில் அதானி குழுமம் பணத்தை முதலீடு செய்வதாக அளித்த வாக்குறுதியின் காரணமாகவே, நான் பத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யக் கோரி னேன் என்று கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. முதலீடுகள் குறித்த பேச்சுக்கள் எழும் முன்பே, இந்த வழக்கை கைவிட வேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்துவிட்டோம். முதலீடுகள் குறித்த குறிப்புகள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட, பத்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யவே நான் கோரியிருப்பேன்.”
இவ்வாறு அமெ ரிக்க நீதித்துறை தனது விளக்கத்தில் தெரிவித் துள்ளது. எனினும், ஜூலை 13ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள விரிவான அறிக்கை இந்த வழக்கில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப் படுகிறது.
