புதுடில்லி, மார்ச் 23- அமெரிக்காவில் இருந்து மேலும் 295 இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக நாடாளு மன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது.
இந்தியர்கள் நாடு கடத்தல்
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 104 இந்தியர்கள் ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியர்களுடன் வந்த விமானம் கடந்த மாதம் 5ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தரையிறங்கியது.
இந்தியர்களின் கை, கால்களில் சங்கிலி பூட்டப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து மேலும் 295 இந்தியர்கள் இரு குழுக்களாக ராணுவ விமானங்களில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போதும் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு பூட்டப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
நாடாளுமன்றத்தில் கேள்வி
இந்த நிலையில் 22.3.2025 அன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த ஆண்டு அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளவர்களின் விவரம் அரசுக்கு கிடைத்துள்ளதா?
நாடு கடத்தப்படுபவர்களுக்கு போதுமான வசதிகளை செய்து தருமாறு அமெரிக்க அதிகாரிகளிடம் அரசு கோரிக்கை விடுத்துள்ளதா?
இந்தியர்கள் கை, கால்களில் விலங்கு பூட்டி அனுப்பி வைக்கப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் மற்றும் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளிடம் பிரதமர் கவலை தெரிவித்தாரா?
சட்டவிரோத குடியேறிகள் என அமெரிக்க அரசால் குறிப்பிடப்பட்ட இந்தியர்களை அழைத்து வர சொந்த விமானத்தை அனுப்பும் திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதா? என கேட்கப்பட்டது.
மேலும் 295 இந்தியர்கள்
இந்த கேள்விகளுக்கு ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை 388 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 333 இந்தியர்கள் பிப். 5, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தனித்தனி ராணுவ விமானங்களில் நேரடியாக இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதுதவிர 55 இந்தியர்கள் பனாமா வழியாக பயணிகள் விமானங்களில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
நாடு கடத்தப்படுவதற்கான இறுதி உத்தரவுகளுடன் காவலில் வைக்கப்பட்டுள்ள 295 இந்தியர்களின் விவரங்களை அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகள் எங்களிடம் சமீபத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த விவரங்களை சரிபார்த்து வருகிறோம்.
மனிதாபிமானத்துடன் நடத்த…
சட்டவிரோத குடியேற்ற நெட்வொர்க்குகளை ஒடுக்கும் அதே வேளையில் பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்தை ஊக்குவிப்பதன் அவசியம் குறித்து, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது விவாதிக்கப் பட்டது.
பிப்ரவரி 5ஆம் தேதி அமிர்தசரசில் தரையிறங்கிய விமானத்தில் இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டது குறித்து ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தனது கவலைகளை அமெரிக்க அதிகாரிகளிடம் வலுவாக பதிவு செய்தது. நாடு கடத்தப்பட்டவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என அமெரிக்க தரப்பிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.