“குழந்தைத் திருமணம்” என்ற கொடூரம்! (8) மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

4 Min Read
- Advertisement -

குழந்தைத் திருமணம் தடைச் சட்டம் 1929ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் 1978இல்தான் மாற்றங்கள் செய்யப்பட்டன. சாரதா சட்டம் (Child Marriage Restraint Act) குற்றமிழைத்தவர்களுக்கு கடுமையான தண்டனை ஏதும் வழங்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டு குழந்தைத் திருமண தடைச் சட்டம் பல மாறுதல்களுடன் நிறைவேற்றப்பட்டது. அதன்படி யாராவது அந்த சட்டத்தை மீறி குழந்தைத் திருமணம் செய்தால் அதற்குக் காரணமானவர்களுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யும் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏற்கெனவே நடத்தப்பட்ட குழந்தைத் திருமணம் நீக்கப்பட்டுவிடும். இதை கண்காணிக்க அரசு அதிகாரிகளை நியமிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசும் உடனடியாக சட்டத்தை அமல்படுத்தியது. அரசின் நடவடிக்கைகளால் குழந்தைத் திருமணம் பெருமளவில் தடைபட்டது.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாவட்ட சமூக நல அலுவலர் குழந்தைத் திருமணத் தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மாவட்டத்தில் எங்கேயாவது குழந்தைத் திருமணம் நடந்தால் அரசின் சார்பில் வழக்குத் தொடர்ந்து, அதில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தரும் பொறுப்பு அவர் வசம் ஒப்புவிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துத் தலைவர் தலைமையில், ஊர் பெரியவர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களைக் கொண்டு கண்காணிக்க அரசு ஏற்பாடு செய்தது. குழந்தைத் திருமணம் செய்ய யாராவது முயன்றால் அதைப்பற்றி யார் வேண்டுமானாலும் காவல்துறையிடம் புகார் செய்யலாம் என்றும், அதற்கான தண்டனை விவரங்கள் அடங்கிய அறிவிக்கைகள் செய்யப்பட்டன. ஆண், பெண் திருமண வயது என்று சுவரெழுத்து, கலை நிகழ்ச்சிகள், துண்டறிக்கைகள் மூலம் பரப்புரைகள் மேற்கொள்வது போன்ற தீவிர திட்டங்கள் மூலம் குழந்தைத் திருமணம் ஏறத்தாழக் கட்டுப்படுத்தப்பட்டது.

தந்தை பெரியாரும் மற்ற சீர்திருத்தவாதிகளும் கூறியபடி பெண்களின் கல்வி வாய்ப்புக்கள் அவர்களிடையே ஒரு பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதனால் குழந்தைத் திருமணம் என்ற கொடுமை நீங்கியது.

‘குழந்தைத் திருமண தடைச் சட்டம்’ நிறைவேறி வெற்றிகரமாக அமலான பின்னும் சில பார்ப்பனர்கள் அதை, தானே செய்து கொண்டதாகப் பெருமைப் பேசியதை நாம் அண்மையில் கேள்விப்பட்டோம். தமிழ்நாட்டின் ஆளுநர் ரவிதான் அந்தப் பெருமை அடித்துக் கொண்ட மேதாவி! சட்டத்திற்குப் புறம்பாக அப்படிச் செய்துள்ளோமே என்ற குற்ற மனப்பான்மை சிறிதும் இன்றி பெருமையாகப் பேசினார் அவர்.

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் இன்றும் இந்தப் பழக்கத்தைக் கைவிடவில்லை என்பது அவர்களுடைய ஒரு குடும்பத்தில் அண்மையில் நடந்ததாக வந்த செய்தியும் அதற்காக தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையும், அதை வெளிக்காட்டியது.

கட்டுரை, ஞாயிறு மலர்

இவ்வளவு கட்டுப்பாடுகளும், சட்டமும் இருந்தும் கூட பார்ப்பனர்கள் மட்டும் மாறவே மாட்டார்கள். தங்கள் ஸநாதனக் கருத்துகளையும் மாற்றிக் கொள்ளவும் மாட்டார்கள். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய ஆளுநரே சட்டத்தை மீறி ‘குழந்தைத் திருமணம்’ செய்து கொண்டதாகப் பெருமையாகவும், திமிராகவும் பேசுகிறார் என்றால் பார்ப்பனர்களின் அகம் பாவம் எப்படிப்பட்டது என்பதைக் கவனிக்க வேண்டும்!

பார்ப்பனர்கள் பூமியில் வாழும் கடவுள்கள். அவர்களுக்கு அரசன் உட்பட யாரும் தண்டனை கொடுக்க முடியாது. “இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர், மந்திரங்கள் பார்ப்பனருக்குக் கட்டுப்பட்டவை, பார்ப்பானே நமக்கு மேலான கடவுள்” (“தெய்வாதீனம் ஜகத்சர்வம், மந்த்ராதீனம் து தெய்வதம், தன் மந்த்ரம் பிரம்மனாந்தரம். இஸ்மத் பிரமனோ பிரபு” – ஜெயத் ரிக் வேதம் 62, B பிரிவு, 10ஆம் ஸ்லோகம்) கடவுளை மனிதர்கள் யாராவது தண்டிக்க முடியுமா? அதனால் பார்ப்பனர்களான பூ தேவர்களுக்கு, அவர்கள் எவ்வளவு பெரிய தவறிழைத் தாலும் யாரும் அவர்களுக்கு தண்டனை கொடுக்க முடியாது.

இதைத்தான் “பார்ப்பனப் பண்ணயம் கேட்பவர் இல்லை” என்றார்களோ! அந்த தைரியத்தில்தான் சட்டத்திற்கு எதிராக குழந்தைத் திருமணம் செய்து கொண்டு அதை பெருமையாகப் பார்ப்பனர்கள் ஏதோ செயற்கரிய சாதனை செய்தது போல் சொல்லிக் கொள்கிறார்கள்.

பூமியின் கடவுள்களான பார்ப்பனர்களுக்கு தண்டனைகள் ஏதும் கிடையாது என்றும், அவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அரசனுக்குக் கூட கிடையாது என்ற நியதியை பார்ப்பனர்கள் கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் புராண, இதிகாசங்களின் பெயரால் சமூகத்தில் நிலைநாட்டிவிட்டனர். சமூகத்தில் உயர்ந்தவர்கள் ஆகவும், மரியாதைக்குரியவர்களாகவும், பெரியவர்களாகவும் மற்ற பெரும்பான்மை மக்களிடம் “மூளைச்சலவை” செய்து அதில் வெற்றியும் பெற்று விட்டனர். கல்வியறிவற்றவர்களும், சுயசிந்தனை அற்ற பெரும்பான்மை மக்களும் “பெரியவர் செய்தால் பெருமாள் செய்தது மாதிரி” என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டதால் பார்ப்பனர்கள் குற்றங்கள் செய்தாலும் தண்டனையில்லாமல் தப்பிப்பதைப் கண்டும் காணாமல் இருக்கப் பழகிக் கொண்டனர்.

பார்ப்பனர்கள் சமூகத்தின் உயர்ந்த அங்கமாக ஆண்ட அரசர்களிடம் தங்களை நிலைநாட்டிக் கொண்டதன் விளைவாக கடவுளுக்கும், மக்களுக்கும் நடுவே இடைத் தரகர்கள் ஆக மாறிப் போயினர். நாளடைவில் “ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக” மாறிப் போயினர். அதற்கு தங்களின் புராணங்களையும், இதிகாசங்களையும், கடவுள்களையும் கற்பனை ஆதாரங்களையும் வழிகாட்டிகளாக சமூகத்தில் படிப்பறிவில்லாத பாமர மக்களிடம் நிலைநாட்டி விட்டனர். அரசன் முதல் ஆண்டி வரை பார்ப்பனர்களே கண்ணுக்கு தெரிந்த பூமியில் வாழும் “கடவுள்களாக” (?) நாளடைவில் மாறிப் போயினர். இந்தக் கொடுமை அவர்களின் வேத (இந்து) மதத்தின் மூலமும், அவர்களின் மொழியின் (சமஸ்கிருதம்) மூலமும், அவர்களின் சமூக அமைப்பின் (வருண – ஜாதிய) மூலமும் பெரும்பான்மை மக்களின் மேல் திணிக்கப்பட்டன. இந்தக் கொடுமையை மாற்ற முயன்றவர்கள் ஈவு, இரக்கமின்றி அழிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இந்தச் சக்தியைப் புரிந்து கொள்ளாத வெளிநாட்டிலிருந்து வந்த ஆங்கிலேயர்கள் பார்ப்பனர்களுக்கு “ஆமாம் சாமி” போட்டனர். ஆனால் நாளடைவில் பார்ப்பனரின் சதியின், சாயம் வெளுத்துப் போனது. ‘அனைத்து மக்களும் சமம்’ என்று அவர்கள் ஆரம்பித்தவுடன் பார்ப்பனர்கள் அவர்களை எதிர்க்கத் துவங்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(நிறைவு)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *