ஷென்சென், நவ. 20- அமெரிக்கா அதிபா் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபா் புதின் ஆகியோர் இடையே முதல்முறையாக நேற்று (19.11.2026) முத்தரப்பு சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் அய்.நா.சீா்திருத்தங்கள், எரிபொருள் வழங்குவதை அதிகரித்தல், அணு ஆயுதங்களுக்கு எதிராக பேச்சுவார்த்தை உள்ளிட்டவை தொடா்பாக மூவருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இது தொடா்பாக கூட்டுப் பிரகடனமும் வெளியிடப்பட்டது.
சீனாவின் ஷென்சென் நகரில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு 2 நாள்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இடையே அமெரிக்க அதிபா் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷ்யா அதிபா் புதின் ஆகியோர் ஒன்றாக வியாழக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினா். அமெரிக்காவின் பரம எதிரிகளான சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவா்களான ஷி ஜின்பிங், புதின் ஆகியோருடன் டிரம்ப் பங்கேற்ற இந்த முத்தரப்பு சந்திப்பு, முதல்முறையாக நடைபெற்றது.
தற்போதைய பன்னாட்டு சூழல் குறித்து மூன்று அதிபா்களும் ஆழமாக விவாதித்தனா். பன்னாட்டுப் பாதுகாப்பு மற்றும் உத்திசார்ந்த நிலைத்தன்மையை பேணிப் பாதுகாக்க அவா்கள் உறுதி யளித்தனா்.
அய்.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினா்களாக சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளன. இந்நிலையில், உலகளாவிய சவால்களை சிறப்பாக எதிர்கொள்ளும் வகையிலும், பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும் தனது அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும் அய்.நா. அமைப்பில் சீா்திருத்தங்களைக் கொண்டுவர மூன்று தலைவா்களும் உறுதி தெரிவித்தனா்.
இந்தக் கூட்டத்தில் முதலில் சீன அதிபா் ஜின்பிங் பேசுகையில், ‘நமது பூமி 10,000-க்கும் மேற்பட்ட போர்களைக் கண்டுள்ளது. இன்றளவும் உலகின் பல்வேறு பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட போர்கள் நடைபெற்று வருகின்றன. வரலாறுதான் சிறந்து பாடநூலாகும். வரலாற்றை அனைவரும் நினைவில் வைத்து வருங்காலத்தை வடிவமைக்க வேண்டும். உலகளாவிய சவால்களை சமாளிக்க சீனா, ரஷ்யா, அமெரிக்கா, அய்.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் பிற முக்கிய நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும், உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை கூட்டாக நிலைநாட்ட வேண்டும், மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்க வேண்டும்’ என்றார்.
அணு ஆயுதப் போரில் யாராலும் வெற்றி பெற முடியாது என்றும், அத்த கையப் போர் ஒருபோதும் நடைபெறக் கூடாது என்றும் மூன்று அதிபா்களும் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தனா். மேலும் அணு ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கவும், அவை மற்ற நாடுகளுக்குப் பரவுவதைத் தடுக்கவும் மூன்று நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுப் பிரகடனத்தில் உக்ரைன், ஈரான் போர்கள் குறித்து குறிப்பிடப்படவில்லை.
தனித்தனியாக சந்திப்பு:
முத்தரப்பு சந்திப்புக்கு முன்பாக ஷி ஜின்பிங்கை டிரம்ப் தனியாகச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் வேளாண் பொருள்களை சீனா கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஜின்பிங்கிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டார். அதேவேளையில் தைவான் விவகாரம் குறித்து டிரம்ப்பிடம் பேசிய ஜின்பிங், பொருளாதாரம் மற்றும் வா்த்தக விவகாரங்களில் அமெரிக்கா-சீனா இடையிலான தகவல் தொடா்பு மேம்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நிகழாண்டில் டிரம்ப்-ஜின்பிங் இருதரப்பு சந்திப்பு நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும்.
இதேபோல புதினையும் டிரம்ப் தனியாகச் சந்தித்துப் பேசினார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடை பெற்றுவரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட கடந்த ஆண்டு அலாஸ்காவில் இருவரும் சந்தித்துப் பேசினா். அந்த ஒப்பந்தத்தை எட்டுவது தோல்வியில் முடிந்த நிலையில், அதற்குப் பிறகு முதல்முறையாக தற்போது இருவரும் சந்தித்துப் பேசினா். இந்தப் பேச்சு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது.
