அமராவதி, நவ.11 நாட்டில் நிலவும் ஊழலை முற்றிலுமாக ஒழிக்கவும், தேர்தல் முறைகேடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
சந்தையில் பெரிய அளவிலான ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளைத் தடுப்பது மட்டுமே ஊழல் சுழற்சியை உடைக்கும் என்று குறிப்பிட்ட அவர், புழக்கத்தில் ரூ.500 மற்றும் இதர உயர்மதிப்பு நோட்டுகளுக்குப் பதிலாக ரூ.100 மற்றும் ரூ.200 தாள்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
டிஜிட்டல் கரன்சி குறித்த ஆய்வறிக்கைகளுக்குத் தான் ஏற்ெகனவே பல ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும், இந்த கோரிக்கையைப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெரிய அளவிலான பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே தேர்தல்களில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதைத் தடுத்து நேர்மையான ஜனநாயக முறையைக் கொண்டுவர முடியும் என்றும் சந்திரபாபு நாயுடு சுட்டிக்காட்டினார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக
நூலகம் முடங்கும் அபாயம்!
ஆள் பற்றாக்குறை,
அடிப்படை வசதிகள் குறைவு

தஞ்சை, நவ. 11 தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக நூலகத்தில் நிலவும் கடுமையான ஆள் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகள் குறைப்பாட்டால், நூலகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ் மொழிக்கான ஆராய்ச்சி மய்யமாகத் திகழ வேண்டும் என்ற நோக்கில் கடந்த 1981 செப். 15-இல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் நூலகம் இந்திய நாடாளுமன்றத்தின் (பார்லிமென்ட்) வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய நூல கங்களில் ஒன்றான இதில், 1672-இல் ஆம்ஸ்டர்டாமில் வெளியிடப்பட்ட மலபார் தாவரங்கள் பற்றிய நூல்கள், 1812-இல் தஞ்சாவூரில் அச்சிடப்பட்ட முதல் திருக்குறள் பதிப்பு உள்ளிட்ட 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமான நூல்கள், 345-க்கும் மேற் பட்ட தேசிய மற்றும் பன்னாட்டு இதழ்கள் மற்றும் பல அரிய சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
நூலகத்தில் குடிநீர், மின்விசிறி வசதி, மின்விளக்கு வெளிச்சம் போன்ற அடிப்படை வசதிகள் கூட நிறைவாக இல்லை. இதனால் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் நூலகத்தைப் பயன்படுத்துவது குறைந்து வருகிறது.
நூலகத்தில் நீண்ட காலமாக ஒரு நூலக அலுவலர் மட்டுமே உள்ளார்; மேலும் 8 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் அரிய நூல்கள் முறையாகப் பராமரிக்கப்பட முடியாமல் வீணாகி வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நூலகத்தின் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
