மகளிர் இட ஒதுக்கீடு என்னும் பெயரால் சூழ்ச்சி

6 Min Read

ஏப்ரல் 16 முதல் கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற அமர்வில், ஒன்றிய அரசு பெண்களின் மேம்பாட்டை முன்னெடுக்க முயல்வதாகச் சொல்கிறது. ஆனால் அது ஒரு பரந்த சட்டத் தொகுப்பின் ஒரு பகுதி மட்டுமே!

அரசியலமைப்புச் சட்ட (131-ஆவது திருத்த) மசோதா 2026, மற்றும் அதனுடன் இணைந்த தொகுதி மறுவரையறை மசோதாவும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. நாடாளுமன்ற மக்களவையிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (2023-இன் 106-ஆவது திருத்தம்) சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்போது இது மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிந்தைய தொகுதி மறுவரையறையுடன் பிணைக்கப்பட்டிருந்தது.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் பிணைப்பதில் அரசாங்கம் பிடிவாதமாக இருப்பதற்கு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பதை போர்வையாகப் பயன்படுத்தித் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்துவதே நோக்கம் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

மக்களவை இடங்களைப் பெரிய அளவில் மறு ஒதுக்கீடு செய்வது, பாரதிய ஜனதா கட்சி (BJP) தேர்தல் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களுக்குச் சாதகமாகவும், வரலாற்று ரீதியாக பலவீனமாக இருக்கும் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமையும்; இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டாட்சி அமைப்பையே மாற்றியமைத்துவிடும்.

பத்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, எந்த வித உறுதியான, நியாயமான காரணங்களும் இல்லாமல், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசால் அய்ந்து ஆண்டுகள் தாமதப்படுத்தப்பட்டபோது, அதற்குப் பின் உள்ள அரசியல் நோக்கத்தை கண்டறிவது கடினமாகதாக இருக்கவில்லை. 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதலில் கோவிட்-19-அய்க் காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டது, ஆனால் இறுதியில் 2026-2027 இல் சென்சஸ் மேற்கொள்ளப்படும் என்று கமுக்கமாக அறிவிக்கப்படும்வரை, அடுத்தடுத்து நடந்த தாமதங்களுக்கு எந்தக் காரணமும் கூறப்படவில்லை.

அரசியல் சாசனத்தின்படி, 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடை யிலான மக்களவை இடப்பகிர்வு மீண்டும், 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவு வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். அதாவது, முறைப்படி நடைபெற்றிருந்தால், 2031 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பை 2026-2027-க்குத் தாமதப்படுத்தியதன் மூலம், 2031-இல் நடத்தப்படும் கணக்கெடுப்பிற்குப் பதிலாக 2026-2027 கணக்கெடுப்பைப் பயன்படுத்தி, தாங்கள் விரும்பும் காலக்கெடுவில் தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் தொடங்கலாம் என்பதை ஒன்றிய அரசாங்கம் உறுதி செய்துகொண்டது.

இப்போது, 2026-2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு தொகுதி மறுவரையறை செய்வதாக இருந்தால், அந்த நடவடிக்கை  முடிவடைய பல ஆண்டுகள் ஆகும்; எனவே 2029 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தொகுதி மறுவரையை வைத்துக் கொள்ளக்கூட ஒன்றிய அரசு தயாராக இல்லை; எனவேதான், கடைசியாக முடிக்கப்பட்ட 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையைத் தொடர ஒன்றிய அரசு மிகுந்த அவசரத்தில் இருக்கிறது.

131-ஆவது திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் 55, 81, 82, 170, 330, 332, 334A ஆகிய ஷரத்துகளைத் திருத்துகிறது. அதன் மிக முக்கியமான மாற்றங்களில் முதலாவதாக, இத் திருத்தச் சட்டம் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையின் உச்சவரம்பை அனைத்து மாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 530 என்பதை 815 ஆகவும், யூனியன் பிரதேசங்களில் இருந்து வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 20 என்பதில் இருந்து, 35 ஆகவும் உயர்த்தும். இதனால் அவையின் மொத்த எண்ணிக்கை 850 ஆக மாறும்.

இரண்டாவதாக, நாடாளுமன்ற இடங்களை வரையறை செய்வதற்கு 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பையும், எல்லை நிர்ணயத்திற்கு 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பையும் அடிப்படையாக் கொள்வது என்னும் தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் தரும் “மக்கள் தொகை” என்பதற்கான வரையறைக்குப் பதிலாக, “நாடாளுமன்றம், சட்டத்தின் மூலம் தீர்மானிக்கக் கூடிய” மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்று ‘வெளிப்படையாக எதையும் சொல்லாத’ ஒரு சூத்திரத்தை இத் திருத்தச் சட்டம் முன்வைக்கிறது.

எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்த வேண்டும் என்ற தேர்வு இனி அரசியலமைப்புச் சட்டத்திடம் இருக்காது. அதற்கு பதிலாக, நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையால் (Simple Majority) இயற்றப்படும் சாதாரண சட்டத்தாலேயே மாற்றப்படக்கூடியதாக இருக்கும். (முக்கியமான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். சாதாரண சட்டங்களுக்கு, எதிர்ப்பை விட ஆதரவாகக் கூடுதலாக ஒரு வாக்கு இருந்தாலே போதுமானது.)

மூன்றாவதாக, இது 82 மற்றும் 170 ஆகிய பிரிவுகளின் மூன்றாவது நிபந்தனையை முழுமையாக நீக்குகிறது. 1976-இன் 42-ஆவது திருத்தத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டு, 2001-இன் 84-ஆவது திருத்தத்தின் மூலம் நீட்டிக்கப்பட்ட தொகுதி எண்ணிக்கை அளவும் ஒதுக்கீடும், தங்கள் மாநிலத்தின் மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டு வந்த மாநிலங்கள் அதன் காரணமாக நாடாளுமன்ற இடங்களை  இழக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை அளித்தது. இந்தப் பாதுகாப்பு இப்போது நீக்கப்படுகிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சரவை உறுப்பினர்களும், ஒவ்வொரு மாநிலமும் கொண்டுள்ள தற்போதைய இடங்களின் விகிதம், சீரான அதிகரிப்பு மூலம் பராமரிக்கப்படும் என்று ஏற்கெனவே நாட்டிற்கு உறுதி அளித்திருந்தனர். ஆனால் இந்த உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தில் இடம் பெறவில்லை.

மாற்றமின்றித் தக்கவைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 81(2)(a), மக்களவை இடங்களின் எண்ணிக்கைக்கும் மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதம் அனைத்து மாநிலங்களுக்கும் “கூடுமான வரையில்” சமமாக இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. எனவே, புதிய தொகுதி மறுவரையறை மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையிலானதாகவே இருக்குமே தவிர, தற்போதுள்ள விகிதங்களைப் பாதுகாக்காது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில், 850 இடங்களைக் கொண்ட அவைக்கு முற்றிலும் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையிலான ஒதுக்கீடு செய்யப்படுவது, அனைத்து மாநிலங்களுக்குமிடையில் சமமற்ற அதிகரிப்புகளை நிச்சயமாக உருவாக்கும். தற்போது 543 இடங்களில் 207 இடங்களைக் கொண்டுள்ள ஹிந்தியின் இதயப்பகுதி மாநிலங்கள் எனப்படும் உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, சத்தீஸ்கர், உத்தரகாண்ட் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்கள் 366 இடங்களைப் பெறும் – இது 77% அதிகரிப்பாகும். மொத்தத்தில் அவர்களின் பங்கு 38.1% இலிருந்து 43.1% ஆக உயரும்.

தற்போது 132 இடங்களைக் கொண்டுள்ள தென்னிந்திய மாநிலங்கள் (தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளம் மற்றும் புதுச்சேரி) 176 இடங்களை மட்டுமே பெறும். இது 33% அதிகரிப்பாகும். அதே நேரத்தில் மொத்தத்தில் அவர்களின் பங்கு 24.3% இலிருந்து 20.7% ஆக குறையும்.

கிழக்கு மாநிலங்கள் 14.4% இலிருந்து 13.7% ஆகவும், வடகிழக்கு மாநிலங்கள் 4.4% இலிருந்து 3.8% ஆகவும் குறையும். மேற்கு மற்றும் வடக்கின் ஹிந்தி பேசாத மாநிலங்கள் தோராயமாக மாற்றமின்றி இருக்கும். பல பத்தாண்டுகளாகத் தங்கள் சுகாதாரக் கட்டமைப்பு, கல்வி வாய்ப்பு மற்றும் பெண்களின் அதிகாரம் ஆகியவற்றைக் கட்டியெழுப்பி, கருவுறுதல் விகிதத்தைக் குறைத்த மாநிலங்கள் இப்போது தங்கள் ஜனநாயக அதிகாரப் பங்கில் குறைவைச் சந்திக்கின்றன. அதே நேரத்தில் இந்த குறியீடுகளில் பின்தங்கிய மாநிலங்கள் அதிக இடங்களைப் பெறவிருக்கின்றன.

ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள நிதி ரீதியிலான கூட்டாட்சி, இப்போது சமூக-பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலங்களுக்குக் குறைக்கப்படும் அரசியல் பிரதிநிதித்துவத்தால் மேலும் சிக்கலாகும்.

இரண்டு முக்கிய மாநிலங்களில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, பொது விவாதத்திற்குச் சிறிதும் நேரமின்றி இந்தச் சட்டம் அவசர கதியில் கொண்டு வரப்படுவது, அதன் நோக்கத்தை இன்னும் சந்தேகத்திற்குரியதாக ஆக்குகிறது. ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 106-ஆவது திருத்தத்தின் படி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய அணுகுமுறையான, தற்போதுள்ள 543 இடங்களைக் கொண்ட மக்களவைக்குள்ளேயே, சுழற்சி முறையில் பெண்களுக்கான தொகுதிகளை ஒதுக்குவதன் மூலம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏன் செயல்படுத்த முடியாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. மக்களவையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சித் தத்துவத்தின்  அடித்தளத்தையே தாக்கும் இந்தச் சட்டத்தை வலுக்கட்டாயமாகத் திணிப்பதை எதிர்க்க வேண்டும். இந்தத் திருத்தத்தை அனுமதிக்கக் கொடுக்கும் விளைவுகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகவும் மோசமானவை.

நன்றி: (‘தி இந்துஆங்கில நாளிதழ் – 15.4.2026) 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *