இலட்சியமும், கொள்கையும்தான் முக்கியம் என்று சூளுரைத்து
நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர்
தி.மு.க. தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
இலட்சியமும், கொள்கையும்தான் முக்கியம் என்று சூளுரைத்து நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் தி.மு.க. தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின்! ஜனநாயக மரபுப்படி தனிப்பெரும்பான்மை இல்லாவிடினும் அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கவிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நமது வாழ்த்துகள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் வெளிவந்துவிட்டன.
சாதனைகளைச் சரித்திரமாக நாளும் நிகழ்த்திக் காட்டியது தி.மு.க. ‘திராவிட மாடல்’ ஆட்சி. ஒன்றிய
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசால் கேள்விக்குறியாக்கப்பட்ட தமிழ்நாட்டு உரிமைகளைக் காத்ததும், மீண்டும் பழைய வர்ண தர்மத்திற்கே வகை செய்யத் துடிக்கும் நிலைகளை எதிர்த்து ஓங்கிக் குரல் கொடுத்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் நடத்தப்பட்டு திக்கெட்டும் பாராட்டப் பெற்ற ஆட்சி – எதிர்க்கட்சியாக அமர வைக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டு வாக்கா ளர்கள் தந்த அதிர்ச்சியான முடிவுகள் என்பது உண்மை என்றாலும், இது முதிர்ச்சியான முடிவுகள் அல்லவே என்று உலகம் கேள்வி எழுப்பும் நிலைதான். என்றாலும், மக்கள் நாயகமான ஜனநாயகத்தில் பல நேரங்களில் இப்படிப்பட்ட தேர்தல் தீர்ப்புகள் வருவது உண்டு.
ஜனநாயகத்திற்கான தனித்தன்மையாகும்!
சில நேரங்களில், நீதிமன்றத் தீர்ப்புகளே கூட ஏற்க முடியாத வகையில், நல்ல தீர்ப்புகளாக அமை யாதபோதுகூட, அதனை ஏற்பதுதான் முறையானது என்ற உண்மைபோல, மக்கள் மன்றத் (தேர்தல்) தீர்ப்பையும் ஏற்பதே ஜனநாயகத்திற்கான தனித்தன்மையாகும்.
அதன்படி வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சிறந்த நடிகர் என்று திரையுலக நாயகர்களில் ஒருவராகத் திகழ்ந்த திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஜனநாயக மரபுக்கேற்ப நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாற்றம் என்ற பெயரில் இது நிகழ்ந்திருந்தாலும், திரைக் கவர்ச்சி – அதுவும் இளையர்களின் மோகத்தின் அறுவடையாகும் இது, ஒரு கவர்ச்சிப் புயலாகி, தமிழ்நாட்டில் அடித்துள்ளது!
தேர்தல் அரசியலில்
இது ஒரு முக்கிய திருப்பம்!
இதில் மிகப்பெரிய விபரீதம், ‘ஓர் ஆட்சியின் சாதனைக்குப் பரிசு தோல்விதானா?’ என்ற கேள்விக்கு எளிதான பதில் கிடைக்க காலம் மக்களை காத்திருக்கச் செய்கிறது!
மக்களின் விருப்பம் என்பது ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் அரசியலில் இது ஒரு முக்கிய திருப்பம்.
2 ஆண்டுகால கட்சியின், நிறுவனராக, ஆளுங்கட்சியை நோக்கி கேள்வி மேல் கேள்வி கேட்ட நிலை இனி மாறி, மற்றவர்களின் கேள்விகளுக்கு, குறிப்பாக தி.மு.க.வும், அரசியல் தெளிவுள்ள அறநெறியாளர்களும் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்தே தீர வேண்டிய கட்டா யத்திற்கு இந்த ஜனநாயகத் தீர்ப்பின்மூலம் தள்ளப்பட்டு இருக்கிறார் முதலமைச்சராகவிருக்கும் த.வெ.க. தலைவர்!
நீண்ட அனுபவத்தினைப் பெற்று உழைப்பின் உருவமாகத் திகழுபவர் மானமிகு மு.க.ஸ்டாலின்!
நேர்மையும், நெஞ்சுரமும், அரசியலில் வெற்றி நீண்ட அனுபவத்தினைப் பெற்று உழைப்பின் உரு வமாக இன்றும், நாளையும் உள்ள தி.மு.க.வின் தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தத் தோல்வி கண்டு சிறிதும் சோர்வடைந்து சுருண்டு விடவில்லை.
இளைஞராக இருந்து பொதுவாழ்வில் ஈடுபட்ட காலம் முதலே நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் அவர்! தேர்தல் முடிவுகள் தமக்குச் சாதகமாக அமைய வில்லை என்றாலும், முழுமையாக முடிவுகள் வெளி வரும் முன்பே மூலையில் முடங்கிப் போகாமல், அண்ணா அறிவாலயத்திற்கு நேற்று (4.5.2026) மாலையே வந்து, அந்தத் தோல்வியை வெற்றியாக்கும் மனத்திண்மையுடன் சுருக்கமும், உருக்கமுமான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் (குறள் 580)
என்பதற்கேற்ப, அவருக்கே உரித்தான ஒப்பற்ற பரிபக்குவமான அந்த அறிக்கை அவரது உணர்வுகளின் பண்பாடாக அமைந்துள்ளது.
இலட்சியமும், கொள்கையும்தான் முக்கியம்!
‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன்.
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன், தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே, இலட்சியமும், கொள்கையும்தான் முக்கி யமே தவிர, வெற்றி – தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்!
அதனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசி யல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காக சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்’’ என்று பிரகடனப்படுத்தியுள்ளார்!
போதுமான பெரும்பான்மை பெறாத ஓர் ஆட்சி யைத் தான், தமிழ்நாட்டு வாக்காளர்கள் நாளை முதல மைச்சராகப் பொறுப்பேற்கக் கூடிய த.வெ.க. தலைவர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்குத் தந்துள்ளனர்!
‘மில்லியன் டாலர்’ கேள்வி
அந்தப் பிரச்சினையோடு, அவர் அளித்திட்ட பல்வேறு வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றிக் காட்ட வேண்டியது முக்கிய ‘ஜனநாயகன்’ கடமை. அதை எப்படி ஆற்றுவார் என்பது அவர்முன் உள்ள ‘மில்லியன் டாலர்’ கேள்வியாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
5.5.2026
