குவிந்த பெண்கள் படை.. சத்தமின்றி வாக்குச்சாவடிகளில் திமுக செய்த சம்பவம்.. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் புது வியூகம்

3 Min Read

சென்னை, ஏப்.24  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நேற்று (23.4.2026) விறுவிறுப்பாக நடைபெற்றநிலையில், வாக்குச்சாவடிகளில் இதுவரை கண்டிராத ஒரு புதிய அரசியல் மாற்றம் அரங்கேறியது.

பொதுவாக ஆண்களின் ஆதிக்கக் களமாகக் கருதப்படும் வாக்குச்சாவடி முகாம்களில், இந்த முறை பெண்களே பெருமள வில் ஆக்கிரமித்து, தேர்தல் களத் தின் போக்கையே மாற்றி அமைத்துள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக, தமிழ்நாடு முழுவதும் பெண்கள் தன்னெழுச்சி யுடன் திரண்டு வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தகர்க்கப்பட்ட மரபுகள்: முகாம்களில் பெண் ஆதிக்கம்

வழக்கமாக தேர்தல் நாள்களில், வாக்குச்சாவடிகளுக்கு வெளியே அரசியல் கட்சிகள் அமைக்கும் உதவி மய்யங்களில் (Booths) அந்தந்தப் பகுதியின் முக்கியப் பிரமுகர்களும், ஆண் தொண்டர்களுமே அமர்ந்திருப்பார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பது முதல் ஸ்லிப் வழங்குவது வரை அனைத்தும் ஆண்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். ஆனால், 2026-இன் இந்த தேர்தல் களம் அந்தப் பிம்பத்தை முழுமையாக உடைத்தெறிந்துள்ளது.

நேற்று காலை முதலே, சென்னை முதல் கன்னியாகுமரி வரை பெரும்பாலான வாக்குச்சாவடி முகாம்களில் திமுகவின் பெண் தொண்டர்களே அதிக அளவில் அமர்ந்து பணியாற்றினர். கையில் வாக்காளர் பட்டியலுடன், வரும் வாக்காளர்களை இன்முகத்துடன் வரவேற்று தேர்தல் நடைமுறைகளை விளக்கினர்.

வாக்களிப்பதோடு நிற்காமல்
தீவிரப் பிரச்சாரம்

வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதோடு பெண்களின் பணி முடிந்துவிடவில்லை. அவர்கள் ஒரு படி மேலே சென்று, தங்கள் அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களிடம் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதில் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

மகளிர் உரிமைத் தொகை, அரசுப் பேருந்துகளில் விடியல் பயணம் போன்ற திட்டங்கள் பெண்களுக்கு பொருளாதார ரீதியாகப் பெரும் உதவியாக இருந்ததை விளக்கி வாக்குச்சாவடிக்கு வரும் பிற பெண்களிடம் அவர்கள் விரிவாக எடுத்துரைத்து வருகின்றனர்.

திமுகவின் ‘மகளிர் படை’
வியூகம் பலிக்கிறது!

இந்த மாற்றத்திற்குப் பின்னால் திமுகவின் முறையான திட்டமிடல் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 பெண்கள் அடங்கிய ‘மகளிர் குழு’வை திமுக தலைமை உருவாக்கியிருந்தது. இந்த ‘பூத் கமிட்டி’ பெண்கள், தேர்தல் நாளன்று களத்தில் இறங்கி சுறுசுறுப்பாகச் செயல்படுவது எதிர்க்கட்சிகளைத் திகைக்க வைத்தது.

பெண்கள் மத்தியில் இருக்கும் இந்த உற்சாகம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு கட்சிக்கு வாக்களிப்பது வழக்கம். ஆனால், ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தெருவில் இறங்கிப் பிரச்சாரம் செய்வதும், பூத் ஏஜெண்டுகளாகச் செயல்படுவதும் வழக்கமான காரியம் இல்லை.. திமுக நிறைய பெண் பூத் ஏஜெண்டுகளை போட்டதே இதற்கு காரணம் என்கிறார்கள்.

கூட்டணிக் கட்சிகளுக்குப் பலம் சேர்க்கும் பெண்கள்

திமுக வேட்பாளர்கள் மட்டுமன்றி, அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக திமுகவின் பெண் தொண்டர்கள் முன்னின்று பணியாற்றுவது, அக்கூட்டணியின் ஒற்றுமையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

குறிப்பாக, கிராமப்புறங்களில் பெண்களின் பங்களிப்பு வியக்கத்தக்க வகையில் உள்ளது. விவசாயப் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தங்கள் கிராமத்து வாக்குச்சாவடிகளைப் பெண்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இது தேர்தலுக்குப் பிந்தைய வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என்பதில் அய்யமில்லை. வாக்குச்சாவடிகளில் ஆண்களுக்கு நிகராகவும், சில இடங்களில் ஆண்களை விட அதிகமாகவும் பெண்கள் திரண்டு நின்று ஆற்றியுள்ள இந்தப் பணி, ஜனநாயகத்தின் உண்மையான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. பெண்களின் இந்த எழுச்சியும், திமுகவின் இந்த ‘மாஸ்டர் பிளான்’ மூவ்-உம் வரும் மே மாதம் 4ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும் என அரசியல் களம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *