ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாட்னா, ஆக.27 மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, “தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழி முறை. காந்தியார் மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது,” என்று குற்றஞ்சாட்டினார். பிகாரில் மகா கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக ராகுல் காந்தி தொடங்கிய வாக்குரிமை பயணம், ஓர் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. பீகாரில் உள்ள அராரியா நகரில் ஓர் உணவகத்தில் மகா கூட்டணித் தலைவர்களுடன் ராகுல் காந்தி தேநீர் அருந்தும் காணொலியை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) கட்சியின் தீபாங்கர் பட்டாச்சார்யா, விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானி, மகாத்மா காந்தியாரின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி மற்றும் பிகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவர்களுடன் ராகுல் காந்தி பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ். தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துகிறது. அந்த அமைப்பு மகாத்மா காந்தி மீதும் தொடர்ந்து தனிநபர் விமர்சனத் தாக்குதல்களை நடத்தியது. காந்தியார் குறித்து ஆர்.எஸ்.எஸ். எந்த அளவுக்கு அவதூறு பரப்பியது என்பதை மக்கள் நினைவில் கொள்ளவில்லை. காந்தியார் பற்றி ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து பொய்களைப் பரப்பி வந்தது,” என்று தெரிவித்தார்.