வருணாசிரமத்தை ஒழிக்க வழி

இமய மலையை இல்லை என்கிறார்

தாழ்த்தப்பட்டோர் வறுமையை ஒழிக்க உறுதுணையாகும் வகுப்புவாரி உரிமையைப் பெற்றுத் தந்த பெரியார், தாழ்த்தப்பட்டோர் அறியாமையை ஒழிக்கத் தன் வாழ் நாளையே அர்ப்பணித்தார். அய்யாயிரம் ஆண்டு அடிமை வாழ்விற்கு எதிரியாகப் பெரியார் புறப்பட்ட பொழுது சமுதாயத்தில் எழுந்த பேரதிர்ச்சியைச் சொல்லில் அடக்கமுடியாது.

இவர் இமயமலையை இல்லை என்கிறார்: எண்ணிப்பார்த்தால் உண்மையாக இருக்கிறது

எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையே வியப்படைய வைத்தது பெரியார் வாதம்.

திடுக்கிடச் செய்கிறார்; திகைக்க வைக்கிறார்

என அண்ணாவையே திக்குமுக்காடச் செய்தன பெரியார் சிந்தனைகள்.

உன் புத்தியைப் பயன்படுத்து. சுய அறிவுகொள். ஏன் என்று கேள்வி கேள். மானம் பார். சுயமரியாதை உணர்ச்சி கொள். உன் அடிமைச் சங்கிலியை நீயே அறுத்தெறி. பள்ளத்திலிருந்து துள்ளி வெளியே குதி. எனத் தன் வாழ்நாள் முழுவதும் பேசினார். எழுதினார், எழுச்சியூட்டினார். அடிமைத் தமிழா, உனக்கு அறிவு இல்லையா என வசை பொழிந்தார். தன்மீது பொழியப்பட்ட வசையையும் வன்முறையையும் ஏற்றார். சட்டத்தை எதிர்த்தார். சிறை சென்றார். தமிழன் அடிமை நிலை தீர்க்க இறுதிவரை போராடிக் கொண்டேயிருந்தார். அவர் போராட்ட வரலாற்றுச் சுருக்கம் இதோ!

ஜாதி ஒழிப்பா? வறுமை ஒழிப்பா?

பெரியார் 1931-1932இல் மூன்று மாதங்கள் சோவியத் ரஷ்யாவில் தங்கி அந்நாட்டைச் சுற்றிப் பார்த்தார். எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற பொதுவுடைமைச் சிந்தனையில் பொலிவுற்றிருந்த அன்றைய சோவியத் யூனியனின் நல்லாட்சி அவரைக் கவர்ந்தது. தாய் நாடு திரும்பிய பெரியார். பகுத்தறிவுச் சிந்தனையுடன் பொதுவுடைமைச் சிந்தனையையும் தம் கொள்கை முழக்கமாகப் பேசத்தொடங்கினார். தோழர்கள் சிங்காரவேலரும் ஜீவாவும் நெருங்கியவர்கள் ஆயினர். தம் பகுத்தறிவு இயக்கத்தில் ‘சமதர்மக்கட்சி’ என்ற உட்பிரிவும் தொடங்கப்பட்டது. ‘புரட்சி’ என்ற இதழும் வெளியிடப்பட்டது.

இந்தக் காலக்கட்டத்தில், ஆங்கில அரசிற்கு எதிராக எழுந்த பொதுவுடைமைக் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கத் தீவிர அடக்குமுறையைத் தொடங்கியது வெள்ளையர் அரசு. பொதுவுடைமை பேசும் பெரியார் இயக்கமும் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு அரசாங்கத்தால் அடியோடு அழிக்கப்படும் என்ற செய்தியை அரசுத் தொடர்புடைய உண்மை நண்பர்கள் சிலரால் பெரியார் அறிந்தார். வறுமை ஒழிப்பா? (பொதுவுடைமை) ஜாதி ஒழிப்பா? (சுயமரியாதை) என்ற அன்றைய வினாவிற்குப் பெரியார் தெளிவான விடை கண்டார்.

தாழ்த்தப்பட்ட ஒருவர் தொழில் செய்து பெரிய செல்வந்தர் ஆகலாம்; அய்.ஏ.எஸ். படித்து ஆட்சியாளர் ஆகலாம்; அரசியலில் ஈடுபட்டு அமைச்சர் ஆகலாம். இதன்மூலம் அவர் வறுமை ஒழியலாம். ஆனால் அவரது ஜாதி இழிவு ஒழியாது. தாழ்த்தப்பட்ட தன்மை சமுதாயத்தில் குறையாது. ஆனால் ஜாதி ஒழிந்தால்தான் மனிதனின் தாழ்வு மாறும். எனவே நான் சமதர்மச் சமுதாயத்திற்குப் பாடுபடுவதைக் காட்டிலும் சமநிலைச் சமுதாயத்திற்குப் பாடுபடவே விரும்புகிறேன் எனப் பெரியார் அறிவித்தார்.வருணாசிரம ஒழிப்பே உயிர்க்கொள்கை என்பதை நிலை நாட்டினார்.

நாட்டு விடுதலைக்குப் பின் இந்தியாவில் நடந்த நிகழ்வு ஒன்று பெரியார் சிந்தனையை மெய்ப்பித்தது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராயிருந்த திரு.ஜெகஜீவன்ராம் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர். பாட்னாவில் உள்ள உயர்ஜாதித் தலைவர் ஒருவரின் சிலைக்கு மாலை அணிவித்தார். அவர் சென்றபின் அங்குள்ள மேற்ஜாதியினர், சிலை தீட்டுப்பட்டுவிட்டது எனக் கங்கை நீரால் தூய்மை செய்தனர். இதைப்போன்ற ஆயிரம் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இதை முன்பே உணர்ந்தவராதலால் வறுமை ஒழிப்பை விடச் ஜாதியொழிப்பிற்கே முன்னுரிமை என்றார்.

தீண்டாமைக்கெதிரான போராட்டங்கள்

தெருவில் நடக்கவிருந்த தடையை உடைத்த வைக்கம் போராட்டம். பார்ப்பனர் உண்ணத் தனியிடம் ஒதுக்கப்பட்ட சேரன்மாதேவிக் குருகுலத்திற்கு எதிர்ப்பு, செங்கற்பட்டு மாநாட்டில் பெயருக்குப் பின் இருந்த ஜாதிவால் நறுக்கிய தீர்மானம்; தமிழ்நாடு தமிழர்க்கே போராட்டம். இரயில்வே உணவகங்களில் உள்ள பார்ப்பனருக்குத் தனியிடம் எதிர்ப்பு, கருப்புச்சட்டை மாநாடு, விடுதலை நாள் – குடியரசு நாள் துக்க நாள் அறிவிப்பு, வகுப்புவாரி உரிமைக்காக அரசியல் சட்டத்திருத்தப் போராட்டம், குலக்கல்வி எதிர்ப்பு, ஜாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டம் எரிப்பு, இந்திய தேசப்படம் எரிப்பு. பொதுக் கிணறு. பொதுப்பாதை, பொதுச் சுடுகாடு, கருவறை நுழைவுப் போர், இரட்டைக்குவளை முறை ஒழிப்பு, பொதுக்கோயில், பொதுப்பள்ளிக்கூடம் அமையப் போராட்டங்கள், தமிழ்ச் சமுதாய இழிவு எதிர்ப்பு மாநாடு, அனைவரும் அர்ச்சகர் ஆக்கப் போராட்டம், என ஜாதி ஒழிப்பிற்குப் பெரியார் எண்ணற்ற மாநாடுகள், வாழ்நாள் முழுவதும் போராட்டங்கள் நடத்தினார். புன்னகையுடன் பன்முறை சிறை புகுந்தார்.

மூடநம்பிக்கை ஒழிப்பு

தன் ‘குடிஅரசு’ இதழில் எழுதப்பட்ட இராமாயண, பெரியபுராண, மகாபாரத ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழ் நாட்டில் கால் படாத இடமே இல்லை எனும்படி அனைத்து ஊர்களிலும் புராண, இதிகாசப் புளுகுகளை வெட்ட வெளிச்சமாக்கப் பேசிய பேச்சுக்கள். விநாயகர் சிலை உடைப்பு, ராமர் படம் எரிப்பு, கம்பராமாயணத்திற்குத் தீ, மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு என மூட நம்பிக்கை ஒழிப்பில் முழுக்கவனம் செலுத்தினார். தன் இயக்கப் பேரணிகளில் தீச்சட்டி, தீ மிதிப்பு, அலகு குத்துதல் நடத்திக்காட்டி அதன் புனிதத்தன்மைப் புளுகினை அம்பலப்படுத்தினார்.

பெண்ணுரிமைப் போர்

கலப்புத் திருமணங்கள், விதவைத்திருமணங்கள், சீர்திருத்தத் திருமணங்கள் பெண்கள் மாநாடுகள், பெண் அடிமை நிலையை விளக்கி எழுதப்பட்ட எத்தனை எத்தனை ஆய்வுரைகள், நூல்கள் எனப் பெண்ணுக்குப் பெருமை செய்யப் போராடியவர் பெரியார்.

பதவி விலைப்படாதவர்

தனது சமநிலைச் சமுதாயப் போராட்டத்திற்கு இடையூறு எனக் கருதும் எதையும் பெரியார் விலக்கி வைத்தார். தம்மைத் தேடிவந்த முதலமைச்சர் பதவியைக் கூட ஏற்க மறுத்தார். ஜனநாயகம், தேர்தல், வாக்குச் சீட்டு வலையில் விழுந்து விட்டால் சரிக்கட்டுதல், ஒத்துப்போதல், விட்டுக்கொடுத்தல் என்ற விலை கொடுக்க வேண்டியது வரும் என்பதால் விழிப்பாயிருந்தார். அவர் கொள்கைக்குத் துணை புரியும் கட்சிக்குத் துணை புரிவார். கொள்கையை எதிர்க்கும் கட்சியை எதிர்த்துப் போர் புரிவார். அரசியல் கட்சிகளுக்குப் பெரியார் ஆதரவு தரும் நிலை அடிக்கடி மாறுவது போல் தெரியும். ஆனால் உண்மையில் மாறுவது அவர் இல்லை; அரசியல் கட்சிகள்தாம் அடிக்கடி தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்கிறார்கள்.

சுயமரியாதைத் தொண்டர் படை

தமிழன், தன்மானம் பெறத் தான் எந்த அவமானமும் பெறத் துணிந்த தன்னிகரில்லா வீரர் படை பெரியார் பின்னே அன்று திரண்டிருந்தது. அன்று பெரியார் இயக்கத் தொண்டனுக்குப் பெயர் சூனாமானாக்காரன். (இதை இன்னும் இழிவாகச் சொல்வார்கள்) அவன் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் எல்லா ஜாதியினருக்கும் – சமுதாயத்திற்கே -தீண்டத்தகாதவன்தான். ஊரை விட்டு, உறவை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவன் அவன். பெண்டாட்டி, பிள்ளைகளின் வெறுப்பிற்கு ஆளானவன். அவன் செய்த தவறு என்ன தெரியுமா? ஜாதியால், மதத்தால், பணத்தால், பதவியால் எவனையும் உயர்ந்தவன் என ஏற்றுக்கொள்ள மறுத்தான். எவன் முன்பும் தோள் துண்டை இறக்கி, இடுப்பில் இறுக்கி, உடல் சுருக்கிக் கும்பிடுவதை வெறுத்தான்.

எல்லாரும் தட்டிக் கேட்கத் தவறிய மேல் தட்டுக்காரர்களின் தவற்றைச் சுயமரியாதைக்காரன் சுட்டிக் காட்டினான்: தட்டிக் கேட்டான். கை தொட்டால் தீட்டு, கண்பட்டால் பாவம் என ஊர் ஒரத்தில் ஒடுக்கப்பட்டவன் தோளில் கை போட்டுத் தோழமை பாராட்டினான் சுயமரியாதைத் தோழன். கறுப்பு உடலில் பாயும் சிவப்புக் குருதியில் பேதமில்லை எனக்கட்டித் தழுவினான். தாழ்த்தப்பட்டவன் வீட்டில் தண்ணீர் குடித்தான். மனிதனில் நீயும் ஓர் மனிதன் என்பதை அவனுக்கு நினைவூட்டி அவன் நிமிர்ந்து நிற்கப் பாடுபட்டான்.

இந்தச் சுயமரியாதைக்காரன் தான் பெண்ணைப் போற்றினான். என் மனைவி எனக்கு அடிமையில்லை என அடிமைத்தாலியை அறுத்தெறிந்தான். பெண்குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பினான்.

தன் சுயமரியாதைத் தொண்டிற்குப் பரிசாக வீட்டில் எதிர்ப்பு. வீதியில் கேலி, அரசின் அடக்கு முறை, ஆதிக்கச் ஜாதியார் பகை, தொழில் முடக்கம், வேலை இழப்பு என இத்தனை கொடுமைகளையும் ஏற்றான். ஆனால் பெரியார் கற்றுக் கொடுத்த சுயமரியாதையை மட்டும் இழக்காமல் முற்றிய மூங்கிலாய் நின்று முறிந்து போனான்.

வயதில் அறிவில் முதியோர் – நாட்டின் வாய்மைப் போருக்கென்றும் இளையார்

தூய தொண்டர் படையின் துணையுடன் ஜாதி ஒழிப்பும் சமநிலைச் சமுதாயமும் பெற வாழ்நாள் முழுவதையும் போர்க்களத்திலே கழித்தார் பெருவீரர் பெரியார். ஓய்வு அவருக்குப் பிடிக்காது. சோம்பல் அவரைத் தொடாது. அச்சம் அவரை அண்டாது. ஆண்மை என்றும் குன்றாது. தொண்ணூற்று அய்ந்தாண்டு முதுமை வரை தொடரும் நோய்களுடன் நாள் தோறும் தொடர்ந்து பேசினார். ஊர் ஊராய்ப் பேசினார். தன் உயிர் மூச்சாம் கொள்கைக்காகவே வாழ்ந்து ஒரு நாள் தன் மூச்சை நிறுத்தினார்.

பெரியார். ஜாதியின் ஆட்சியைப் பறித்தார்; ஜாதி யின் மணிமுடியை வீழ்த்தினார்; ஜாதியின் தோள்களை வெட்டினார். ஜாதியின் கால்களை முறித்தார். ஜாதி வாலையும் ஒட்ட நறுக்கினார். ஆனால் ஜாதி ஒழிய வில்லை. மனித உள்ளத்தின் இருட்டறையில் சென்று ஒளிந்து கொண்டது; இன்னும் உயிர் வாழ்கிறது இதுவே உண்மை நிலை.

நன்றி: ‘பெரியார் என்னும் பேரொளி’,
ஆசிரியர்: புலவர் சி.முத்தையா,
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *