உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்கிறது தேர்தல் ஆணையம்!

- Advertisement -

லக்னோ, நவ. 1- உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு வரும் நாளை (2.11.2026) முதல் நேரில் ஆய்வு செய்ய வுள்ளது.

நாட்டிலேயே மிகப்பெரிய சட்டப்பேரவையான 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலப் பேரவையின் பதவிக் காலம் வரும் ஆண்டு மே 22-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

5 மாநில தேர்தல் பின்னணி

உத்தரப் பிரதேசம் தவிர, ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் (117 தொகுதிகள்), பாஜக ஆளும் உத்தரகண்ட் (70), மணிப்பூர் (60), கோவா (40) ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைப் பதவிக் காலமும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைகின்றன. இதனால் இந்த மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்கள் உட்பட மொத்தம் 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் (சிறப்பு சுருக்கமுறை) பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பணிகளோடு நேரடியாகத் தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங் களில் ஏற்கெனவே ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், துணைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் நாளை (2.11.2026) உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகருக்கு வருகை தந்து ஆய்வைத் தொடங்குகின்றனர்.

மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்கள் சோதனை:

தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு (VVPAT) கருவிகளின் முதல்கட்டப் பரிசோதனைகள் உ.பி.யில் தொடங்கப் பட்டுள்ளன. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) மற்றும் இந்திய மின்னணுவியல் நிறுவனம் (ECIL) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவுகள் நடத்தப்பட்டு, குறைபாடுள்ள இயந்திரங்கள் பழுதுபார்க்க உடனடியாக அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், முந்தைய தேர்தல்கள் தொடர்பான பழைய தரவுகள் அனைத்தும் இயந்திரங்களிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளர் பண இழப்புக்கு
வங்கியே பொறுப்பு

டிஜிட்டல் மோசடியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, நவ. 1- இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் முறைகேடுகள் மற்றும் டிஜிட்டல் கைது மோசடிகளில் வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்க நேரிட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, வங்கிகளின் கண்காணிப்புக் குறைபாடுகளால் இத்தகைய நிதி இழப்புகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தபட்சம் அவர்கள் இழந்த முழுத் தொகை யையும் வங்கிகள் இழப்பீடாக வழங்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது. கூடுதல் விபரங்கள் வருமாறு:-

சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்

வழக்கமாக குறைந்த அளவிலான பணப் பரிவர்த்தனைகளை செய்யும் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து, திடீரென பெரிய அளவிலான பணம் மாற்றப்பட்டால், அதை வங்கிகள் ஏன் உடனடியாக தடுத்து நிறுத்தக் கூடாது எனத் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கணக்கு உரிமையாளரின் பரிவர்த்தனை வரலாற்றுடன் ஒத்துப்போகாத சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை தானாக முன்வந்து நிறுத்துவதும், அதை உள்ளூர் காவல் நிலையங்களுக்குத் தெரிவித்து நேரில் சரிபார்ப்பதும் நிதி நிறுவனங்களின் கட்டாயக் கடமையாகும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

ஆர்பிஅய்யின் புதிய 2026 கேஒய்சி விதிகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் திட்டம்

டிஜிட்டல் நிதி மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஅய்) தயாரித்து வரும் 2026 கேஒய்சி திருத்த வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் நேரில் ஆய்வு செய்யவுள்ளது.

வங்கிகள் தவறு இழைக்கும் பட்சத்தில் அவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும், வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும் பிரிவுகளும் இந்த வழிகாட்டுதல்களில் இடம் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் பட்டியலையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆர்பிஅய்க்கு ஆணையிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் மட்டும்
ரூ.800 கோடி நிதி இழப்பு

ஒன்றிய அரசு தரப்பில் முன்னிலையான தலைமை வழக்குரைஞர், அரசின் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக டிஜிட்டல் கைது வழக்குகள் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், நடப்பாண்டில் மட்டும் இந்திய மக்கள் சுமார் ரூ.800 கோடியை இத்தகைய சைபர் மோசடிகளில் இழந்துள்ளதாகத் தலைமை நீதிபதி கவலை தெரிவித்தார்.

படித்த குடிமக்களும் அச்சத்தின் காரணமாக இத்தகைய போலி டிஜிட்டல் கைது மோசடிகளில் ஏமாறுவது குறித்து நீதிமன்றம் தனது கடுமையான வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *