தந்தை பெரியார் பொன்மொழி பகுத்தறிவு வளர்ந்தால்

viduthalai
2 Min Read

மக்களுக்கு அறிவும் – ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அது போலவே அறிவும் – ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
– – – – –

குடிஅரசு இணை ஆசிரியர்
வா.மு. தங்கபெருமாள் பிள்ளை

குடிஅரசு தொடங்கும்போது தந்தை பெரியார் அவர்களுடன் இணை ஆசிரியராகப் பணி புரிந்தார் – இளம் வயதில் அவர் இயற்கை அடைந்த போது குடிஅரசு பின்வருமாறு தலையங்கம் தீட்டியது.

தமிழ்நாட்டின் அருந்தவப்பயன், நமது ஆரூயிர் நண்பர் ஸ்ரீமான். வா.மு. தங்கபெருமாள் பிள்ளை 06.03.1926 காலை 4 மணிக்கு உயிர் நீத்தார் என்னும் சேதியை எழுதவே மெய் நடுங்கிறது. அவருக்கு இன்னமும் ஆண்டு முப்பதுகூட ஆகவில்லை. அவர் ஈரோடு முனிசிபல் எல்லைக்குள் சுருங்கல்பாளையம் என்னும் கிராமத்தில் ‘வாத்தியார் வீடு’ என்று சொல்லும்படியான புராதனமும் கண்ணியமும் வாய்ந்த ஒரு வைணவ வேளாள செல்வக் குடும்பத்திற்குச் செல்வமாய் பிறந்தவர். அவரது இளம் வயதிலே, அதாவது 12வது வயதிலேயே தந்தை இறந்து போனார். ஆயினும், சிறிய தந்தையார் ஆதரணையால் கல்வி கற்கப்பட்டு தனது 21-வது வயதில் பி.ஏ., பட்டம் பெற்று 24 வயதில் பி.எல்., பட்டமும் பெற்று ஈரோடு ஜில்லா முனிசீப்பு கோர்ட்டில் 1921-ஆம் வருஷத்தில் வக்கீல் தொழிலை ஆரம்பித்தார். ஆரம்பித்த மாதமே 200 ரூபாய் வரும்படி கிடைத்தது. அடுத்த மாதம் ரூ.250 வரும்படி கிடைத்தது. மற்றும் இரண்டொரு மாதங்களிலேயே மாதம் 300 ரூபாயிக்கு மேல் வரும்படி வந்து கொண்டிருந்த நிலையில் தந்தை பெரியாருடன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டார்.

ஈரோடு கள்ளுக்கடை மறியலில், இவர் குற்றஞ்சாட்டப்பட்டு நாயக்கர் உள்பட 40 தொண்டர்களோடு மேஜிஸ்ட்ரேட்டால் தண்டிக்கப்பட்டு சிறை வாசமிருந்தார்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் அனேக புத்தகங்கள் வாசித்தவர். தமிழ்நாட்டிலுள்ள தமிழ் ஆராய்ச்சிக்காரர்களில் நமது பிள்ளையும் ஒரு முக்கியமானவர் என்று சொல்ல வேண்டும். அவர் காரியாலயம் ஒரு புத்தகாலயம்போல் இருக்கும். ஆராய்ச்சி ஆராய்ச்சி, ஆராய்ச்சி என்று எப்பொழுது பார்த்தாலும் இதே வேலைதான். நமது நாட்டில் மக்கள் உயர்வு தாழ்வு என்பது எப்படி ஒழியும் என்கிற கவலை அவருக்குள்ள மற்ற எல்லாக் கவலையையும்விட, முன்னின்று கொண்டிருந்தது. முடிவாய்க் கூறுமிடத்து, தன்னலத் தியாகத்தில் ஈடற்ற ஒரு தேசபக்தர் – உண்மைத் தொண்டர் – அஞ்சா நெஞ்சர் – ஆரூயிர்த் தோழர் – தமிழ்நாட்டின் ஒரு முக்கிய உருபு கோவை ஜில்லாவின் வலக்கண் – ஈரோட்டின் முடி மறைந்ததென்றுதான் சொல்ல வேண்டும்.

குடிஅரசு – 07.03.1926

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *