தேனி, நவ. 21- தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து கடந்த நவம்பர் 17ஆம் தேதி தேனி வடகிழக்கு மாவட்ட த.வெ.க. இணைச்செயலாளர் ஷேக் அலி தலைமையில் அக்கட்சியினர் தண்ணீர் திறந்து விட்டனர்.
அரசு அனுமதியின்றி, அதிகாரிகளுக்கே தெரியாமல் த.வெ.க. நிர்வாகி அணையில் இருந்து தண்ணீர் திறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தேனி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முருக்கோடை ராமன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் சோத்துப்பாறை அணை பாசன விவசாயிகள் சங்கத்தினர், நேற்று (20.11.2026) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
ஆட்சியர் சிவகிருஷ்ண மூர்த்தியை சந்தித்துப் புகார் மனு அளித்தனர். அப்போது அதிமுக மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமன் மற்றும் விவசாயச் சங்கத்தினர், ‘‘அரசு உத்தரவிட்ட பிறகு ஆட்சியரின் நேரடி உத்தரவிற்கு பிறகுதான் அணை நீரைத் திறக்க வேண்டும்.
பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள 11 கண்மாய்களுக்கும் தண்ணீர் நிரம்பிய பிறகுதான் புதிய ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் சமூக விரோதிகள் முதலில் புதிய ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீரைத் திறந்து விட்டு வீணடித்து ‘ரீல்ஸ்’ பதிவிட்டு இருக்கின்றனர்.
‘ரீல்ஸ்’ பதிவிட்டவர்களின் முகம் நன்கு தெரிந்தும் பொதுப்பணித் துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் என்று சாதாரணமாக புகார் கொடுத்துள்ளனர்.
இந்த விசயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும’’ என்றார். அப்போது ஆட்சியர், ‘‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அணையின் மதகுகளுக்கு பொதுப்பணித்துறை மூலம் பூட்டு போடப்பட்டு முறையாக பராமரிக்கப்படும்’’ என்று உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் தேனி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் கவுதமை சந்தித்தும் புகார் மனு அளித்தனர். இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான பாசன மதகுக்கு நேற்று (20.11.2026) புதிதாக பூட்டு போடப்பட்டது.
