பண்டிகைகள்!
‘‘என் புத்திக்குட்பட்ட வரையில் இந்தப் பண்டிகை, உற்சவம் முதலியன எல்லாம் புரோகிதர்களான பார்ப்பனர்களும், ஆட்சிக்காரர்களான அரசர்களும் கலந்துகொண்டு, பிடித்துச் செய்த தந்திரமென்பதே எனது அபிப்பிராயம்’’ என்றார் தந்தை பெரியார்.
(‘குடிஅரசு’, 20.10.1929)
எதையும் ஆணிவேர் வரை சென்று ஆய்ந்து முடிவு செய்பவர் தந்தை பெரியார்.
பணத்தைக்கூட சம்பாதித்து விடலாம்.
ஆனால், காலத்தை பண்டிகையின் பெயரால், வீணாக்குவதென்பது கெட்ட நேரம், அபசகுனம், விரதம், இத்தியாதி, இத்தியாதி என்று நீண்டு கொண்டே போகும்.
வருஷப் பிறப்பு (ஒரு பெயர்கூட தமிழில் இருக்காது), இராமநவமி, அட்சயதிருதியை, வைகாசி விசாகம் (முருகன் அவதரித்த நாளாம்) ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை (செத்து சுண்ணாம்பான முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது), குரு பூர்ணிமா, ஆடிப்பூரம் (ஆண்டாள் அவதரித்த நாளாம்), ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, வரலட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி, மகாளய அமாவாசை, நவராத்திரி, விஜயதசமி (ஒன்பது நாட்கள்), தீபாவளி, ஸ்கந்த சஷ்டி, கார்த்திகைத் தீபம், துளசி விவாகம் (துளசி மாடத்திற்குத் திருமணமாம்), தைப்பூசம் (முருகனுக்குக் காவடி எடுப்பது), மகாசிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம் – இப்படி மாதந்தோறும் பண்டிகை, உற்சவம் என்ற பெயரால், காலத்தையும், உழைத்துச் சம்பாதித்த பணத்தையும் பாழ்படுத்தவும்தான் பண்டிகைகளா?
இதில் வெட்கக்கேடும், முட்டாள்தனமும் என்னவென்றால், இந்தப் பண்டிகைகளை கடன் வாங்கிக் கூடக் கொண்டாடுவதுதான்.
ஆண்டில் பாதி நாட்கள் இந்தக் கருமாதி, கண்ணராவிகளுக்கெல்லாம் நாசமாகப் போவதைக் கண்ட தந்தை பெரியார் அவர்கள், மனித சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையின் காரணமாகத்தான் இந்தப் பண்டிகைகள், சுரண்டல்கள் குறித்து ஆழ்ந்த அக்கறையோடு, கவலையோடு கருத்துகளைக் கூறியுள்ளார் – பிரச்சாரமும் செய்து வந்தார்.
மேலே எடுத்துக்காட்டிய சில பண்டிகைகள் இப்போது காணாமல் போனதற்குக் காரணம், தந்தை பெரியாரின் பிரச்சாரம்தான்! திராவிடர் கழகத்தின் செயல்பாடுதான்!!
– மயிலாடன்
