சென்னை, மே 2- நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறினார்.
சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள தொழிலாளர் தின நினைவுச் சின்னத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து, மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.செல்வம், கவுன்சிலர்கள் சுகன்யா செல்வம், பானுப்ரியா உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து, கு.செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது. மக்கள் அளித்துள்ள முடிவை விரைவில் காண்போம். திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி மகத்தான கூட்டணி.
பிரதமர் மோடி, தமிழ்நாடு வந்தால் தமிழர் நாகரீகம், தமிழர் பண்பாடு என புகழ்ந்து பேசுவார், ஆனால் பீகாருக்கு சென்றால் தமிழர்களை திட்டி பேசுவார். இப்படி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இப்படி பேசுபவர் தான் நமது நாட்டின் பிரதமராக இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக உள்ளனர். இங்கு பாசிச ஆட்சிக்கு எந்த காலத்திலும் இடமில்லை. வருமான வரித்துறை சோதனை குறித்து மேலும் ஆதாரங்களை விரைவில் தொடர்ச்சியாக வெளியிடுவேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ‘காங்கிரஸ் எதிர்கட்சியாக இருக்கும், இல்லையென்றால் ஆளுங்கட்சியாக இருக்கும்’ என்று பேசியுள்ளதாக கேட்கிறீர்கள். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.
