ஆசிரியர் விடையளிக்கிறார்

5 Min Read

கேள்வி: சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா (பிரதமர் மோடி டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்) விளம்பரத்திற்கு ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறையின் சார்பில் ரூ.76,13,129 செலவிட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிவந்துள்ளதே?

– மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்பது ஒரு தனி அமைப்பு. அதன் நூற்றாண்டு விழாவுக்கு (பிரதமர் மோடி கலந்துகொண்ட அந்நிகழ்ச்சிக்கு) ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறையின் சார்பில், விளம்பரத்திற்கான செலவு 76 லட்சத்து 13 ஆயிரத்து நூற்றி இருபத்தொன்பது (ரூ.76,13,129) என்ற தகவல், (தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம்) வெளிவந்துள்ளதைவிட, பட்டாங்கமான ‘அதிகார துஷ்பிரயோகம்’ வேறு உண்டா? அந்தக் கட்சி சார்பாக எவ்வளவு வேண்டுமென்றாலும் செலவு செய்யலாமே! அதே ஆண்டில் உருவான சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் – நம் அழைப்பின் பெயரால் கலந்துகொண்டனரே, ஏதாவது நம் இயக்கத்திற்கு தமிழ்நாடு அரசு செலவு செய்ததாகக் காட்ட முடியுமா? மூன்று முறை அதே ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். – இது அப்பட்டமான சட்ட மீறல். உயர்நீதிமன்றங்கள், தானே முன்வந்து (Suo Moto) வழக்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? கட்சியும், ஆட்சியும் அவர்களுக்கு ஒன்றுக்கொன்று கலந்த இணைப்பு. இது ஒரு தவறான முன்மாதிரி. ஆர்.எஸ்.எஸ். கலாச்சாரம்தான் இந்தியக் கலாச்சாரமா? வெட்கம்!

கேள்வி: ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும், வாங்குவதுமான தவறான செயல்பாடு 1980களில் இருந்ததா?

– ஓவியன், அரும்பாக்கம்

பதில்: அப்போது மிகச் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. எனினும், இப்படிப் போட்டிப் போட்டுப் பணநாயகம் விளையாடும் நிர்வாணத் தன்மை கிடையவே கிடையாது! இதற்கு மூலகாரணமே நமது தேர்தல் கமிஷனும், சரியான தேர்தல் சட்டக் கண்டிப்பு விதிமுறைகள் இல்லாமையும், ‘கையாலாகத’ சோளக் கொல்லை பொம்மைகள் போன்ற அதிகாரிகளும், பயிரை மேயும் வேலிகளும்தான்! மாறி மாறி கட்சி ஆட்கள் குறைகூறுவது தொடரும்; அடிப்படை சீர்திருத்தமோ இரும்புக் கரத்துடன் செயல்படுத்தினால் மட்டுமே முடியும்.

கேள்வி: ஓய்வில்லாமல் பிரச்சாரம் செய்கிறீர்களே! நீங்கள் எப்போது ஓய்வெடுப்பீர்கள்?

– திவ்யபாரதி, பழனி

பதில்: என்றாவது ஒரு நாள் இந்த இயந்திரத்தின் இதயம் நிற்கும்; அப்போது எனக்கு ஓய்வு. ஆனால், அப்போதும் எமது கொள்கைகளுக்கோ, இயக்கத்திற்கோ ஓய்வு இருக்காது; பயணங்கள் முடிவதில்லை.

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: “பிரதமர் மோடி அவர்களைத் ‘தீவிரவாதி’ என்று தான் குறிப்பிட்டதாகத் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ள பின்பும், பி.ஜே.பி. தலைவர்கள் அவருக்குத் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனரே – சரியா?

– கு.ஆனந்தன், சென்னை – 39

பதில்: வேறு சரக்கில்லை. அதனால் இப்படி வித்தை காட்டும் வீண்வம்பு. விதிமீறி தேர்தல் நேரத்தில் பிரச்சாரம், தோல்வி பயத்தில் எதிர்க்கட்சிகளைக் குறைகூறும் பிரதமர் மோடி – அவர் என்ன பேசினாலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம். ஜாதிவாரிக் கணக்கெடுப்புக் கேட்ட ‘அர்பன் நக்சல்கள்’ என்று கூறியதற்கு அவர் மீது  நடவடிக்கை உண்டா?

கேள்வி: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் (23.4.2026) வாக்குப்பதிவு மதிய வேளைக்கு முன்பாகவே விறுவிறுப்புடன் நடந்ததற்குக் காரணம் என்ன?

– செ.பொன்னுசாமி, விழுப்புரம்

பதில்: மக்களின் அரசியல் விழிப்புணர்வும், மகளிரின் தெளிவும்தான்!

கேள்வி: எண்ணூர் – கத்திவாக்கத்தில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து உயிருக்குப் போராடிக் கதறிய ஆட்டுக்குட்டியை தன்முனைப்போடு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துக் காப்பாற்றிய சிறுமியின் கனிவு குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?

.பிரவீன்குமார், இராயபுரம்

பதில்: அந்தப் பெண் – சிறுமியிடம் உள்ள ‘மனிதம்’ கூட நாக்கில் நரம்பின்றி, வாக்கில் சுத்தமின்றி, செயலில் நேர்மையின்றி நடக்கும் ‘பெரிய’ மனிதர்களிடம் இல்லையே என்று எண்ணியே இந்த ‘இளம் புத்தரை’ப் பாராட்டலாம்!

கேள்வி: கங்கோத்ரி கோயிலில் நுழைவதற்கு பஞ்சகவ்யம் (பசுவின் சிறுநீர் உள்ளிட்ட அசுத்தக் கலவை) உட்கொள்வதை அக்கோயில் நிர்வாகக் குழு கட்டாயமாக்கியுள்ள அவலத்தை யாரும் கண்டிக்கவில்லையே – ஏன்? கடவுள் – மதம் என்றவுடன் இன்னும் எவ்வளவு காலத்திற்கு வாய்மூடிய மவுனிகளாக இருப்பார்கள்?

– கு.ஆதவன், செஞ்சி

பதில்: சில நீதிபதிகளே கூட ‘பஞ்சகவ்வியம்’ குடித்து ‘நமது பாரத’ கலாச்சாரத்தின் பெருமைகளைப் பக்கம் பக்கமாக தீர்ப்பு எழுதினால்கூட அதிசயமில்லையே!

கேள்வி: பஞ்சாப் – லூதியானாவில் “இந்தியர்கள் அனைவரும் கலாச்சார ரீதியாக ஹிந்துக்களே” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேச்சுக்கு பஞ்சாப்பில் சீக்கிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவது நியாயம் தானே?

– ச.கோதண்டபாணி, பள்ளிக்கரணை

பதில்: இப்படிப்பட்ட விழிப்புணர்வு அங்கு மட்டுமல்ல, ஒடிசா, ஜார்கண்ட் போன்ற பல மாநிலங்களில் (ஏன் கருநாடகத்தில் கூட) உண்டு; ஊடக இரும்புத்திரை இருட்டடிப்பு – மறைக்கிறது. எனினும் ரொம்ப காலம் மறைக்க முடியாது. புத்தரையே 9ஆவது அவதாரம் என்று ‘கதை’ கட்டிய விஷமம் நினைவுக்கு வரவில்லையா?

“என்றாவது ஒரு நாள் இந்த இயந்திரத்தின் இதயம் நிற்கும்; அப்போது எனக்கு ஓய்வு. ஆனால், அப்போதும் எமது கொள்கைகளுக்கோ, இயக்கத்திற்கோ ஓய்வு இருக்காது; பயணங்கள் முடிவதில்லை.”

கேள்வி: 2026 – சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது, தங்களைக் கவர்ந்தவைகளில் முக்கியமானது என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

– வெற்றிவீரன், திண்டிவனம்

பதில்: ஏராளமாக மகளிர் திரண்டு வந்து கலந்து கொண்டு, உற்சாகத்துடன் உரைகளைக் கேட்டு, நம்மோடு அவர்களும் ஆர்வத்துடன் பேசி பரப்புரையினை உள்வாங்கிய பாங்கு ஒரு புதுத் திருப்பம். மகளிர் உரிமைப்போரின் ஒரு பொன்னேடு!

கேள்வி: மண்ணின் மானம் காக்க – மொழி காக்க – இனம் காக்க பலர் தூற்றும் தனிப்பட்ட விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு தமிழ்நாட்டுக்காகப் போராடும் திராவிடத் தலைவர்களை எப்படியாவது அழித்துவிடத் துடிக்கிறதே ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.? அவர்கள் கனவு பலிக்குமா?

– யுவகாளி, காஞ்சி

பதில்: இது தமிழ்நாடு; தந்தை பெரியாரின் தன்மான மண். ஒருபோதும் முடியாது. கண்ணாடி ஆயுதங்களால் கற்பாறையைப் பெயர்க்கும் எந்தச் சூழ்ச்சியும் தூள் தூளாகும்! இது உறுதி! கூலிப் படையும், பின்னங்கால் முதுகில் பட ஓடி ஒளியும் நாள் வெகு தொலைவில் இல்லை – உறுதி!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *