“குழந்தைத் திருமணம்” என்ற கொடூரம்! (2) -மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

5 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

குழந்தைத் திருமணம் என்ற கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல்லாயிரக்கணக்கில் இருந்தனர். இந்து மதத்தில் மனுதர்மமும், வேத மதத்தின் சாஸ்திர, புராணங்களும் குழந்தை மணத்தை ஒரு கட்டாயக் கடமையாக நிலைநாட்டியது. பெண்களின் ஒழுக்கம் காக்கப்பட வேண்டும் என்றால் குழந்தைத் திருமணம் கட்டாயத் தேவை என்று ஸநாதனப் பார்ப்பனர்கள் சமூகத்தில் சண்டித்தனம் செய்தனர். இந்தக் கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தே தீர வேண்டும் என்று அதற்கு எதிர்ப்பான குழுக்கள் பேசத் தொடங்கின. இதைப் பற்றிய விவாதங்கள் சட்ட மன்றங்களில் நடந்தன.

சில அறிஞர்களும், புரட்சி எண்ணம் கொண்டவர்களும் குழந்தைத் திருமண கொடுமையை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகக் குரல் எழுப்பிய வண்ணமே இருந்தனர். ஆனால், ஸநாதனப் பார்ப்பனர்கள் அனைவரும் ஒரே குரலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆங்கிலேய அரசாங்கத்தின் நிர்வாகம் முழுவதும் பார்ப்பனர்களே நிரம்பியிருந்ததால் ஆங்கிலேயத் தலைமையால் அவர்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த ஸநாதனப் பார்ப்பனக் கூட்டம் எந்த முற்போக்குத் திட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், அவை இந்துப் பண்பாட்டுக்கு எதிரானது, மதத்திற்கு எதிரானது என்று பெருங் கூச்சல் இடுவது ஒரு பொதுவான நிகழ்வானது. வெளிநாட்டிலிருந்து வந்த வெள்ளையக்காரர்கள் இந்தப் பார்ப்பனக் கூட்டத்தின் எதிர்ப்பால் இந்திய மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தில் துணிவோடு எந்த முற்போக்கு எண்ணங்களையும் அமலாக்கத் தயங்கினர்.

இது பார்ப்பனக் கூட்டத்திற்கு நல்வாய்ப்பாக அமைந்தது. ‘சதி’ ஒழிப்புக்கும் சீர்திருத்தவாதிகள் பல ஆண்டுகள் போராட வேண்டி வந்தது. பெண்கள் தொடர்பான அனைத்து முற்போக்கு எண்ணங்களும் நடைமுறைப்படுத்துவதென்பது ஸநாதன பார்ப்பனர்களிடம் பெரும் எதிர்ப்பையே உருவாக்கியது. ‘சதி ஒழிப்பு’, ‘பெண் கல்வி’, ‘விதவைத் திருமணம்’, ‘குழந்தைத் திருமணம் ஒழிப்பு’ போன்ற அனைத்து பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும்போதும் அரசாங்கம் பலத்த எதிர்ப்பையே சந்திக்க வேண்டியிருந்தது. மனுதர்ம வழிகாட்டுதலின்படி “சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்காதே” என்ற நெறிமுறையை மீறி, அவர்களுக்கும் கீழ்நிலையில் இருந்த அவர்ணஸ்தர்களான பெண்களுக்குக் கொடுக்க ஸநாதன பார்ப்பனர்கள் ஆயத்தமாக இல்லை.

குழந்தைத் திருமணங்களை ஒழிக்க வேண்டும் என்று சமூக சீர்திருத்தவாதிகள் ஒருபுறம் போராடினாலும், சங்கராச்சாரியார்களும், ஸநாதனப் பார்ப்பனர்களும் கடுமையாக எதிர்த்தனர். எஸ்.எஸ்.ஆச்சாரியா என்ற பெரிய அறிவாளியாகப் போற்றப்பட்ட பார்ப்பனர் குழந்தை பருவத்தில் திருமணம் செய்யாமல் “ருது” ஆகும் வரை விட்டால் அவர்கள் எளிதாகக் கற்பிழந்து விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்வார். சங்கராச்சாரிகளோ அதே கருத்தை பல விதங்களிலும் வெளிப்படுத்தினர். ஸநாதனப் பார்ப்பனர்களும், லவ்கீகப் பார்ப்பனர்களும் ஒரே குரலில் கூப்பாடு போட்டனர். ஆங்கிலேய அரசு இந்தக் கூப்பாடுகளால் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறியது. சீர்திருத்தவாதிகளும் ஓய்ந்தார்களில்லை. தங்கள் முயற்சியில் சற்றும் தளரவில்லை. அவர்களும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர் என்பது வரலாறு.

புனேவைச் சேர்ந்த ரானடே ஒரு பார்ப்பனர். ஆனாலும், ‘சதி’யையே எதிர்த்த முற்போக்கு எண்ணங்கொண்ட வங்காளப் பார்ப்பனர் போன்று குழந்தைத் திருமணங்களை எதிர்த்தவர். அதே நேரத்தில் அதைப் பற்றி பேசி பலத்த எதிர்ப்பை பார்ப்பனர்களிடம் இருந்து பெற்றவர். கடைசியில் அந்த எதிர்ப்பை நேரடியாகச் சந்திக்க முடியாமல், “பெற்றோர்கள் தாமாகவே முன்வந்து, பெண் குழந்தைகளின் திருமண வயதை உயர்த்தித்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கருத்தைத் தெரிவித்தார்.

அதற்கே சங்கராச்சாரிகளும், வைதீகப் பார்ப்பனர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சங்கராச்சாரிகள் “இந்து மதத்திலும், அதன் தர்ம சாஸ்திரங்களிலும் அதற்கு இடமில்லை” என்று உறுதிபடக் கூறினர். பார்ப்பனர்கள் இது போன்ற பேச்சுகளை ஆரம்பத்திலேயே கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும் என்று வாதாடினர். அதனால் குழந்தைத் திருமணம் என்பது பேச்சளவில் நின்று போனது.

குழந்தைத் திருமணத்தை எதிர்த்த ஸநாதன சித்தவன் பார்ப்பனரான பால கங்காதர திலகர் குழந்தைத் திருமண தடையைப் பற்றி பேச்சு வந்த பொழுதெல்லாம் அதைக் கடுமையாக எதிர்த்தார். ஆங்கிலேய அரசாங்கம் நம் மத உரிமைகளில், நம்பிக்கைகளில் தலையிடுவதாகக் கூப்பாடு போட்டார். (ஏற்கெனவே ‘சதி’ ஒழிப்பை எதிர்த்தவர். பம்பாயில் பிளேக் நோயால் பல்லாயிரம் பேர் மாண்டபோது ஆங்கிலேய அரசு எலிகள் ஒழிப்பு நடவடிக்கையை எடுத்த உடனே “எலிகள் பிள்ளையாரின் வாகனம், அதனால் அதை ஒழிப்பது என்பது மிளேச்சர்களின் அரசாங்கம் நம் இந்து மக்கள் மேல் தொடுத்த போர்” என்று மக்கள் மனதில் அரசின் மேல் வெறுப்பை ஏற்படுத்தியவர் திலகர். அவர் தூண்டுதலால் அரசாங்கம் பிளேக் நோயைக் கட்டுப்படுத்த நியமித்த வால்டர் சார்லஸ் ரேண்ட், அவர் பாதுகாவலர் எகர்டன், அயரஸ்ட் என்ற இரண்டு ‘பிளேக்’ அதிகாரிகளை இந்து மத வெறியர்கள்-செப்பாக்கர் சகோதரர்கள் சுட்டுக் கொன்றனர்.) திலகர் அதோடு நிற்கவில்லை; குழந்தைத் திருமணங்களை ஆதரித்து பல பரப்புரைகளை நிகழ்த்தினார். தன் மராத்திப் பத்திரிகையான ‘கேசரி’யிலும், ஆங்கிலப் பத்திரிகையான ‘மராட்டா’ பத்திரிகையிலும் குழந்தைத் திருமணங்களை ஆதரித்தும், அதன் எதிர்ப்பாளர்களைக் கண்டித்தும் பல கட்டுரைகள் எழுதினார்.

“பெஹ்ரம்ஜி மலபாரி” என்பவர் குஜராத்தைச் சேர்ந்த ஒரு பார்சிக்காரர். சிறந்த கவிஞர். சீர்திருத்த முற்போக்கு எண்ணமுடைய கவிஞர். குழந்தைத் திருமணத்தைத் தடுக்க வேண்டும் என்பதில் முனைப்பாக நின்றவர். ஆங்கிலேய அரசுக்கு குழந்தைத் திருமணத்திற்கு எதிராக கண்டித்து கடிதம் எழுதினார். அதில், அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் செய்து வைக்கும் நிலை சமூகத்தில் மிகவும் கொடுமையானது என்றும், கட்டாயம் தடுக்கப்பட வேண்டும் என்றும் 1880ஆம் ஆண்டே எழுதினார்.

அவர் கடிதத்திற்கு எதிர் வினையாக வைஸ்ராய் ரிப்பன் ஓர் அறிக்கை அளிக்குமாறு பணித்தார். மலபாரியும் குழந்தைத் திருமணம் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் தீர ஆய்ந்து 1884ஆம் ஆண்டு வைஸ்ராய் ரிப்பன் பிரபுவிடம் ஓர் அறிக்கை அளித்தார். அதில் குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் கொடுமைகளையும், அதைக் கட்டாயம் தடுக்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அறிக்கை கொடுத்ததோடு நில்லாமல், இங்கிலாந்திற்கே சென்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அதைப் பற்றி பேசி ஆதரவு திரட்டினார். இப்படி அவர் இந்த பிரச்சினையை கையில் எடுத்தது போலவே, மேலும் பல சீர்திருத்தவாதிகளும் முயன்றனர்.

பெஹ்ரம்ஜி மலபாரி, குழந்தைத் திருமணத்தை எதிர்த்து பல முயற்சிகளை செய்து கொண்டிருந்த வேளையில், பால கங்காதர திலகர் (ஸநாதன சித்பவன் பார்ப்பனர்) அவரை எதிர்த்து கடுமையாக கருத்துகளை வெளியிட்டார். இவரே ஒரு பார்சிக்காரர். இவருக்கும் இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு? இவர் எப்படி இந்து மத பிரச்சினைகளில் தலையிடலாம்? என்று தன் ‘கேசரி’ பத்திரிகையில் எழுதினார்.

‘மராட்டா’ என்ற தன் ஆங்கிலப் பத்திரிகையில், ஆங்கிலேயர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தலையங்கம் பகுதியில் தொடர்ந்து குழந்தைத் திருமணத்தை ஆதரித்தும், “அவை இந்து மதக் கட்டாயக் கடமை என்றும், நமது சமூகப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை ஒழுங்கு படுத்தும் வேலையில் அரசாங்கம் இறங்குவதை நாங்கள் விரும்பவில்லை” என்று எழுதினார்.

(இன்னும் நிறைவடையவில்லை)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *