மகப்பேறு விடுப்பைச் சுட்டிக்காட்டி பெண் ஊழியர்களின் அதிகாரத்தைக் குறைப்பதோ, பொறுப்புகளைப் பறிப்பதோ அல்லது அவர்களின் தொழில்முறை வளர்ச்சியைப் பாதிப்பதோ சட்டப்படி தவறானது என பாராட்டத்தக்க வகையில், டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விடுப்புக்குப் பின் பணிக்குத் திரும்பும் பெண்களுக்கு, அவர்கள் ஏற்ெகனவே வகித்த அதே பதவியையோ அதற்கு இணையான அதிகாரப்பூர்வப் பதவியையோ வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தான் சுமார் 14 ஆண்டுகள் அனுபவம் கொண்ட கணக்காளரான இராக்கி பிஷ்ட், ஜூன் 2022-இல் ‘ஹாகிகார்ப்’ நிறுவனத்தில் ரூ.2.60 லட்சம் மாத ஊதியத்தில் கணக்கியல் மேலாளராக நியமிக்கப்பட்டார். 2023-ஆம் ஆண்டு அவர் கருவுற்ற செய்தியை, அந் நிறுவனத்திடம் தெரிவித்ததையடுத்து, அவரது பதவியைக் கீழிறக்கி, அதுவரை தனக்கு அடுத்த நிலைகளில் பணியாற்றிய அதிகாரியின் கீழ் பணியாற்றுமாறு அவரை அந்நிறுவனம் கட்டாயப் படுத்தியுள்ளது.
டிசம்பர் 2023-இல் மகப்பேறு விடுப்பில் சென்றுவிட்டு ஜூலை 2024-இல் பணிக்குத் திரும்பியபோது, அவருடைய முந்தைய பதவி இனி கிடைக்காது எனக் கூறி, அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சாதாரண ஊழியர் செய்யும் பணிக்குத் தன்னை மாற்றியது தன் தகுதியையும் நன்மதிப்பையும் குறைக்கும் செயல் எனக் கூறி, அவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி தத்தா அடங்கிய அமர்வு வழங்கிய முக்கியத் தீர்ப்பில், “எந்தவொரு சூழ்நிலையிலும், மகப்பேறு என்பது பணியிடத்தில் அவமானத்திற்கான ஒரு மூலமாக மாற அனுமதிக்கப்பட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15, 21, 42 ஆகியவற்றின் அடிப்படையில், கருவுறுதலையோ, மகப்பேற்றையோ பதவி இறக்கத்துக்கோ, தகுதி மறுப்புக்கோ காரணங்களாகக் கருத முடியாது’ என்றும், ‘சில நேரங்களில் அதே பதவியையும், ஊதியத்தையும் வழங்கினாலும்கூட ஒரு பெண்ணின் முதன்மையான வேலைப் பொறுப்புகளையும் அதிகாரத்தையும் பறிப்பதும்கூட சட்டத்தை ஏமாற்றும் செயலாகும்’ என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட இராக்கி பிஷ்ட், பின்னர் அந்நிறுவனத்தில் இருந்து விலகி வேறு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சேர்ந்தபோதிலும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பாதிப்புகளுக்காக ரூ.10 லட்சம் இழப்பீடாகவும் (சுமார் 4 மாத ஊதியம்), ரூ 1.5 லட்சம் வழக்குச் செலவாகவும் என மொத்தம் ரூ 11.5 லட்சத்தை எட்டு வாரங்களுக்குள் வழங்க ‘ஹாகிகார்ப்’ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறினால், 9% வட்டியுடன் இத்தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
இது இந்த ஒரு வழக்குக்கான நீதியாக மட்டும் இருக்கக் கூடாது. இதே போல பல லட்சக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது குறித்தும் டில்லி உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.
1961-ஆண்டின் மகப்பேறு நலச் சட்டத்திலோ, 2020-ஆம் ஆண்டின் சமூக பாதுகாப்புச் சட்டத்திலோ, மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பெண்கள் மீண்டும் பணியில் சேர்வது தொடர்பான விரிவான விதிகள் இல்லை. எனவே, விடுப்பு முடிந்து திரும்புவோரின் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்யும் விரிவான வழிகாட்டுதல்களை உருவாக்க ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, பொறுப்புகள் படிநிலைகளில் மாற்றம் செய்து, அதிகாரம் மிக்க பொறுப்புகளில் இருக்கும் பெண் ஊழியர்களை முடக்கும் தனியார் நிறுவனங்களின் போக்கிற்கு இந்த சிறப்புமிக்க தீர்ப்பு பதிலடியாக அமைந்துள்ளது.
காலங்காலமாக, இது மகளிர் சந்திக்கும் மிகப் பெரிய சவால் ஆகும். குழந்தைப்பேற்றைக் காரணம் காட்டிதான் அவர்களின் வாழ்க்கையே முடக்கப்பட்டது. “பெண்கள் வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்களா?” என்று தந்தை பெரியார் எழுப்பிய கேள்வி இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து அடுத்து பிள்ளை பெறுவதால் பெண்கள் உடல்நிலையில் ஏற்படும் குறைவுகளும், அக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பும் பெண்களின் தலையிலேயே விழுவதால், வேறு எதையும் சிந்திக்க முடியாதவர்களாகவும், சிந்திக்கக் கூடாதவர்களாகவுமே பெண்கள் ஆக்கப்பட்டிருந்தனர். பொதுவாழ்க்கையில் இருந்தும், தொழில், பணி உள்ளிட்டவற்றிலிருந்தும் பெண்கள் விலக்கி வைக்கப்படுவதற்கு இதுவே சாக்குப் போக்காக அமைந்தது. இதற்குத் “தாய்மை ‘புனித’மானது” என்று ‘புனித’ப் போர்வை போர்த்தி, பெண்களைப் பொது வெளிகளில் இருந்து ஒதுக்கிவைத்தது ஆணாதிக்கம்.
தனி வாழ்க்கை என்பது அவர்களின் அறிவு, அதிகார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கலாமா என்ற கேள்வியைக் கடந்து, இன்று பல துறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்கள், அதற்காகத் தங்கள் தனி வாழ்க்கையை இழக்க வேண்டுமா? என்னும் கேள்வி எல்லாத் திசைகளிலும் எழுகிறது. அதற்கு முடிவுரை எழுத வேண்டிய காலகட்டத்தில் இத் தீர்ப்பு கிடைத்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
