சென்னை, ஏப். 9– “தொகுதி மறுவரையறை ஆபத்து என்றும் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா? என்றும் தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்” என்றும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளப் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு வருமாறு:–
தெற்கைப் புயலாக மாற்றாதீர்
தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?
தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!
தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்தே தீர வேண்டும்!
தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்?
2001–ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமரின் பதில் என்ன?
5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?
“நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரை ஏப்ரல் 29–க்குப் பிறகு கூட்ட வேண்டும்” என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?
அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?
எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?
தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

