முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றவைத்த நெருப்பு பரவி எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரளச் செய்தது

5 Min Read

தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி: ஒன்றிய பாஜக அரசின் சதி முறியடிப்பு!

மக்களவை மொத்த பலம் 543
காலியிடம் 3
பதிவான வாக்குகள் 528
மசோதா வெற்றி பெற தேவை 352
மசோதாவுக்கு ஆதரவாக பதிவான வாக்குகள் 298
எதிர்த்து பதிவான வாக்குகள் 230

புதுடில்லி, ஏப். 18- தமிழ்நாட்டுக்கு பாதிப்பை உருவாக்க இருந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதோடு இணைந்த மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக் களும் மக்களவையில் தோற்கடிக்கப்பட்டன. இந்த மூன்று மசோதாக்களுக்கும் ஆதர வாக 298உறுப்பினர்களும், எதிராக 230 உறுப் பினர்களும் வாக்களித்தனர். இந்த விவகாரத்தில் மோடி அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்ற வைத்த நெருப்பு நாடு முழுவதும் பரவி எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரளச் செய்து மசோதா தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

மாநில சட்டப்பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் கடந்த 2023ஆம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடாளு மன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு வரும் மக்களவை தேர்தலில் தான் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்த நிலையில் திடீரென ஏப்.16 (நேற்று முன்தினம்) முதல் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மசோதா, யூனியன் பிரதேசங்களில் மகளிர் இடஒதுக்கீடு அமல் படுத்தும் மசோதா ஆகியவற்றை இணைத்து ஒரே மசோதாவாக மக்களவையில் ஒன்றிய அரசு நேற்று முன்தினம் (16.4.2026) தாக்கல் செய்தது.

அரசியல் சாசன திருத்தம் (131ஆவது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவற்றை ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகம் செய்தார்.

யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026-அய் உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகம் செய்தார். இதில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை விட, தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதில் மோடி அரசு தீவிரம் காட்டியது நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மக்களவை தொகுதி எண்ணிக்கையை தற்போதுள்ள 543 தொகுதியில் இருந்து 850 தொகுதிகளாக உயர்த்தவும், இதில் இருந்து மகளிருக்கு 272 தொகுதி வழங்கவும் திட்டமிடப்பட்டது. மேலும் கடந்த 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால், இந்த மசோதா மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவது தெரிய வந்தது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். மேலும் இந்த மசோதாவை கொண்டு வந்தால் ஒன்றிய அரசுக்கு எதிராக போராடுவோம் என்று கூறி மசோதா நகலை தீயிட்டு கொளுத்தி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார். இதே போல் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதனுடன் இணைத்து கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்ப்பையும் மீறி இந்த மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இவற்றின் மீது விவாதம் தொடங்கியது. ஆளும் தரப்பிலும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் பலர் தங்கள் கேள்விகளையும் வாதங்களையும் முன்வைத்தனர். இவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் பேசினர். இந்த விவாதம் நேற்று (17.4.2026) அதிகாலை சுமார் 1 மணி வரை நீடித்தது. இதையடுத்து நேற்று  (17.4.2026) காலை மீண்டும் விவாதம் தொடங் கியது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி, அய்க்கிய ஜனதா தளம் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிவ் ரஞ்சன் சிங், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண், சமாஜ்வாடி கட்சியின் டிம்பிள் யாதவ், ஷிரோமணி அகாலி தளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். இறுதியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மிக நீண்ட விளக்கத்தை அளித்தார். இதனைத் தொடர்ந்து மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

மக்களவையின் மொத்த பலம் 543 ஆகும். இதில் 3 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது 540 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் 232 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவின் அடிப் படையில் மக்களவையில் அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாக்களை நிறைவேற்ற 352 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் பாஜக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இல்லை.

மாநிலங்களவையின் மொத்த பலம் 245. இதில் ஓர் இடம் காலியாக உள்ளது. அவையில் 244 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதில் பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கு 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளிடம் 83 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு என்ற வகையில் மசோதாக்களை நிறைவேற்ற 163 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மசோதாவை நிறைவேற்றும் அளவுக்கு மாநிலங்களவையிலும் பாஜவுக்கு பெரும்பான்மை இல்லை. இந்தச் சூழலில் மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தன.

தொகுதி மறுவரையறை, அரசியல் சாசன திருத்தம் உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீது நடந்த வாக்கெடுப்பில் 528 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள், அதாவது 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் மசோதாவுக்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் ஆம் என்று மசோதாவுக்கு ஆதரவும், 230 உறுப்பினர்கள் இல்லை என்று எதிராகவும் வாக்களித்தனர். இதன் காரணமாக இந்த மசோதா மக்களவை யில் தோல்வியடைந்தது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொள்ள இருந்த சதி முறியடிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *