கனவு இல்லமும்… கரியாகும் பகுத்தறிவும்!

2 Min Read

ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுகச் சேர்த்த சேமிப்பு, வங்கிக் கடன்கள், உறவினர்களிடம் கையேந்திப் பெற்ற உதவிகள் என அனைத்தையும் திரட்டித் தான் ஒரு கனவு இல்லத்தை எழுப்புகிறான். அந்தச் சுவர்களில் சிமெண்ட் கலவையை விட அவனது குருதியும் வியர்வையும் தான் அதிகமாகக் கலந்திருக்கிறது.

உழைப்பால் உயர்ந்த கோபுரம்

வீடு கட்டுவது என்பது வெறும் செங்கல் அடுக்கல்ல; அது ஒரு போர். பொறியாளர் முதல் சித்தாள் வரை: ஒவ்வொருவரிடமும் பேசி, கூலியைக் குறைத்து, தரமான வேலையைப் பெற அந்த உரிமையாளர் படும் பாடு அளவிடற்கரியது.

மேஸ்திரி வருவதற்கு முன்பே அதிகாலையில் களத்தில் நிற்பது, மணல் முதல் கம்பி வரை ஒவ்வொன்றையும் சரிபார்ப்பது என ஒரு கட்டடக் கலைஞனைப் போலவே அவர் மாறுகிறார்.கட்டுமானப் பணியின் போது அக்கம்பக்கத்தாரின் வசவுகள், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் என இத்தனை நெருக்கடிகளையும் தாண்டி அந்த அழகிய இல்லம் ஒரு வழியாக முழுமை பெறுகிறது.

சடங்குகளின் பெயரால் ஒரு சிறுமை

இவ்வளவு சிரமப்பட்டுப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய அந்தப் புத்தம் புதிய வீட்டில், ‘கிரகப்பிரவேசம்’ என்ற பெயரில் நுழையும்போது நடக்கும் நிகழ்வுகள் தான் வேதனைக்குரியவை.

பல ஆண்டுகள் ஓடி ஆடி உழைத்த அந்த வீட்டு உரிமையாளர், ஒரு சாதாரண மனிதனின் காலடியில் தலைகுனிந்து நிற்பது எத்தகைய அறம்?  உழைப்பால் உருவான வீட்டில், சடங்கு செய்பவரின் கால் நம் தலையில் படுவதை ‘ஆசீர்வாதம்’ என்று நினைப்பது நம் சுயமரியாதையை நாமே குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமம்.

பளிச்சென்று இருக்கும் புதிய வீட்டை யாகப் புகையாலும், கரியாலும் பாழாக்குவது எந்த விதத்தில் நியாயம்?

நம்பிக்கை என்பதும் ஒரு மனிதனுக்கு நிம்மதியைத் தர வேண்டுமே தவிர, அவனை இன்னொரு சக மனிதனுக்கு அடிமையாக்கக் கூடாது. ஒரு வீடு என்பது பொறியாளரின் கணக்கீட்டிலும், தொழிலாளர்களின் உழைப்பிலும், உரிமையாளரின் விடாமுயற்சியிலும் உருவானது. அங்கே உழைப்பிற்குத் தான் முதல் மரியாதை அளிக்கப்பட வேண்டும்.

“மனிதன் தன் சுயமரியாதையை இழந்து செய்யும் எந்தவொரு வழிபாடும் அவனை மேன்மையடையச் செய்யாது.” கடின உழைப்பால் உருவான கோபுரத்தின் உச்சியில் அமர வேண்டிய மனிதன், மூடநம்பிக்கையின் பெயரால் காலடியில் விழுந்து கிடப்பது சமூகப் பின்னோக்கியச் சிந்தனையின் உச்சம். இனியாவது உழைப்பைப் போற்றுவோம், சுயமரியாதையைக் காப்போம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *