தி.மு.க.வை வீழ்த்திவிட்டால், திராவிடத்தை வீழ்த்தலாம் என்ற கனவு பலிக்காது தொல்.திருமாவளவன் பேச்சு

viduthalai
1 Min Read

சென்னை, ஏப். 9- தி.மு.க.வை வீழ்த்திவிட்டால் திராவிடத்தை வீழ்த்தலாம் என்ற கனவு விசிக இருக்கும் வரை பலிக்காது என்று திருமாவளவன் கூறினார்

திருமாவளவன்

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று (8.4.2025) சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

“முசுலிம்கள் கட்டுப்பாட்டில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாகக் கூறி, பிற மதத்தவருக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் பாஜகவினரே பரப்புகின்றனர்.

இந்து, கிறித்தவர்களின் சொத்து குறைவாக இருக்கிறது என்பதற்கு ஏதாவது புள்ளி விவரம் இருக்கிறதா? இந்துகளை இந்துக்களாக உணர வைக்க முடியாததால் சிறுபான்மையினருக்கு எதிராக திசை திருப்புகின்றனர். “வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேறும்போது அனைவருக்கும் எதிர் கருத்து கூற வாய்ப்பளிக்கப்பட்டது. நள்ளிரவு வரை பேச அனுமதி வழங்கப்பட்டது.

மேலோட்டமாக பார்த்தால் அனைத்தும் ஜனநாயக முறையில் நடந்தேறியதுபோல தெரியும். எனினும், பாஜகவிடம் உள்ள பெரும்பான்மையை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயகத்தை படுகொலை செய்தனர். இதுதான் நவீன பாசிசம்.

30 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகிறார். அதன்பிறகு எங்கள் வாரிசுகள் வந்து அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை தூக்கி எறிவார்கள்.

கனவு பலிக்காது

திமுகவை வீழ்த்திவிட்டால் திராவிடத்தை வீழ்த்தலாம் என்ற அவர்களது கனவு விசிக இருக்கும் வரை பலிக்காது. கூட்டணியில் எத்தனை சீட் வாங்குகிறோம் என்பது முக்கியமல் – சட்டப்பேரவையில் எங்கள் சார்பில் ஒற்றை குரல் ஒலித்தாலும் அது எங்கள் கொள்கைக் குரலாக ஒலிக்கும்,” என்று அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், விசிக எம்எல்ஏக்கள் ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *