தஞ்சை, மே. 2- ‘பழகு முகாமின்’ 5 ஆம் நாளில் காலையில் பெரியார் பிஞ்சுகள் அனைவரும் சேர்ந்து 90 மரக்கன்றுகளை நட்டனர்.
‘பெரியார் பிஞ்சு’ மாத இதழ், ‘பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்’ (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இரண்டும் இணைந்து நடத்தி வரும், பழகு முகாமின் இறுதி நாளான 1.5.2026 வெள்ளிக்கிழமை அன்று, வழக்கம்போல் உடற்பயிற்சிகள் முடித்து, காலை 7:15 மணிக்கு, வேளாண்மைத்துறை வளாகத்தின் முன்புறம் உள்ள காலி மனையில், பெரியார் பிஞ்சுகள் மரக்கன்றுகள் நட்டனர்.
இதில் மருதமரம், இலுப்பை, நாவல், பூங்கண், மயில் கொன்றை ஆகிய 5 வகை மரங்கள் இடம் பெற்றிருந்தன. பெரியார் பிஞ்சுகள் 90 பேர் இருந்ததால் 90 மரக்கன்றுகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
கூடுதலாக, பேராசிரியர்கள் 10 மரக் கன்றுகள் நட்டனர். ஆக மொத்தம், 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
முன்னதாக, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகழ்நிலைப் பல்கலைக்கழகம்) உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் மற்றும் இயக்குநர், புத்தாக்கத் துறை பேராசிரியர் முனைவர் குமரன் சண்முகம் மற்றும் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகிய இருவரும் இணைந்து பச்சைக் கொடியை அசைத்து, மரக்கன்று நடும் நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், வேளாண்மைத் துறை அலுவலர் பாண்டியன் மற்றும் துரைராஜ், கல்வியில் துறை பேராசிரியர் ஞான செல்வம், முனைவர் ஆனந்த், வணிகவியல் துறைப் பேராசிரியர் முனைவர் சுபேந்திரன், வேதியியல் துறைப் பேராசிரியர் முனைவர் மனோகரன், முனைவர் சந்திரகுமார் பீட்டர், கணினியியல் துறை புல முதன்மையர் பிரபு மற்றும் கட்டட எழில்கலைத் துறை பேராசிரியர்கள் நரேந்திர பிரசாத், திருமால் முருகன், கல்வியியல் துறை உதவிப் பேராசிரியர் சக்திவேல் முருகன், உடற்கல்வியியல் துறை இயக்குநர் முனைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
