அண்ணா பெயரில் கட்சியை வைத்துக் கொண்டு, கொடியிலும் அண்ணாவின் உருவத்தைப் பொறித்துக் கொண்டு, ‘திராவிட’ என்று இனச் சுட்டுப் பெயரையும் இணைத்துக் கொண்ட அண்ணா தி.மு.க. – இந்தப் பெயர்களுக்குப் பின்னால் இருக்கக் கூடிய தத்துவத்தை அறிந்துள்ளதா?
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை முன்னால் வைத்துக் கொண்டு இந்து முன்னணி நடத்திய மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் சங்கிகள் கூட்டத்தில், தந்தை பெரியாரையும், அண்ணாவையும் இழிவுபடுத்தி காணொலி திரையிடப்பட்டதே (22.6.2025) குறைந்தபட்சம் அதனைக் கண்டித்து வெளிநடப்பாவது செய்ததுண்டா?
அதே மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற என்.டி.ஏ. கூட்டத்திற்காக வைக்கப்பட்டு இருந்த நுழைவுவாயிலில் தந்தை பெரியார் படம் திடீர் என்று அகற்றப்பட்டதே! (28.2.2026).
அந்த என்.டி.ஏ. கூட்டணியில் தமிழ்நாட்டில் முக்கியமான கட்சி அ.தி.மு.க. தானே! தந்தை பெரியார் படம் அகற்றப்பட்டது குறித்து மூச்சு விடாதது ஏன்?
அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் (பக்கம் 25) ஒன்றிய பிஜேபி அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்க மறுப்பதாக வெளியிட்டுவிட்டு, அந்த பிஜேபியோடு கூட்டணி வைத்துக் கொண்டிருப்பது ஏன்?
திராவிட இயக்கம் என்பது தீபாவளியைப் புறக்கணித்து தமிழ்ப் புத்தாண்டு என்ற தைத் திங்கள் முதல் நாளில் நடைபெறும் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வரலாற்றை மறந்து, அதிமுக தன் தேர்தல் அறிக்கையில் (பக்கம் 9) “ஆண்டு தோறும் தீபாவளிப் பண்டிகைக்கு குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்துப் பெண்களுக்கும் தரமான விலையில்லா சேலையும், ஆண்களுக்குத் தரமான வேட்டியும் வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளதே – இதுதான் திராவிட இயக்கக் கொள்கையா? தந்தை பெரியார், அறிஞர் அண்ணா விளக்கவுரையாற்றியதா?
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் தி.மு.க. ஆட்சியில் பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஓராயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
ஆனால் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் (பக்கம் 29) பெண்களுக்குத் தாலி வழங்கும் திட்டமாகக் கூறப்பட்டுள்ளதே – இதுதான் திராவிடர் கொள்கையா?
ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்த வேளாண் திட்டத்தை எதிர்த்து ஓராண்டுக் காலம் பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், கொட்டும் பனியிலும் போராட்டம் நடத்தினார்களே, அவற்றைச் சற்றும் பொருட்படுத்தாமல் விவசாயிகளுக்கு எதிராக ஒன்றிய பிஜேபி அரசு கொண்டு வந்த (2020 செப்டம்பர்) அந்த மூன்று வேளாண் சட்டங்களை மாநிலங்களவையில் ஆதரித்து வாக்களித்தது அதிமுக உறுப்பினர்கள் தானே! விவசாயிகளின் வேதனை வீணையின் நாதமாகத் தெரிகிறதா அதிமுகவுக்கு?
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) என்ற பெயரில் இஸ்லாமிய சகோதர மக்களைக் குறி வைக்கும் கூட்டத்திற்கு குனிந்து சரணம் பாடும் கூட்டமாக மாறிவிட்டதா அதிமுக?
மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.அய். மாநாட்டில் (7.1.2024) பங்கேற்றுப் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எங்கள் கொள்கை மதச்சார்பின்மை – பிஜேபியுடன் கூட்டணி இனி எந்தக் காலத்திலும் இல்லை” என்று இடி முழக்கம் செய்தாரே. அதற்கு நேர்மாறாக இப்போது அதிமுக பிஜேபியுடன் ஆலிங்கனம் செய்வது ஏன்? ஏன்?
“மோடியா – லேடியா? ஒரு கை பார்த்து விடுவோம்” என்று சொன்னவர் செல்வி ஜெயலலிதா. ஆனால் இப்பொழுது அதிமுக பா.ஜ.க. மோடியை “எங்கள் டாடி” என்று கூறித் தலைகீழாகக் கவிழ்ந்தது ஏன்?
தேர்தல் கூட்டணிப் பற்றிப் பேச மோடியாக இருந்தாலும், செல்வி ஜெயலலிதா போயஸ் கார்டனில் தவமிருந்த காலம் போய் – இப்பொழுது எதற்கெடுத்தாலும் எடப்பாடி பழனிசாமி டில்லிக்குக் காவடி எடுப்பது ஏன்? ஏன்?
தொகுதி மறு வரையறை என்ற பெயரில் ஒன்றிய பிஜேபி அரசு தென் மாநிலங்களின் எம்.பி.க்களை குறைத்து, உ.பி., ம.பி., பீகார் போன்ற பிஜேபி ஆளும் மாநிலங்களின் எம்.பி.க்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ள அதிமுக-வின் துரோகத்தை மன்னிக்கலாமா?
இன்னும் ஏராளம் உண்டு! அதிமுக இப்பொழுது அமித்ஷா திமுகவாக உருக்குலைந்து விட்டதே!
அதிமுகவில் உள்ள இன உணர்வாளர்கள், அண்ணாவின் உருவம் பொறித்த கொடியைத் தாங்கிப் பிடிக்கும் தொண்டர்கள் சிந்திப்பார்களா?
பிஜேபியுடன் கைகோர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், திராவிட இயக்க சித்தாந்தத்திற்குத் துரோகம் செய்யும் அதிமுகவை வாக்குச் சீட்டு மூலம் தண்டிக்க வேண்டாமா? கொள்கையை அடகு வைக்கும் கூட்டத்திற்குப் பாடம் கற்பிக்க வேண்டாமா?
திராவிட சித்தாந்தம் தலைதூக்க, இந்தியாவில் வளர்ச்சியில் முதன்மை இடத்தில் நிற்கும் திராவிட மாடல் அரசின் கரங்களை வலுப்படுத்த நன்றியுணர்வுடனும், சித்தாந்த நோக்குடனும் உதய சூரியனுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களிப்பீர்! வாக்களிப்பீர்!!
சினிமா கவர்ச்சியில் வீழ்ந்து சீரழிய வேண்டாம் – எச்சரிக்கை! எச்சரிக்கை!!

