திருவாங்கூர் சமஸ்தானம் (29) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

6 Min Read

டிசம்பர் மாதம் 10ஆம் தேதி 1915ஆம் ஆண்டு கொல்லம் பெரிய மைதானத்தில் அனைத்து சமுதாயக் கூட்டம் கூடியது. அன்று ஞாயிற்றுக்கிழமை. அதனால் இரு சாராரும் ஏராளமாகக் கூடியிருந்தனர். காலை 10 மணிக்குக் கடவுள் வாழ்த்தோடு கூட்டம் தொடங்கியது. முதலில் ராமன் தம்பி என்பவர், தலைவர் சங்கனாச்சேரி பரமேஸ்வரன் பிள்ளை அனுமதியுடன் பேசத் துவங்கினார். கலவரங்களைப் பற்றியும் அதனால் ஏற்படும் சமூகத் தீமைகள் பற்றியும், பொருள்கள் இழப்பு, உயிர்கள் இழப்பு, சொத்துகள் அழிப்பு, குழந்தைகள் பாதிப்பு, பாலியல் வன்முறைகள் பற்றியெல்லாம் தெளிவாகப் பேசிய அவர் சமுதாய நல்லுறவை, அனைவரும் பொறுமையோடும், சகிப்புத் தன்மையோடும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடும் அணுகினால் இந்த சேதங்களைத் தவிர்க்க முடியும் என்றும் பேசினார்.

தொடர்ந்து அய்யன்காளி சொற்பொழிவாற்றினார். தங்கள் இனத்தவர் மனிதர்களாக, மானத்தோடு வாழத்தான் போராடுவதற்கு முடிவெடுத்துப் போராடுவதாகவும், மற்றபடி யாருக்கும் எதிரியாக வாழவும், யாரையும் தங்கள் மக்கள் எதிரிகளாக நினைக்கவும் இல்லை என்று பேசினார். “புலையர்களும், மற்ற தாழ்த்தப்பட்டோரும் நாகரிக முறையில் உடை அணிய வேண்டும். அதை மேல் ஜாதியினர் ஆட்சேபிக்கக் கூடாது” என்றும், “ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார். “குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதை பெற்றோர்கள் முதல் கடமையாகக் கொள்ள வேண்டும்” என்ற அவர், “அதற்கு மேல் ஜாதியினர் தடை போடக் கூடாது” என்றும் கேட்டுக் கொண்டார். “தாங்கள் வளர்வதைப் பொறுக்காமல் மேல் ஜாதியினர் வன்முறையில் ஈடுபட்டால், தங்கள் மக்கள் பொறுமையாக அதை அணுக வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

“சாது ஜன பரிபாலன சங்கத்தின் பணிகளால், தென் திருவாங்கூர் புலைய இனப் பெண்கள் கல் மாலைகள், இரும்பு வளையங்கள் மற்ற அநாகரிகமான அணிகலன்களை இப்பொழுது அணிவதில்லை” என்று பேசிய அவர் மார்புகளை மறைக்கும் ரவிக்கையும், நல்லாடைகள் அவர்கள் பகுதியில் பெண்கள் அணிந்து மரியாதையாக வாழ்வதாகக் கூறினார். மேலும், அய்யன்காளி பேசும்பொழுது இந்தப் பகுதி ஜன்மிகள் தாழ்த்தப்பட்டோர் அதை பின்பற்றுவதை விரும்பவில்லை என்று கேள்விப்பட்டதைக் கூறி, அந்த எண்ணத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்டோர் கல் மாலைகளை அறுத்தெரிய அனுமதிக்க வேண்டும் என்று ஜன்மிகளுக்கு வேண்டுகோள் விட்டார்.

இந்தக் கல்மாலைகள் விவகாரத்தால்தான் இந்தப் பகுதியில் “இவ்வளவு பெரிய கலவரம் நடந்ததாகக் கூறிய அவர், இம்மாபெரும் கூட்டத்தில் அனைத்து ஜாதியார் முன்னிலையில் புலையப் பெண்கள் கல் மாலைகளை அறுத்தெறிய அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். (இந்தக் காரணத்திற்காகவே அந்த மாபெரும் நிகழ்ச்சியில் ‘புலையப் பெண்கள் கல்மாலைகள் கட்டாயம் அணிந்து வரவேண்டுமென்று’ சாது ஜன பரிபாலன சங்கத்தினர் புலையப் பெண்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர். அய்யன்காளி தன் கம்பீரத் தோற்றத்தோடு, தன் சிம்மக் கரலில் முழங்கியது போல் இருந்தது அவர் சொற்பொழிவு. கூட்டத்தினர், மேல் ஜாதியினர் உட்பட அமைதியாக அவர் பேச்சைக் கேட்டனர்.

அய்யன்காளியின் இடி முழக்கப் பேச்சை முடித்ததும் கூட்டத் தலைவர் சங்கனாச்சேரி பரமேஸ்வரன் பிள்ளை பேச எழுந்தார். அவர் சமூக அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தைப் பற்றித் தெளிவாகப் பேசினார். அதனால், இரு தரப்பிலும் ஏற்பட்ட இழப்புகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், அய்யன்காளி கேட்டுக்கொண்டபடி, “நமது சகோதரிகள் இந்த கல் மாலைகளை அறுத்தெரிய இங்குக் கூடியுள்ள மக்கள் அனைவருக்கும் சம்மதம்” என்ற பலத்த கைத்தட்டல்களுக்கிடையே அறிவித்தார்.

அய்யன்காளி தலைவரையும், கூட்டத்தையும் பார்த்தவாறு எழுந்தார். “இந்தக் கூட்டத்தினர் நம் பெண்கள் அணிந்துள்ள கல் மாலைகளை அறுத்தெரிய சம்மதித்து விட்டார்கள். நீங்களே அவற்றை அறுத்துத் தூர எறியுங்கள்” என்று முழக்கமிட்டார். அங்கு கழுத்தில் கல் மாலைகளோடு குழுமியிருந்த பெண்கள், தங்கள் இடுப்பில் இருந்த அருவாளை எடுத்து அந்த மாலைகளை அறுத்துத் மேடையின் ஓர் ஓரமாக வீசினர். அங்கு கூடியிருந்த ஆயிரக் கணக்கான பெண்கள் தங்கள் கல் மாலைகளை அறுத்து அங்கு எறிந்தனர். அவ்வாறு அனைத்து தாழ்த்தப்பட்டோரும் தங்கள் கல் மாலைகளைக் கழட்டி எறிந்த கல்மாலைகள் மேடைக்கு அருகில் குவியத் தொடங்கியது. மூன்றடி கல் குவியல் போல், மாலைக் குவியல் மேடைக்கு அருகில் நிறைந்தது.

கல் மாலைகள் கழட்டி (அறுத்து) எறிந்த நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டி அப்போது, “மலையாளி” என்ற செய்தித்தாள் “கல்லும், மாலையும்” என்று தலைப்பிட்டுச் செய்தி வெளியிட்டது. பெரிநாடு கூட்டத்திற்குப் பின் அருகில் இருந்த கிராமப் புறங்கள் சிலவற்றில், கல் மாலைகளை அணியச் சொல்லி, புலையப் பெண்களைக் கட்டாயப்படுத்திய மேல்ஜாதி இளைஞர்களால் சிறு சிறு கலவரங்கள் நடத்தப்பட்டன.

ஒரு புலையப் பெண் சென்ற கொண்டிருந்தபோது, ஒரு ஜன்மி குறுக்கிட்டு “உன் கழுத்திலிருந்த கல்மாலை எங்கே?” என்று கேட்டுள்ளான். அந்தப் பெண், “அதை நான் கொல்லத்தில் நடந்த அனைத்து சமுதாயக் கூட்டத்தில் அறுத்து எறிந்து விட்டேன்” என்று பதில் கொடுத்தாளாம். உடனே அந்த இளைஞன், “அப்படியா? அப்போ உனக்குக் காது எதற்கு?” என்று கூறி அந்தப் பெண்ணின் காதை அறுத்து விட்டானாம். இடது போன்ற சிறுசிறு சம்பவங்களும், அதைத் தொடர்ந்து, சிறுசிறு கலவரங்களும் ஆங்காங்கு நகர்புறங்களுக்கு, தொலை தூரத்தில் இருந்த கிராமங்களில் சிறிது காலம் நடந்தாலும், பெரும்பாலும் அந்தக் கலவரங்கள் நாளடைவில் அடங்கி விட்டன.

ஒரு ஜாதிய இழிவினை வெளிப்படுத்தும் வண்ணம் (மிருகங்களுக்கு அடையாளவில்லைகளைக் கழுத்தில் கட்டுவதுபோல்) தாழ்த்தப்பட்டவர்கள் கல்மாலை அணிந்து அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அந்த இன இழிவு ஒழிய அந்த இன மக்கள் அவ்வளவு பெரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கலவரங்கள், உயிர்ப் பலிகள், உடல் ஊனங்கள், பொருட்கள் கொள்ளையடிப்புகள், இருப்பிடங்களை தீயிட்டுக் கொளுத்தி அழித்தல், பெண்கள் மேல் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் என்று தங்கள் அடிமைச் சின்னமான கல் மாலைகள் அகற்ற உரிமை வேண்டி தாழ்த்தப்பட்ட புலைய இன மக்கள் ஒரு நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஒரு இன இழிவு அடையாளத்தை அழித்து ஒழிக்கப் போராடும் உணர்ச்சியும், மன வலிமையும் (உடல் வலிமை அந்த உழைக்கும் வர்க்கத்திற்கு இருந்தாலும், அடிமை மனப்பான்மையில் ஆண்டாண்டுகளாக ஊறிக்கிடந்த அந்த மக்கள் மன வலிமை இழந்து நின்றது அவர்களை மேல் ஜாதிக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாகப் போனது.) அவர்களுக்கு மன வலிமை உண்டாக்கிப் போராடும் துணிவைக் கொடுத்தவர் அய்யன்காளி என்ற அந்த மாமனிதர்தான்!

(பார்ப்பனர்கள் இதே உயர்வு மனப்பான்மையில்தான் தங்களைத் தனித்துவமாக உயர்த்திக் காட்ட ‘பூணூல் அணிகிறார்கள். அதற்காகவே “துவி ஜாதி பிறப்பாளர்கள்” – இரு பிறப்பாளர்கள் என்று தம்பட்டமடித்துக் கொண்டு பூணூல் போட்டுக் கொள்வதையும் ஒரு பண்டிகையாகவே “ஆவணி அவிட்டம்” என்ற பெயரில் இன்றுவரை நடத்தி வருகிறார்கள். பூணூல் போட்ட பின்தான் அந்தச் சிறுவன் முழுப் பார்ப்பனனாக ஆகிறானாம்! அதிலும் பெண்களுக்கு பூணூல் அணிய உரிமை கிடையாது. அவர்கள் இரு பிறப் பாளர்கள் இல்லை. அடிப்படையில் அவர்கள் “அவர்ணஸ்தர்கள் தான்! (சூத்திரர் களுக்கும் கீழானவர்கள்)

பெரிநாடு கலவரம் தொடர்பாக கைதான புலையர்கள் தங்கள் மீது தொடரப்பட்ட வழக்குளை நடத்த முடியாமல் தவித்தனர்.  ஏற்கெனவே ஏழ்மை நிலையில் அடிமைகளாக வாழ்ந்து வந்த நிலையில் கலவரங்களால் இருந்த சிறிதளவு பொருள்களை இழந்து, உணவிற்கே வழி இல்லாத நிலையிலேயே அவர்கள் இருந்தனர். பணமின்மையால் வழக்கு நடத்த வழக்குரைஞர்கள் கிடைக்கவில்லை.

மேலும், வழக்குரைஞர்கள் பெரும்பாலும் மேல் ஜாதிக்காரர்கள். தாழ்த்தப்பட்ட புலையர்கள் சார்பில் வழக்காட முன்வரவில்லை. அந்த நிலையில், “இலஞ்ஞிகல் ஜான் என்ற வழக்குரைஞர் அவர்களுக்காக வழக்காட முன் வந்தார். ஒரு நிபந்தனையினை விதித்து கட்டணமில்லாமல் அவர்களுக்கு வாதாட அவர் முன்வந்தார். பணத்திற்குப் பதில் ஒரு குளத்தை அவர்கள் வெட்டித்தர வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அப்படி புலைய மக்கள் உருவாக்கியதுதான் கொல்லாம் ஜில்லா பஞ்சாயத்து அருகில் இன்றும் காணப்படும் “கும்மன் குளம்”. அந்தக் குளத்தை அழகாக வெட்டிக் கொடுத்த அந்த மக்கள் அதற்கு ஏதும் பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லை.

ஜாதிய சட்டங்களை அவர்கள் மீது திணித்து நூற்றாண்டுகளாகக் கொடுமைப்படுத்தி  வந்த நம்பூதிரிப் பார்ப்பனர்கள், நாயர்கள் போன்ற அனைவருக்குமே அந்தக் குளம் இன்றுவரை பயன்பட்டு வருகிறது.

(அண்ணல் அம்பேத்கர் குடிதண்ணீர் குளமான “சவுதார” குளத்தில் (‘மகத்’ என்ற ஊரில்) 3,000 தொண்டர்களோடு குடி தண்ணீர் எடுக்கச் சென்ற போராட்டத்தை இந்த இடத்தில் நினைவு கூறுவோம்!).

புலையர்களின் மேல் ‘விசாரணை’ முறையாக நடைபெற்றது. தீர்ப்பு புலையர்களுக்குச் சாதகமாக வந்தது. 12 நாயர்கள் தண்டிக்கப்பட்டனர். கல்மாலை கழட்டிய போர் வெற்றியுடன் முடிந்தது.

(சான்று: “அய்யன்காளி” ஒரு சுருக்கமான வரலாறு!” – எம்.எல்.சோலையில்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *