முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் – சிபிஅய் கண்டனம்!

சென்னை, மே 11- தவெக தலைவர் ஜோசப் விஜய் நேற்று (10.5.2026) முதலமைச்சராக பதவியேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டது.

இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகிறது. இந்நிலையில் இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு கண்டனம் தெரிவித் துள்ளது.

இதுதொடர்பாக மாநிலத் தலைவர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப் பெரும் கட்சியாக வந்த தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர் இழுத்தடித்து வந்தார். குறுக்கு வழியில் ஆட்சியமைக்க பல்வேறு வழிகளில் நடந்த முயற்சிகளை முறியடிக்க, மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியில் வெற்றி பெற்ற, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் கலந்தாலோசித்து வழங்கிய ஆதரவின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

அரசின் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு, வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும்.

“வந்தேமாதரம்” ஒரு குறிப்பிட்ட கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் ஒரு மதச்சார்புடையதுமான அப்பாடல் என்பதால் தேசிய கீதமாக இருக்க முடியாது என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் “வந்தேமாதரம்” பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும்.

இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தத் தவறு தொடருவதை அனுமதிக்கக் கூடாது.

இன்று (11.5.2026) சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்புக்காக கூடும் சட்டப்பேரவைக் கூட்டத் திலும், அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப் பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், தற்காலிக பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *