சென்னை, ஜூன் 03 ‘வீரியம் இல்லாத கரோனா வைரஸ் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது’ என்று மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கல்வி உபகரணம்
சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தமிழ்நாடு அரசு ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. முதலமைச்சரைப் பொறுத்தவரை, பள்ளி கல்விகளின் தரம் இன்றைக்கு இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் வருவதற்கு தொடர்ச்சியாக இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டப்பேரவை தொகுதியிலும் ஆங்காங்கே இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் கல்விக்கான உபகரணங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.
கரோனா வைரஸ்
வீரியம் இல்லாத கரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவிக்கொள்ள வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தும்மல், இருமல் வந்தால் கைகளால் மூடிக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள வயது முதிர்ந்தவர்கள், இணை நோய் பாதிப்புள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தொடர்ந்து 5 ஆண்டுகளாக அறிவுறுத்தி வருகிறோம். அதுவேதான் இப்போது நீடிக்கிறது. புதிய கட்டுப்பாடுகள் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.