போதைக் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகுகிறது என்று அத்துணைக் கட்சிகளும் கூக்குரல் இடுகின்றன.
ஆளுங்கட்சி– ஆண்ட கட்சி – முடியாவிட்டாலும் ஏதோ தனித்த செல்வாக்கு இருப்பதுபோல, தன் ஜாதி முதலாளிகளின் கொடைக் கொற்றத்தாலும், அவ்வப்போது ஏமாறத் தயாராக இருக்கின்ற சில ‘அறியாமை’களாலும் சீசனுக்கு ஒரு தலைவர் மீது தாக்கி, ஊடக விளம்பர வெளிச்சம் தாங்கி, ‘ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டு புலி வேஷம் போட்டு’ கீழே விழுந்து மீசையில் மட்டுமல்ல, முகம் பூராவும் மண்ணைக கவ்வும் வகையில் குப்புற விழுந்து, அத்தனை (234) இடங்களின் ‘கட்டுத்தொகை’ (டெபாசிட்) இழந்தாலும், வெட்கமில்லா ‘‘வீர கர்ச்சனைக்கு’’ப் பஞ்சமில்லாத, அரசியல் வித்தைக்களுக்காகச் சொல்லப்படும் போதைகள், சாராயம், டாஸ்மாக் சரக்கு, அபின், கஞ்சா வகையறாக்களைவிட ஆபத்தானவை!
அவை இளைஞர்களின், மாணவர்களின் வாழ்வையும், வளத்தையும் பறித்து, வாழும் ‘நடைப்பிணங்களாக்கும்’ கொடுமை களுக்கு எதிராக, முழு முயற்சியை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் எல்லாம் செய்வது என்பது மிக அவசியமானதுதான்.
ஆனால், அவர்கள் எப்படி, ‘பன்னாட்டு மாஃபியா’ (International Mafia) கும்பல் பெரும் ‘‘சக்கரவர்த்திகளாகி’’, பெருமுதலாளிகளாக பலரது ஆதிக்கத்தின்கீழ் உரிமையுள்ள துறைமுகங்கள்மூலம்தான் உள்நாட்டில் பல முகவர்களை ஏற்படுத்தி, சட்டத்தைப் பின் தள்ளி, ‘‘திருவிளையாடல்’’ புரிகிறார்கள்!
மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் நடந்த ‘திராவிட மாடல்’ ஆட்சி, இந்தத் தடுப்பு நடவடிக்கைகளைக் கடுமையாக முடுக்கிவிட்டு, சிறு காவல் துறை ‘‘கருப்பு ஆடுகளின் ஒத்துழையாமையைத்’’ தாண்டியும், உரிய நடவடிக்கைகளை எடுத்தது.
‘ஓட்டு வேட்டை அரசியலில்’ ஆளுங்கட்சிக்கு எதிரான குற்றச்சாற்று வரிசையில், இது ஒரு முக்கிய இடம்பெற்று, சட்டம் ஒழுங்குக்கு அடுத்தும் பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.
இன்றும், அது திரும்பி, இன்றைய புதிய ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளால் பயன்படுத்தக் கூடிய நிலைதான் உள்ளது!
‘சராசரங்கள் வரும் சுழன்று’ என்ற நிலைதான் அது!
இளைய தலைமுறையை அது அழித்துவிடாமல் பாதுகாத்திட, அனைத்துத் தரப்பும், ஆளும் கட்சி – எதிர்க்கட்சி என்றில்லாமல், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, இப்பிரச்சினையில், எல்லோரும் ஓரணியில் நின்று, வன்மையாகக் கண்டித்து வருவது வரவேற்கத்தக்கது!
‘‘குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு’’ என்பது பழமொழி.
ஆனால், இந்தப் போதைகள் மட்டும்தான் நாட்டில், உலகில் உள்ளனவா?
- மத போதை
- ஜாதி போதை
- பதவி போதை
- இளைய (புதிய) தலைமுறையினரை வீழ்த்தும் சமூக வலைத்தளப் போதை.
பல பன்னாட்டு முதலாளிகளின் தகவல் தொழில்நுட்பத்தால் இளைஞர்களின் மூளைகளைத் தாக்கி, எந்நேரமும் அலைபேசி போதை, அடிமைகளாக்கும் நவீன போதை – இன்ஸ்ட்ராகிராம் போதைகள்!
இவற்றின் தாக்குதலால், பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைப் புகுத்தி, அவர்களை எல்லா வகை குற்றங்களையும், மிக லாவகமாகச் செய்ய வழி வகுக்கும், நம் கைகளைக் கொண்டே, நம் கண்களைக் குத்திக் கொள்ளும் ஒரு ‘கொடும் போதை!’
இவற்றை எப்படி எதிர்கொள்வது? புதுப்புதுச் சொற் றொடர்கள் Gen-Z தலைமுறை என்றெல்லாம் நாளும் உருவாகி வருகின்றன.
இதில், நல்லது – கெட்டது இரண்டும் கலந்த அதிவேக AI என்ற செயற்கை நுண்ணறிவுமூலம், ‘உண்மைகளைத் திரித்து’, எளிதில் எதையும் நம்ப வைத்து, ‘இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல்’ மீள முடியாத மாளாத துன்பம், துயரம், தொல்லையில் நம் சமுதாய மக்கள், நாட்டு மக்கள் சிக்கி சீரழிய வைக்கும் கொடுமை!
இந்தப் போதைகள்தான் எத்தனை! எத்தனை!!
நாட்டின் எதிர்காலம் எப்படியெல்லாம் ஒளிமிகுந்ததாக வேண்டியது – புதிய இருளால் கீழே தள்ளப்படும் வெங்கொடுமை!
இந்த நவீன போதைக் கருவியைப் பயன்படுத்தியே, மதங்களும், ஜாதிகளும், பாசிமும், உண்மை குடியாட்சி, அதன் போலி பிம்பத்தால் அதலபாதாளத்தில் தள்ளப்படும் வெட்கமும், வேதனையும் கலந்த ஒரு நிலை.
சுற்றுச்சூழல் பாழ்பட்டு, புவி வெப்பமயமாதல், காரணம், பருவ மழை தவறுதல் மற்றும் ‘எல்நினோ’ (El Nino), ‘சூப்பர் எல்நினோ’ (Super El Nino) என்று அச்சுறுத்தும் பல்வேறு கொடுமைகள், வக்கிர மனிதர்களின் அக்கிரமங்களால் திணிக்கப்படும் போர்க் கொடுமைகள், உலக ஏழை மக்களின் வாழ்வாதாரம் – பலி பீடத்தில் வைக்கப்பட்டு, நித்தம் நித்தம் செத்துப் பிழைக்கும் கொடுமைகள் போன்ற ‘‘புதிய ஆபத்துகள் – புதிய போதைகளை’’ எதிர்த்து, கட்சி, ஜாதி, மதங்கள், அரசியல் தாண்டி, சான்றோர்களும், தொண்டற உணர்வாளர்களும் இணைந்து, ஒரு பொது இயக்கத்தினைக் கட்டி, விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைச் செய்ய முன்வருதல் பற்றி சிந்திக்கவேண்டியது அவசிய அவசரமாகும்!
திராவிடர் கழகம் அதன் ஒருங்கிணைப்பாக இருக்கத் தயார்! (அவரவர் கட்சி, இயக்கம், கொள்கைகள் அப்படியே வைத்துக் கொள்வதற்குத் தடையில்லை) மக்களை, நாட்டைக் காக்க, எளிய முயற்சியை முன்னெடுக்க வரவேண்டும் என்ற நமது வேண்டுகோளை, மக்கள் முன்வைக்கிறோம்!
ஓட்டுக் கண்ணோட்டத்தைவிட, நாட்டுக் கண்ணோட்டமே முக்கியம்!
சிந்தியுங்கள், பிறகு செயலாற்ற முனைவோம்!
