புதுடில்லி, ஏப்.25 மேற்கு ஆசிய நெருக்கடியின் விளைவாக இந்தியப் பொருளாதாரம் கலவையான சமிக்ஞைகளை (கலவை யான நெருக்கடி) வழங்கி வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி தனது சமீபத்திய ‘பொருளாதார நிலை’ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது,
“மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் தேவை மற்றும் விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், இந்தியாவின் சில துறைகளில் தேவை வலுவாக இருந்தாலும், மற்றவற்றில் தேக்கநிலை காணப்படுகிறது. விநியோகக் குறைபாடுகள் வருங்காலத்தில் ‘தேக்க நிலை அதிர்ச்சியாக’ மாற வாய்ப்புள்ளதால், இதுகுறித்துத் தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம்.
குறைவு – சரிவு அதே போல, உற்பத்தித் துறைக்கான பிஎம்அய் (PMI – Purchasing Managers Index) குறியீடு விரிவாக்க மண்டலத்தில் இருந்தாலும், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவை எட்டியுள்ளது. சேவைத் துறை பிஎம்அய் 14 மாதங்களில் இல்லாத அளவிற்குச் சரிந்துள்ளது. உரம், கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்திக் குறைந்ததால், 8 முக்கியத் தொழில்களின் குறியீடு 19 மாதங்களில் இல்லாத சரிவைக் கண்டுள்ளது.
விமான எரிபொருள் தேவை கடுமையாகக் குறைந்துள்ளது மற்றும் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது அந்தத் துறையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வான்வழிப் பயணிகள் போக்குவரத்திலும் மந்த நிலை மற்றும் துறைமுகச் சரக்கு கையாளுதலில் நெருக்கடி நீடிக்கிறது. மேற்கு ஆசியப் போர் காரணமாக விநியோகச் சங்கிலியில் பல சிக்கல்கள் இருந்தாலும், உள்நாட்டுச் சந்தையில் அதன் தாக்கம் இன்னும் முழுமையாக எதிரொலிக்கவில்லை” என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

