இந்திக்கு இங்கே இடமில்லை (4)- 23.1.1968 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அண்ணா பேசியது: நேற்றைய தொடர்ச்சி…

Viduthalai
9 Min Read

அறிஞர் அண்ணா

போராட்டத்தில் பல முனைகள் இருப்பதுபோல் காதலில் கூட பல முனைகள் இருக்கின்றன. சில காதல் ராட்சஸக் காதல். ராட்சஸக் காதல் என்று சொல்வது காதைப் பிடித்து இழுப்பது, கிள்ளுவது, குத்துவது என்று இப்படிச் செய்தால் காதல் வரும். என் அனுபவத்தில் இந்த வடநாட்டுக் காதல் அரசியல் காதலைச் சொல்கிறேன் – வடநாட்டுக் காதலில் அவர்களை மீறி நாம் நடப்போம் என்று தெரிந்தால்தான் கொஞ்சம் அவர்கள் இறங்கி வருவார்களே தவிர வேறு வழியில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்த காரணத்தினால்தான் இந்தத் தீர்மானம் கொண்டுவரப் பட்டிருக்கிறது.

டில்லிக்கு எட்டாதா?

இதைப் பார்த்தவுடன் வடநாட்டவர்கள் இவர்கள் கட்டு மீறிப் போய்விட்டார்களே என்று எண்ணிக்கொண்டு பயப்படுவார்கள் என்று நான் சொல்லவில்லை. திரு. கருத்திருமன் அவர்கள் பேசும்போது ஒரு இடத்தில் சங்கடமாக இருந்தது. பிரிவினையைப் புகுத்துகிறேன் என்று அவர்கள் சொன்னது சங்கடமாக இருந்தது.
மறுகணம் அதில்கூட எனக்கு மகிழ்ச்சி; எப்படியா வது இந்தச் செய்தி டெல்லிக்கு எட்டாதா, அப்படி எட்ட, பிரிவினை கேட்கிறார்களாமே என்று அவர்கள் வழிக்கு வரமாட் டார்களா என்று அற்ப ஆசை. ஆகவே என்னைக் கண்டிப் பதாக நினைத்துக்கொண்டு சொல்வதைக்கூட அது நம் பிரச் சினைக்கு பரிகாரமாக பயன்படுமானால் அதை மிக்க திருப்தி யோடு வரவேற்கத் தயார். இந்த மொழிச்சட்டத்தோடு வந்த தீர்மானம் இருக்கிறதே அந்தத் தீர்மானத்தில் சங்கடங்கள் இருக்கின்றன என்ற ஒன்றுதான் நம் அவையில் உள்ள எல்லோ ரும் சேர்ந்து ஒத்துக்கொண்டிருக்கிற கருத்து. மற்றவற்றில் அபிப்பிராயபேதங்கள் இருக்கலாம், இல்லையென்று சொல்லவில்லை.
அந்த அபிப்பிராய பேதங்களை உடனடியாக யாராலும் மாற்றிக்கொள்ள முடியாது. இந்த ஒன்றில் ஒருமித்த கருத்து இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொல்லும் போது இந்திய அரசில் உள்ளவர்கள் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டுமென்று சொன்னார்கள். அதை நான் ஏற்றுக்கொண் டிருக்கிறேன். அதிலிருந்து நல்லதொரு பரிகாரம் கிடைக்கு மானால் என்னைவிட மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள் வேறு இருக்க முடியாது. மகிழ்ச்சி அடைவேன் என்று சொல்லும் போது திருப்தியடைவேன் என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஏனெனில் நாங்கள் அடைய வேண்டுமென்று கருதுகிற லட்சியத்தில் ஓரளவுதான் அது தருகிறது.

ஆட்சி மொழிகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பழைய ஏடுகளை யெல்லாம் காங்கிரஸ் நண்பர்கள் இப்போது படிக்கிற பழக் கத்திற்கு வந்திருக்கிறார்கள். பழைய நம் நாடு, முரசொலி இவற்றைப் படித்தால் நாங்கள் சொல்வதைப் புரிந்து கொள்வார்கள்!
அப்போது தேசிய மொழிகள் 14 ஆக இருந்தன. இந்தியாவின் தேசிய மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழிகளாக ஆக்கப்பட வேண்டும்; அப்படி ஆக்கப்படுகிற கால வரையில் ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சிமொழியாக நீடிக்க வேண்டும் என்பது எங்கள் கழகத்தின் தீர்மானம்- திட்டம் அது நிறைவேறுகிற வரையில் நாங்கள் முழுத் திருப்தி அடைவோம் என்று சொல்வதற்கில்லை.

ஆனால் இப்போது வந்திருக்கிற சட்டம் இருக்கிறதே. இது உங்களுக்கு எப்படிப் படுகிறது என்று கேட்டார்கள். அது எனக்கு எப்படிப் படுகிறதென்றால் மழை பெய்கிறபோது குடை பிடிக்காவிட்டாலும் தலைக்கு மேலே துணியை வைத்துக் கொண்டு பிடித்துக்கொள்வதுபோல் உடனடியாக இந்தி வந்துவிடாமல் ஆங்கிலத்தை வைத்துத் தடுக்கிறோம். அப்படித் தடுத்துக் கொண்டிருக்கும்போது 14 மொழிகளுக் காகவும் பாடுபட்டு அவற்றை வளரச்செய்து-திரு. பால சுப்பிரமணியம், திரு. சங்கரய்யா அவர்கள் சொல்வது போல் இந்திய அரசு இந்திக்கு மட்டும் சலுகை காட்டுகிற அந்தத் திட்டத்தை மாற்றி, எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்து கொடுத்து, எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் அதற்குரிய சலுகைகளைக் கொடுத்து வளரச் செய்வார்களானால் நாம் அந்த நிலைக்கு வரமுடியும்.
அதுவரை கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்ள வேண்டும். அப்படிப் பொறுத்துக்கொள்கிற நிலையில் இந்தி நுழைந்து விடுமானால் பிறகு நாம் தலைதூக்க முடியாது என்பதால் இந்த மொழிச் சட்டம் இந்தி வரும் வேகத்தைத் தடுக்கிறது.
அதுவரையில் நாட்டு மக்களுக்கு ஒரு ஆதாயம் இருக் கிறது என்பதில் அய்யமில்லை. நான் அதுபற்றி அபிப்பிராயம் கொள்வதாக இங்கு குறிப்பிட்டார்கள், நான் மிகுந்த ஜாக்கிரதையோடு அபிப்பிராயம் சொன்னேன்.

பறித்துவிடும்

பிரதம மந்திரி அவர்கள் என்னைக் கேட்டபோதும் சொன்னேன்—பத்திரிகை நிருபர்கள் கேட்டபோதும் சொன்னேன். எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் கழகத்தின் லட்சியம்-தேசீய மொழிகள் எல்லாம் ஆட்சி மொழியா வதைத்தான் எங்கள் லட்சியமாகக் கருதுகிறோம். இதுவரை யில் ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கவேண்டு மென்ற அளவிற்கு சட்டம் வருகிறது என்ற முறையில் நாங்கள் திருப்தி அடையாவிட்டாலும் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி மக்கள் திருப்தி அடைவார்கள் என்று சொன்னேன். அதற்குப் பிறகு தீர்மானத்தைப் பார்த்தவுடன், நான், தகுந்தவர்கள் மூலம் சொல்லி அனுப்பினேன்.
இந்தத் தீர்மானம், சட்டம் கொடுப்பதைப் பறித் துக் கொள்வதாயிருக்கிறது. இது இந்திக்காரர்களின் எதிர்ப் புக்குப் பயந்து நீங்கள் போடுவதாகயிருந்தாலும், இது உள்ள படியே இந்தச் சட்டத்தின் மூலம் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிற பலனை அது பறித்துவிடும்.
இதோடு இணைந்து அது வரும் என்றால் எங்கள் கழகம் வாக்களிக்காது என்று பிரதமரிடம் தெளிவுபடுத்தினேன். நான் தெளிவுபடுத்தியும் அவர்கள் தள்ளிவிட்டதில் ஆச்சரியப் படுவதற்கில்லை.
அது நிறைவேற்றப்படாத நாளில், பெங்களூர் என்று கருதுகிறேன் – அப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜ் அவர்கள் தெளிவாக பத்திரி கைக்கு ஒரு அறிக்கை கொடுத்தார்கள்.
“இத் தீர்மானம் சரியல்ல, இந்தத் திருத்தத்தோடு நிறை வேற்றக்கூடாது” என்று அவர்கள் அறிக்கை கொடுத்தார் கள். ஆனால் அவர்கள் டெல்லிக்குப் போய் சேருவதற்குள் அதை நிறைவேற்றி பத்திரிகைகளில் செய்தியைப் போட்டு அதைப் படிக்கும்படியாகத்தான் செய்தார்களே தவிர காமராஜரின் வார்த்தைக்கு உரிய மதிப்பு அளிக்கவில்லை.

வருந்தத்தக்கது

உள்ளபடியே அரசியல் கட்சி வேறுபாடுகள் எப்படி யிருந்தாலும் தமிழன் என்ற முறையில் மிக எளிய குடும்பத் தில் பிறந்து இந்தியா முழுவதும் பாராட்டத்தக்க நிலையைப் பெற்ற ஒரு பெருமகன் இங்கு இழிவுபடுத்தப்பட்டார் என்ற வகையில் அதை மிகப் பலமாக கண்டிப்பதற்கும் வருத்தப் படுவதற்கும் எல்லாத் தமிழர்களுக்கும் உரிமை இருக்கிறது.
ஆனால் இதில் வருந்தத்தக்கது என்னவென்றால் – ஆச்சரியப்படத் தக்கது என்னவென்றால் அவருடைய வார்த்தை யைப் பிரதமர் கேட்காதது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருக்கிற இரண்டு-மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் — (நல்லவேளையாக இரண்டு-மூன்று பேர், இன்னும் அதிகம் போயிருந்தால் இந்த அசிங்கம் அதிகமாகத் தெரிந்திருக்கும்-) பாராளுமன்றத் தில் இரண்டு – மூன்று பேர், ராஜ்ய சபையில் இரண்டொரு வர், இவர்கள் பேச்சுக்களைப் படித்துப் பார்த்தீர்களானால் தீர் மானத்தையும் சேர்த்துத்தான் ஆதரிக்கிறார்கள்,-தீர்மானத் தையும் ஆதரிக்கிறார்கள், சட்டத்தையும் ஆதரிக்கிறார்கள்.

சிறப்புக் கட்டுரை

நண்பர் கருத்திருமன் அவர்கள் கேட்கிறார்கள்-“சட்டம் வந்தவுடனே எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த வர்களைக் கூட்டிப் பேசியிருக்கக் கூடாதா?” என்று
இந்தத் திருத்தத் தீர்மானத்திற்குப் பிறகு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி கூடிற்றா? காமராசர் அவர்கள் சொல்லியிருப்பதை எதிர்த்து பாராளுமன்றத்தில் ஓட்டுப் போட்டார்களே, கேட்டீர்களா? கேட்காதது மட்டுமல்ல.
நான் சொல்லுகிற வரையில் அப்படிச் சிலர் ஓட்டுப் போட்டு விட்டார்கள் என்று வருத்தம் தெரிவித்தீர்களா?…… இனியாவது தெரிவியுங்கள். ஏனென்றால் இன்றைக்கு ஒரு தொடர்பு இல்லாமல் போய்விட்டது.

காலால் கடந்த கண்டுபிடிப்பு

ஒரு கட்சிக்கும் இன்னொரு கட்சிக்கும் தொடர்பு இல்லா தது மட்டுமல்ல. ஒரு கட்சிக்குள்ளேயே தொடர்பு இல்லாமல் போய்விட்டது. காமராசர் அவர்கள் ஒரு அறிக்கை விடுகிறார். அவருடைய கட்சியைச் சேர்ந்த பிரதமர் அதைக் கேட்காமல் தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்.
அவருடைய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே அவர் சொல்லியிருப்பதை எதிர்த்துப் பாராளுமன்றத்தில் ஓட்டுப் போடுகிறார்கள். இவ்வளவும் நடந்த பிறகு இப்போதுதான் சொல்லுகிறீர்கள் “ஓஹோ; நிறையத் தவறு இருக்கிறது; தீது இருக்கிறது, சங்கடம் இருக்கிறது” என்று. காலம் கடந்து நீங்கள் கண்டுபிடித்தீர்களே என்று பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.
இவைகளை நீக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு என் முழு ஒத்துழைப்பு உண்டு; அப்படி நான் ஒத்துழைப்புத் தருகிற நேரத்தில் மற்றதை விட்டு விட்டு ஒத்துழைப்பைக் கொடு என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்; அவர்கள் தங்கள் கொள்கை எப்படி சிலாக்கியமானது என்று கருதுவார்களோ அதே மாதிரி நானும் கருதுவதற்கு எனக்கு உரிமை அளிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
தீர்மானத்தைப் பொறுத்த வரையில் ஏற்பட்டிருக்கக் கூடிய சங்கடங்களை நீக்க யார் முயற்சி எடுத்துக்கொண்டாலும் அதற்குத் துணை நிற்கத் தயாராக இருக்கிறேன். நண்பர் கருத்திருமன் சொன்னார்-“திரு. சுப்பிரமணியம் இவரைக் கையைக் காட்டுகிறார்; இவர் அவரைக் கையைக் காட்டுகிறார்; எனக்கு ஒன்றும் புரியவில்லையே” என்று. ஒன்றும் புரியவில்லை என்பது அல்ல. அவருக்கும் சில சங்கடங்கள்.
இப்போதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவ ராக வந்திருக்கிறார்; அவர் இனிமேல்தான் காலை ஊன்றி நிற்க வேண்டும்; நிற்பார் என்று கருதுகிறேன்; நிற்க விடுவார்கள் என்று எண்ணுகிறேன்; நிற்க வேண்டுமென்று ஆசைப்படு கிறேன்.
அப்படி நின்ற பிறகு என்னிடத்தில்கூட கேட்காமல் பல காரியங்களைச் செய்ய முடியும்; ஆகையால்தான் இன்றைய தினம் நான் செய்யவேண்டுமென்று கருதுகிறார்.
அதோடு மட்டுமல்ல, முதலமைச்சர் அல்லவா இதைச் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்.

வித்தியாசம்

முதல் அமைச்சர் பதவியை நான் எப்படிக் கருதுகிறேன் என்பதற்கும், அவர் எப்படிக் கருதுகிறார் என்பதற்கும் கொஞ் சம் வித்தியாசம் இருக்கிறது. நான் முதல் அமைச்சர் என்ப தால் உடனே நான் சொல்வதை எல்லோரும் கேட்பார்கள் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
நான் சொன்னதைக் கேட்டுக்கொண்டு இருந்த வர்கள் தொகை மார்ச் 5-ம் தேதி இருந்ததை விட மார்ச் 6-ம் தேதியிலிருந்து குறைவு; ஆட்சிக்கு வந்தால் அந்தச் சரிவு ஏற்படத் தான் செய்யும்.
உள்ளத்தில் பட்டதை எடுத்துச் சொல்ல கட்சித் தலைவரால் முடியும் அளவுக்கு ஆட்சித் தலைவரால் முடியாது. ஆகையால் தான் கட்சித் தலைவராக இருப்பதை வாய்ப்பாகக் கருதி நீங்கள் சொல்லலாமே; என்னைவிட உங்களுக்கு திரு.பிரும்மானந்த ரெட்டி அவர்களும், திரு. நிஜலிங்கப்பா அவர்களும் நீண்ட நாள் நண்பர்களாயிற்றே!” என்று சொன்னேன்.
நம் நண்பர் மார்ட்டின் இளைஞர் – 33 வயது. அவர் கேட்டார்-“உனக்கும் திரு. நம்பூதிரிபாத் அவர்களுக்கும் சிநேகமாமே ” என்று. திரு. நம்பூதிரிபாத் லெஃப்ட் கம்யூ னிஸ்ட்; நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகம்; திராவிட முன்னேற்றக் கழகமும் லெஃப்ட் கம்யூனிஸ்ட்டும் தோழமைக் கட்சிகளாக இருக்கின்றன; இப்படி இழுத்தால் கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாம் என்று அப்படிக் கொண்டுபோய் இணைக்கிறார்.
திரு. நம்பூதிரிபாத் அவர்களும், திரு. சுப்பிரமணியம் அவர்களும் ப்ரிவி கவுன்ஸில் வரை போய் வழக்காடினார்களா என்ன? (சிரிப்பு) பரம்பிக்குளம் – ஆளியாறுத் திட்டம் குறித்து முதல் ஒப்பந்தம் ஏற்பட்டதே சுப்பிரமணியம் காலத்தில்தான் -ஏதோ மரியாதைக் குறைவாகச் சொல்லுவதாக எண்ணக் கூடாது. என் நெருங்கிய நண்பர் என்ற முறையில்தான் சொல்லுகிறேன்.
நான் முதலமைச்சர் ஆனவுடன் பரம்பிக்குளம் – ஆளியாறுத் திட்டம் சம்பந்தமாகக் கேரள முதலமைச்சரை இரண்டு தடவைகள் சந்தித்தேன் – ஒன்றும் தேர் நகரவில்லை. இந்தப் பிரச்சினையில் திரு. சுப்பிரமணியம் அவர்கள் செய்ய வேண்டிய காரியம் இன்னும் நிரம்ப இருக்கிறது என்று மறுபடியும் வலியுறுத்திச் சொல்லுகிறேன்.

தப்பான அர்த்தம்

“எவேடிங் தி இஷ்யூ” என்று சொல்வதை, நழுவி விடுகி றார்கள் என்று குறிப்பிட்டார்கள். ஆங்கிலத்திலிருந்து தமி ழுக்கு வரும்போது கொஞ்சம் நழுவிப் போய்விடுகிறோம். “நழுவி விடுகிறோம்” என்றால் கொஞ்சம் தப்பு அர்த்தம் ஏற்படும்.
“எவேடிங் தி இஷ்யூ” என்றால் தப்பு அர்த்தம் கொடுச் காது. திரு. மார்டின் அவர்கள் தன் வழக்கை எடுத்து வாதா டும்போது தனக்கு பலஹீனமான குறிப்பைப் படிப்பாரா? அதை எதிரி வக்கீல் அல்லவா கிளப்புவார்?
(தொடரும்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *