புதுடில்லி, பிப்.11 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவுப்படி, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.
கை, கால்களில் விலங்கு
இந்தியாவைச் சேர்ந்த 104 பேரை அமெரிக்கா அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அவர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இந்தியா வந்தடைந்தவர்களில் பெரும்பாலானோர் குஜராத், அரியானா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
ராணுவ விமானத்தில் வரும்போது கை மற்றும் காலில் விலங்கு மாட்டி அழைத்து வரப்பட்டனர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கண்ணியத்துடன் அமெரிக்கா நடத்தவில்லை, இது இந்தியாவுக்குத் தலைக்குனிவு என விமர்சனம் எழுந்தது.
ஒன்றிய அமைச்சர் விளக்கம்
இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது “இந்தி யர்களை நாடு கடத்தும் செயல்முறை புதிது அல்ல. பல ஆண்டுகளாக உள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கை விலங்கு போடுவது அமெரிக்காவின் வழக்கம். சட்டப்படியே அவர்களுக்குக் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது. பெண்கள், குழந்தைகள் விலங்கி டப்படவில்லை. இந்தியர்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்’’ என விளக்கம் அளித்தார்.
அடுத்த முறையாவது விமானம் அனுப்புமா?
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம்
‘‘இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டதை அமைச்சர் ஜெய்சங்கர் ஏன் எதிர்க்கவில்லை? அமெரிக்கா சென்றபோது கைவிலங்கு விவகாரத்தில் ஏன் மவுனம் சாதித்தார்? அடுத்தமுறையாவது இந்தியர்கள் திருப்பி அனுப்பப்படும்போது விமா னம் அனுப்புமா ஒன்றிய அரசு?’’ என்று வினவியுள்ளார்.