குவைத் சிட்டி, மே 27 மத்திய கிழக்கில் முக்கிய நாடுகளில் ஒன்றான குவைத்தில் இப்போது திடீரென பல ஆயிரம் பேரின் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒரே இரவில் இதுபோல பல ஆயிரம் பேரின் குடியுரிமை மறுக்கப்பட்டது
மத்திய கிழக்கில் உள்ள ஒரு குட்டி நாடு தான் குவைத். இது ஈராக்கிற்கும் சவுதிக்கும் இடையே நடுவில் அமைந்துள்ளது. இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே 50 லட்சத்திற்குக் கீழ் தான் இருக்கும். அதிலும் கூட பெரும்பாலானோர் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான். அதாவது மற்ற மத்திய கிழக்கு நாடுகளைப் போலவே இங்கும் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் மக்கள் வேலைக்காக வருவார்கள். அதுபோல பல லட்சம் பேர் குவைத்தில் இருக்கிறார்கள்.
37 ஆயிரம் பேர் குடியுரிமை ரத்து
இதற்கிடையே குவைத் அரசு திடீரென இப்போது சுமார் 37 ஆயிரம் பேரின் குடியுரிமையை பறித்துள்ளது. ஒரே இரவில் இத்தனை பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலானோர் பெண்கள் எனக் கூறப்படுகிறது. அப்படி திடீரென தனது குடியுரிமையை இழந்த பெண் தான் லாமா. முந்தைய நாள் வரை குவைத் குடிமகளாக இருந்தலாமா, இப்போது நாடற்ற நபராக இருக்கிறார்.
குடியுரிமை ரத்து குறித்து அதிகாரப்பூர்வமாக முதலில் எந்தவொரு தகவலும் வரவில்லையாம். வெளியே சென்றிருந்த லாமா, தனது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த முயன்றுள்ளார். இருப்பினும், அது ஏற்கவில்லை. விசாரித்ததில் திருமணத்தின் மூலம் பெறப்பட்ட அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டதால் அவரது வங்கிக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது அதன் பின்னரே தெரிய வந்தது. குவைத் அரசின் அதிரடி நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.