புதுடில்லி, நவ. 3– உற்பத்தி நிறுவனங்கள் வாங்கும் மூலப்பொருட்களை கணக்கில் கொண்டு, இந்தியாவின் உற்பத்தி துறையின் வளர்ச்சி மாதந்தோறும் பிஎம்அய் குறியீடு மூலம் அளவிடப்படுகிறது. அக்டோபர் மாத பிஎம்அய் குறியீடு சற்று சரிந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் பிஎம்அய் குறியீடு 55.1 புள்ளிகளாக இருந்த நிலையில் அக்டோபரில் 54.7 ஆக குறைந்துள்ளது. ஆனாலும் பிஎம்அய் குறியீட்டில் 50 புள்ளிகளுக்கு மேல் பதிவானாலே அது வளர்ச்சியை குறிக்கும் என்பதால் தற்போதைய சரிவிலும் இந்திய உற்பத்தி துறை வலுவான விரிவாக்கப் பாதையில் நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது.
பன்னாட்டு சந்தையில் நிலவும் வலுவான தேவை காரணமாக, வங்கதேசம், கனடா, இந்தோனேசியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அய்க்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. ஆனாலும் கடந்த செப்டர்மர் மாதத்தில் புதிய ஆர்டர்களின் எண்ணிக்கை 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டிருந்ததால், அதனுடன் ஒப்பிடும் போது அக்டோபரில் புதிய ஆர்டர்களின் வேகம் குறைந்துள்ளது.
தேவை அதிகரிப்பால், தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்ந்து 2ஆவது மாதமாக உயர்ந்தாலும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் சற்று மந்தமடைந்துள்ளது. இதே போல, வணிக நம்பிக்கை செப்டம்பர் மாதத்தை விட சற்று சரிவடைந்துள்ளது. சுமார் 18 சதவீத உற்பத்தியாளர்கள் மட்டுமே அடுத்த ஓராண்டில் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மூலப்பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்த போதிலும், ஒட்டுமொத்த உற்பத்திச் செலவு அழுத்தம் கடந்த பிப்ரவரிக்கு பிறகு மிகக் குறைந்த அளவிற்கே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகனைக் காப்பாற்ற முயன்றதாக
கேரள நீதிபதி மீது புதிய வழக்கு
கொச்சி, நவ. 3- கேரளாவில் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் தந்தையான நீதிபதி மீது, ஆதாரங்களை அழிக்க முயன்றதாக காவல்துறையினர் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம், கொச்சியில் கடந்த அக். 25ஆம் தேதி, நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற கார், சேரனல்லூர் அருகே இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயபாலகிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக, 17 சிறுவன் மற்றும் அவரது தந்தையான நீதிபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த ஜெயபாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் காவல் துறையில் புதிய புகார் ஒன்றை அளித்தனர். அதில், “விபத்து நடந்த இடத்தில் நீதிபதி நீண்ட நேரம் இருந்து, வழக்கில் முக்கிய ஆதாரங்களை அழிக்க முயன்றார். மேலும், விபத்துக்குப் பிறகு நீதிபதி சேரனல்லூர் காவல் நிலையத்துக்குச் சென்று, நாங்கள் எடுத்திருந்த தனது மகனின் புகைப்படத்தை அழிக்குமாறு போலீஸ் அதிகாரி ஒருவரிடம் நீதிபதி வற்புறுத்தி உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆதாரங்களை அழிக்க முயன்றதாக நீதிபதி மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்
வினாத்தாள் கட்டணம் வசூலிக்கத் தடை
பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
சென்னை, நவ. 3– 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வுக்கான வினாத்தாள் கட்டணம் மற்றும் எவ்வித முறையற்ற கட்டணங்களும் வசூலிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வு வினாத்தாள்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை இருந்து வந்தது. இதற்கு தடை கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அரசுப் பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்காலக் தடை விதித்தது. இந்த நிலையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: அரசு மற்றும் அரசு நிதி உதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் உள்ளிட்ட எவ்வித முறையற்ற கட்டணங்களும் வசூலிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருநாடகா அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒன்றிய அமைச்சர் முயற்சி பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு
பெங்களூரூ, நவ. 3- கருநாடகா மாநிலத்தில் டி.கே.சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடை பெற்று வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே அமைச்சராக இருக்கிறார்.
இந்த நிலையில் தனக்கும் சக அமைச்சர்களுக்கும் எதிராக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அமைச்சர் ஒருவர் மோடி அரசை வற்புறுத்தி வருகிறார் என்று பிரியங்க் கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கருநாடகா பொதுப் பணித்துறை தேர்வாணையப் பணி நியமனத்தில் நடந்து உள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்த விசாரணையை எனக்கும் சக அமைச்சர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க ஒன்றிய அமைச்சர் ஒருவர் முயற்சித்து வருகிறார். அரசியல் கவசமாக அவர் இதை பயன்படுத்துகிறார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஒரு ஆயுதமாக பயன்படுத்த மோடி அரசை தீவிரமாக வற்புறுத்தி வருவதாக பேச்சு அடிபடுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் புதிய குரூப் பணியாளராக செயல்படும் அந்த நபர் கருநாடகா பொதுப் பணித்துறை தேர்வாணைய பணி நியமன வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி மிரட்டுகிறார். இதன் மூலம் காங்கிரஸ் தலைவரையும், என்னையும் இந்த வழக்கில் பொய்யாக சிக்க வைக்க முயற்சிப்பதாக தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். பிரியங்க் கார்கே தனது பதிவில் யாரையும் நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனாலும் அவரது இந்த குற்றச்சாட்டு பா.ஜ.க. கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தள தலைவரும், ஒன்றிய அமைச்சருமான குமார சாமியை நோக்கியே இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
